நெல்லை அருகே வியாபாரியிடம் நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

போலீஸ் விசாரணை

நெல்லை டவுன் பகுதியில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் சுஷாந்த். இவர் கேரளாவிலுள்ள கடைகளுக்குச் சென்று தங்க நகைகளை வாங்கி வந்து தனது கடையில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி இன்று தனது காரில் அவர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

நான்குவழிச் சாலையில் அவரது காருக்கு முன்பாக ஒரு கார் சென்றிருக்கிறது. அதேபோல பின்னாலும் ஒரு கார் வந்திருக்கிறது. அவர் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலம் அருகே அவரது கார் சென்றபோது, முன்னால் சென்ற கார் அவரது காரை மறித்தபடி நின்றிருக்கிறது.

அதனால் சுஷாந்த் காரை நிருத்தியிருக்கிறார். அப்போது பின்னால் வந்த காரிலிருந்து முகமூடி அணிந்த கும்பல் கீழிறங்கி அவரது காருக்குள் வந்திருக்கிறது. அவர் எதிர்பாராத வகையில் மிளகாய்ப் பொடியைத் தூவியிருக்கிறது. அதில் சுஷாந்த் நிலைகுலைந்த நேரத்தில், கம்பியால் காரின் கண்ணாடியை உடைத்ததுடன், அவரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

பின்னர், காரிலிருந்த நகைகள், ரொக்கப் பணத்தைக் கத்திமுனையில் பறித்திருக்கிறது அந்தக் கும்பல். அவற்றின் மொத்த மதிப்பு 15 கோடி ரூபாய் இருக்கும் என சுஷாந்த் தெரிவித்திருக்கிறார். நான்குவழிச் சாலையில் நடந்த இந்தத் துணிகரத் திருட்டை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்தபோதிலும், ஒருவரும் உதவிக்கு முன்வரவில்லை.

கடத்தப்பட்ட கார்

இந்த நிலையில், அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு உதவிக்கு வந்திருக்கிறார். அவருடன் நடத்துனரும் வந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்ப முயன்றிருக்கின்றனர். அந்த நேரத்தில் நகை வியாபாரியான சுஷாந்தை, தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்ட அந்தக் கும்பல், அவரது காரையும் கடத்திச் சென்றிருக்கிறது.

சுஷாந்த் வசமிருந்த பணம், நகைகளைப் பறித்துக் கொண்டு நாகர்கோவில் சாலையில் சென்ற அந்தக் கும்பல், நாங்குநேரி சுங்கச்சாவடி வழியாகச் செல்லாமல் மாற்று வழியில் சென்றிருக்கிறது. சுங்கச்சாவடி வழியாகச் சென்றால் சிசிடிவி கேமராவில் பதிவாகிவிடும் என்பதால், அருகிலுள்ள கிராமத்து சாலையின் வழியாக சுங்கச்சாவடியைக் கடந்திருக்கிறது. பின்னர் காரை நிறுத்திய அந்த கும்பல், காரையும் சுஷாந்தையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியிருக்கிறது.

சுஷாந்திடம் விசாரணை நடத்தும் போலீஸார்

இந்தக் கொள்ளை குறித்த தகவல் கிடைத்ததும் நாங்குநேரி காவல் ஆய்வாளர் செல்வி, மூன்றடைப்பு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளைச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட சுஷாந்த் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவிப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க டி.எஸ்.பி ராஜூ தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.