பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வந்தபோது, துணை ராணுவப் படையினரால் நீதிமன்ற வளாகத்திலேயே கைதுசெய்யப்பட்டார். இம்ரான் கானின் கைது, அவரின் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மோடி – பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி

அதேசமயம் இம்ரான் கான் மீதான இத்தகைய நடவடிக்கைக்கு “தேசிய கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதன் காரணமாக இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டார்” என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சனானுல்லா விளக்கமளித்தார். இவ்வாறு பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகையில், பாகிஸ்தான் நடிகை ஒருவர் பிரதமர் மோடிக்கெதிராக புகாரளிக்க வேண்டும் எனக் கூறியிருப்பதும், அவருக்கு டெல்லி போலீஸின் பதிலும் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

முன்னதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி (Sehar Shinwari) என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி காவல்துறையின் ஆன்லைன் முகவரி யாருக்காவது தெரியுமா… எனது நாடான பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பும் இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய உளவு அமைப்பின் (RAW) மீது நான் புகாரளிக்க வேண்டும். இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடிகையின் ட்வீட்டுக்கு ட்விட்டரில் பதிலளித்த டெல்லி போலீஸ், “நாங்கள் பயந்துவிட்டோம். பாகிஸ்தானில் இன்னும் நாங்கள் அதிகாரத்தைப் பெறவில்லை. ஆனால், நாங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். உங்கள் நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் எப்படி ட்வீட் செய்கிறீர்கள்” எனக் கேட்டிருப்பது பலரிடையே சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.