கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பழவிளைப் பகுதியில் நடந்துச் சென்ற ஓய்வு பெற்ற பெண் கல்வி அதிகாரியிடம், இரண்டரை பவுன் நகையை பைக்கில் சென்ற ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீஸார், நாகர்கோவில் அருகே உள்ள கட்டையன் விளையைச் சேர்ந்த சாந்தகுமார் எனபவர்தான், இந்த வழிப்பறியில் ஈடுபட்டிருந்தார் என்பதை உறுதிபடுத்தியிருக்கின்றனர்,

சாந்த குமார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். கட்டையன் விளைப் பகுதியைச் சேர்ந்தவர் சாந்த குமார் (52) மின்சார வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். சாந்தகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், சீட்டு விளையாட்டு போன்றவைகளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய மாதச் சம்பளம் மட்டுமல்லாது, பல இடங்களில் கடன் வாங்கியும் செலவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இந்த நிலையில், பணத்தேவைக்காக அவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகப் போலீஸாருக்கு தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, சாந்தகுமாரை போலீஸார் தேடி வந்தனர். கட்டையன்விளை பகுதியில் 6 பேருடன் சேர்ந்து சீட்டு விளையாட்டில் சாந்தகுமார் ஈடுபட்டிருந்ததாக போலீஸாருக்கு இன்று தகவல் கிடைத்தது. கட்டையன்விளை பகுதிக்குச் சென்று சாந்தகுமாரை கைதுசெய்ய போலீஸார் முயன்றிருக்கின்றனர். அப்போது, சாந்தகுமார் மறைத்து வைத்திருந்த தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை வாயில் போட்டு விழுங்கியிருக்கிறார்,

அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக அவரது வாயில் இருந்து சில தென்னை மாத்திரைகளை வெளியே எடுத்திருக்கின்றனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சாந்தகுமார் உயிரிழந்தார். அவர் சாப்பிட்டதில் ஒரு மாத்திதை உள்ளே சென்றதால் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

போலீஸ் பிடித்ததால் தற்கொலை செய்துகொண்ட மின்வாரிய ஊழியர் சாந்தகுமார்

செயின் பறிப்பு வழக்கில் சிக்கிய மின்வாரிய ஊழியர் போலீஸாரிடம் சிக்கியதும், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே மின்வாரிய ஊழியர் செயின்பறிப்பில் ஈடுபட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என உறவினர்கள் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர் அதே சமயம் சம்பவம் நடந்த பகுதியின் சி.சி.டி.வி காட்சிகள், செல்போன் டவர் லொக்கேஷன் ஆகிய ஆதாரங்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.