“மாநகர் மாவட்டத் தலைவருடன் பணியாற்ற விரும்பவில்லை, எனக்கு வழங்கிய துணைத் தலைவர் பதவி வேண்டாம்” என்று பா.ஜ.க மாநகராட்சி கவுன்சிலர் அறிவித்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே வெற்றிபெற்ற பா.ஜ.க-வின் ஒரே கவுன்சிலரான பூமா, `பா.ஜ.க-வின் மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்’ என்று, அவருக்கே கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், “தாங்கள் என்னை மாவட்டத் துணைத் தலைவராக அறிவித்ததை அறிவேன். மகிழ்ச்சியே. ஆனல், தங்களின் செயல்பாடும், சுயநலப்போக்கும் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாமல் அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வதையும் அறிவேன். மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் சீரிய செயல்பாட்டாலும், உண்மையான போக்காலும் தமிழகத்தில் தலை நிமிர்ந்து வரும் பா.ஜ.க, தங்களைப் போன்ற ஒருசில சுயநலவாதிகளின் செயலால் வீழ்ச்சி பாதையில் செல்வதையும் நான் அறிவேன்.

பூமா அனுப்பியிருக்கும் கடிதம்

அதற்கு உதாராணம் மதுரை மாநகரே… சுயநலத்தோடும் கட்சி விசுவாசமின்றியும் செயல்படும் தங்களுடன் இணைந்து செயல்படுவது கட்சிக்கு நான் செய்யும் இழிவாகும். ஆகவே, தாங்கள் அறிவித்த மாவட்டத் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். எனினும், கட்சியின் அங்கீகாரத்துடன், மாநிலத் தலைவரின் ஆதரவோடு மாமன்ற உறுப்பினர் பணியை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்குச் சேவையாற்றுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரனிடம் கேட்டபோது, “ஏன், என்மீது இப்படி குற்றச்சாட்டு வைத்து கடிதம் அனுப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை. நான் 25 வருடங்களாகக் கட்சியில் பணியாற்றி வருகிறேன். இதுவரை யாரும் என்மீது எந்தப் புகாரும் சொன்னதில்லை. கவுன்சிலர் பூமா கட்சியில் மாவட்டப் பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்தார். இங்கு அனைத்து சமூக மக்களும் இடம்பெறும் வகையில் கட்சி பொறுப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதால், அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கினோம். அதை ஏற்றுக்கொள்ளாமல் இப்படி அவதூறு பரப்புகிறார். கட்சி பொறுப்புகளை நானாக நிரப்ப முடியாது. அதற்கென்று மாவட்ட, மாநில அளவில் குழு இருக்கிறது.

மகா சுசீந்திரன்

அவருக்காக மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இரண்டு முறை ஆர்பாட்டம் நடத்தினோம். இப்போது அவர் வேறு எங்கோ செல்ல முடிவெடுத்துவிட்டதுபோல் தெரிகிறது, அதனால் முன்கூட்டியே இப்படி கதையைப் பரப்புகிறார். இரண்டு நாள்களுக்கு முன்புகூட கட்சி அலுவலகத்தில் அவரும், அவர் கணவரும் நன்றாகத்தான் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியே என்மீது குற்றச்சாட்டு இருந்தால் அதை கட்சித் தலைமைக்கு புகாராக கொடுத்து விசாரிக்கச் சொல்லலாம். அதைவிட்டு கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாட்ஸ்அப்பில் பரப்புகிறார். இந்த விஷயம் கேள்விப்பட்டு தலைமையிலிருந்து எனக்கு ஆறுதல் சொன்னார்கள். இதுபோல் தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவர்களைப் பற்றிய உண்மைகளை நானும் பேசுவேன்” என்றார்.

இது குறித்து கவுன்சிலர் பூமாவிடம் கேட்டோம்… கணவர் ஸ்ரீ முருகனுடன் சேர்ந்து பேசியவர், “மாநகர மாவட்டத் தலைவர் சுசீந்திரன், கட்சி நலனை விட்டுவிட்டு தன்னை முன்னிலைப்படுத்துவதிலயே அக்கறை காட்டுகிறார். அது மட்டுமின்றி மதுரை மாநகராட்சியில் வெற்றிபெற்ற ஒரே கவுன்சிலர் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் பேசுவார். நாங்கள் கட்சியில் பதவியெல்லாம் கேட்கவில்லை.

கவுன்சிலர் பூமா

இருபது வருடமாக கட்சியில் உழைத்து வருகிறோம். எந்தளவுக்கு மக்கள் பணியாற்றுகிறோம் என்பதை எங்கள் பகுதி மக்களிடம் கேட்டால் சொல்வார்கள். ஆனால், மாநகரத் தலைவர் கட்சிக்கு விரோதமாக நடந்துகொள்கிறார். அதனால், அவர் பேச்சை இனி கேட்பதில்லை என்று முடிவுசெய்திருக்கிறோம். பிரதமர் மோடி, தலைவர் அண்ணாமலை வழியில் மாநகராட்சியில் செயல்படுவேன், தலைமை இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.