வேலூர் சரகக் காவல்துறையின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம், காட்பாடியிலுள்ள சன்பீம் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) சங்கர் தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர், ‘‘போதைப்பொருள்களை எதிர்க்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் நபர்கள்மீது காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ‘போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்’ என பல்வேறு நிலையில் முதலமைச்சர் எடுத்துரைத்து வருகிறார். அதை செயலாக்க மாணவ-மாணவிகளும், காவல்துறையினரும் தங்கள் பங்களிப்பை வழங்கிட வேண்டும்.

சமூகத்தில், போதைப்பொருள் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. மாணவ-மாணவிகள் போதைப்பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. ஒரு பொருளின் தேவை குறைந்தால் மட்டுமே அதனுடைய விநியோகம் கட்டுப்படுத்தப்படும்.

மாணவர்கள் மத்தியில்பேசிய ஏ.டி.ஜி.பி சங்கர்

எனவே, ‘போதைப்பொருளை தொடமாட்டேன்’ என நாம் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும். காவல்துறையினரும் தங்களுடைய கடமை, அதாவது போதைப்பொருள் விற்பனை செய்பவர்களைக் கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு காவல்துறை சார்பில், இதுவரை 4 கட்டங்களாகப் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில், சுமார் ஒவ்வொரு போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின்போதும், பல ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சுமார் 25,000 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவற்றை விற்பனை செய்த அல்லது கொண்டு சென்ற 13,000 நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

எனவே, போதைப்பொருள்களை ஒழிக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் போதைப்பொருளுக்கெதிரான குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறைச் சார்ந்த ஒருவர் இருக்க வேண்டும். தங்கள் பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு அருகாமையில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஏ.டி.ஜி.பி சங்கர்

எதிர்கால நலனை கருத்தில்கொண்டு போதைப்பொருளுக்கெதிராக இன்றுமுதல் நாம் போர்த் தொடுக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புக்கெதிரான நடவடிக்கைக்கு அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’’ என்றார். இந்தக் கூட்டத்தில், வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, எஸ்.பி-க்கள் வேலூர் ராஜேஸ்கண்ணன், ராணிப்பேட்டை கிரண் ஸ்ருதி, திருப்பத்தூர் பாலகிருஷ்ணன், திருவண்ணாமலை கார்த்திகேயன் மற்றும் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500 மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.