பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை விற்பனை செய்துவரும் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், குடிநீர் விற்பனையில் ஈடுபடவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 500 மி.லி, 1 லிட்டர் என தண்ணீர் பாட்டில்கள்… என நாளொன்றுக்கு 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆவின்

இந்த நிலையில், தி.மு.க-வினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என தி.மு.க அரசை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவுசெய்திருக்கிறது. 2014-2015-ம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவித்தபோது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, தி.மு.க-வினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.

அண்ணாமலை

குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்… உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.