“சவுதி அரேபியாவுக்கு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வதற்காகச் சென்ற என்னுடைய கணவரை, போதைப்பொருள் கடத்தி வந்திருப்பதாக விமான நிலையத்தில்வைத்து சவுதி அரேபியா போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவரை வெளிநாட்டுக்குப் பணம் வாங்கிக்கொண்டு அனுப்பிய ஏஜென்ட்டுகள் திட்டமிட்டு கருவாடு பார்சல் எனக் கூறி, அவரிடம் கொடுத்தனுப்பிய பார்சலில்தான் அந்த போதைப்பொருள் இருந்திருக்கிறது. அதற்கும் என் கணவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரை மீட்க உதவி செய்யுங்கள்” என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சரத்குமார் என்பவரின் மனைவி கிரிஜா கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர்மல்க மனு அளித்தார்.

சவுதி போலீஸிடம் சிக்கிய சரத்குமார்

இது குறித்து கிரிஜாவிடம் நாம் பேசினோம். “2021-ம் ஆண்டுதான் எங்களுக்குத் திருமணம் முடிந்தது. என் கணவர் விவசாயம் செய்து வந்தார். தண்ணீர் தட்டுப்பாடல் விவசாயம் செய்ய முடியாமல் வருமானமின்றி தவித்தோம். அவர் ஏற்கெனவே வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், குடும்ப கஷ்டத்தை சமாளிக்க மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லவதற்காக முயற்சி செய்தார். அப்போது ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்ட்டான கேரளா மாநிலம், மலப்புறத்தைச் சேர்ந்த ரஷித் என்பவரிடம் என் கணவரை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். அவர் ரூ.90,000 வாங்கிக்கொண்டு சவுதி அரேபியாவுக்கு பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கான விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை ஏற்பாடு செய்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். முன்னதாக பெங்களூரு விமான நிலையத்துக்கு என் கணவரை வழியனுப்பச் சென்ற அப்துல் ரகுமான், ஏஜென்ட் ரஷித், ஆகியோர் ஒரு பார்சலை என் கணவரிடம் கொடுத்திருக்கின்றனர்.

அதில் ராமநாதபுரம் கருவாடு இருப்பதாகவும், அந்த பார்சலை சவுதி அரேபியா விமான நிலையத்துக்குச் சென்றவுடன் தங்களுக்கு வேண்டியவர்கள் வந்து பெற்றுக் கொள்வார்கள் எனக் கொடுத்தனுப்பியிருக்கின்றனர்.

அந்த பார்சலில் கருவாடு வாசனை வந்ததால் கருவாடு இருப்பதாக நம்பி அவரும் வாங்கிச் சென்றிருக்கிறார். சவுதி அரேபியா விமான நிலையத்துக்குச் சென்றவுடன், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் என் கணவரின் கைப்பைகளை சோதனை செய்திருக்கின்றனர். அதிலிருந்த பார்சல் குறித்து அதிகாரிகள் கேட்டதற்கு, ஏஜென்ட்டுகள் கொடுத்தனுப்பிய கருவாடு எனக் கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அதில் போதை மாத்திரைகள் இருந்திருக்கின்றனர். `அது என்னுடையது அல்ல’ என என்னுடைய கணவர் எவ்வளவோ கதறியும், கேட்காமல் அவரை சவுதி அரேபியா போலீஸாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்திருக்கின்றனர்.

சரத்குமாரிடம் கொடுத்தனுப்பிய பார்சல்

அதேபோல் அந்த பார்சலை வாங்க விமான நிலையத்தில் காத்திருந்த கேரளாவைச் சேர்ந்த இரு நபர்களையும் கைதுசெய்திருக்கின்றனர். போலீஸாரிடம் சிக்கிய உடனே என் கணவர் என்னைத் தொடர்புகொண்டு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி, ஏஜென்ட்டுகள் தன்னை ஏமாற்றி போலீஸில் மாட்டிவிட்டிருப்பதாகவும், செய்யாத குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறி கதறி அழுதார்.

இது குறித்து ஏர்வாடியிலுள்ள அப்துல் ரகுமானிடம் சென்று கேட்டபோது, கேரளாவைச் சேர்ந்த ஏஜென்ட் ரஷீத்தான் பார்சலைக் கொடுத்தார். அதில் என்ன இருந்தது என எனக்குத் தெரியாது என நழுவினார். கேரளாவிலுள்ள ஏஜென்ட் ரஷீத் செல்போன் எண்னுக்குத் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. என் கணவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. குடும்ப வறுமையால்தான் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவுக்கே வந்தார். அவர் வெளிநாடு சென்றபோது நான் நான்கு மாதங்கள் கர்ப்பிணியாக இருந்தேன். நிறைமாத கர்ப்பிணியாக, என் கணவரை மீட்பதற்காக போராடி வந்தேன். கடந்த டிசம்பர் மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

அதன் காரணமாக, என்னால் வெளியில் அலைய முடியவில்லை. எனவே இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு வெளிநாடுவாழ் மக்கள் நலத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தேன். அதன்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டு ஏர்வாடி போலீஸார் அப்துல் ரகுமானை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் தனக்கும் அந்த போதைப்பொருள் பார்சலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என போலீஸாரிடம் கூறினார். போலீஸார் கேட்ட பல கேள்விகளுக்கு அப்துல் ரகுமானால் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தாமல் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்ட புகாரை ஏற்று, இன்று என்னை அலுவலகத்துக்கு நேரில் அழைத்ததன்பேரில் வந்து, ஆட்சியரைச் சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறினேன். ஆட்சியரும் என் கணவரை மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளித்திருக்கிறார். என் கணவரை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள், எனக்கு அதுபோதும்” எனக் கைகூப்பி கண்ணில் நீர் ததும்பக் கூறினார்.

அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.