பேரமைதி நிலவும் காட்டுக்குள், எதிரொலிகள் (Echo) அடங்க வெகுநேரம் எடுக்கும் அளவுக்கு,

“வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு

மூவர் டிஸ்மிஸை வாபஸ் வாங்கு.

பழி வாங்காதே பழி வாங்காதே

தொழிலாளிகளைப் பழி வாங்காதே.

திரும்பப் பெறு திரும்பப் பெறு

டிராலி வண்டியை திரும்பப் பெறு”

என 1968ஆம் ஆண்டில் விடிந்தும் விடியாத ஒருநாள் காலை 6.45மணி அளவில், எஸ்டேட் அலுவலகத்தை நோக்கி, நாலுமுக்கு/மணிமுத்தாறு எஸ்டேட்  தொழிலாளர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாய் சென்றார்கள்.  

தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவும், தேயிலையை கூடுதலாக பறிக்கவைக்கவும்   பிபிடிசி அவ்வப்போது புதிய முறைகளை எஸ்டேட்டில் அறிமுகம் செய்யும். எஸ்டேட்டுக்கு புதிதாக வரும் மாஞ்சோலை குரூப் மேனேஜர் அல்லது எஸ்டேட் மேனேஜர்கள் தங்களது அனுபவத்தில் சரியெனக்கருதும் புதிய திட்டங்களைக்  கொண்டுவருவார்கள். அவ்வாறு கொண்டுவரப்பட்டவைகளில் பெரிதும் சிக்கலை உண்டுபண்ணாத பல திட்டங்கள் தற்போது வரையிலும் நீடித்துவருகிறது. ஆனால் அவற்றில் சில, நடைமுறை சிக்கல்கள்/ தொழிலாளர்கள் எதிர்ப்பு காரணமாக கொஞ்ச காலத்திலேயே நிறுத்தப்பட்டது. 

போராட்டப் பாதை

வரிசையாக நடப்பட்டிருக்கும் தேயிலைச்செடிகளுக்கு நடுவே ஒரு ஆள் செல்லும் அளவுக்கு இடமிருக்கும். இரண்டு தேயிலைச்செடிகளுக்கு நடுவேயிருக்கும் இடத்திற்கு “நிறை/சால்” என்று பெயர். ஒரு தொழிலாளி தனது இருபக்கத்திலும் இருக்கும் செடிகளில் தேயிலை பறிக்கவேண்டும்.

தேயிலை பறிக்கும் தொழிலாளிகள், வேலை ஆரம்பிக்கும் முன்னர், சணல் சாக்கை முதுகு பக்கத்தில் வைத்து அதன் ஒரு விளிம்பை இடுப்பைச்சுற்றிலும் கயிறால் கட்டி, மற்றொரு விளிம்பை தலையில் தொங்கபோட்டு, ஒரு தொட்டிபோல மாற்றிக்கொள்வார்கள். பறிக்கும் தேயிலைகள் கை நிறைய சேர்ந்தவுடன், தங்கள் வாகுக்கேற்ப வேகமாக இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றி அந்த தொட்டியில் தேயிலைகளை போட்டபடி தேயிலை பறிப்பார்கள். மெதுவாக பறித்தால் மற்ற தொழிலாளிகளிடமிருந்து பின்தங்கிவிடுவார்கள்.

ஆடுபாலம்

தொட்டி நிறைய தேயிலைகள் சேர்ந்ததும் அதனை தங்களது நிறையின் ஓரத்தில் அல்லது பறித்த தேயிலைகள் அளவிடப்படும் `நிறுவைக்கள’த்தின் அருகில் தாட்டுவிரித்து அதில் கொட்டி, சூடு பரவாத வகையில் பரப்பி வைப்பார்கள். எஸ்டேட்டில் கொழுந்துவண்டி என சொல்லப்படும் டிராக்டர், லாரிகள் வந்து கொழுந்தை ஏற்றிச்செல்லும் வகையில் நிறுவைக்களத்தை சாலையில் அமைப்பார்கள். தேயிலை பறிக்கும் இடமோ சாலையிலிருந்து தொலைவில் அமைந்திருக்கும். 

பறித்த தேயிலைகளைக் கொட்டுவதற்காக அடிக்கடி நிறுவைக்களத்துக்கு நடந்துகொண்டிருந்தால் நமக்கு ஒதுக்கப்பட்ட தேயிலைகளை பறித்துமுடிக்க முடியாது. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தேயிலைகளை தொழிலாளிகள் தொட்டிக்குள் வைத்து/திணித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி அதிகமாக தேயிலைகளை அடைப்பதால் பறித்த தேயிலைகள் சீக்கிரமாக சூடாகி வெம்பிப்போகும் வாய்ப்பு உள்ளது. அதனால் தேயிலையின் தரம் குறைகிறது என்று கருதியது கம்பெனி.

இதனால், 1968ஆம் ஆண்டில் எஸ்டேட் மேலாளராக இருந்த கர்டோஸா, நாலுமுக்கு தேயிலைக்காட்டில் இரண்டு புதிய கருவிகளின் பயன்பாட்டை அறிமுகம் செய்தார். ஒன்று சுமார் 3 அடி உயரம்கொண்ட “டிராலி” வண்டி. மற்றொன்று இரு கைகளாலும் பிடித்து தேயிலையை வெட்டி பறிப்பதற்காக தயாரிக்கப்பட்ட கத்திரி. அதுநாள் வரையிலும் கைகளை வைத்து மட்டுமே தேயிலை பறித்துவந்தார்கள்.

தேயிலை சாக்குகள்

அலுமினியத்தால் செய்யப்பட்ட தொட்டி போன்ற சதுரவடிவில் இருக்கும் டிராலியின் நான்கு பக்கமும் காற்று செல்வதற்கேற்ப சிறிய அளவிலான பல துவாரங்களும், அதன் அடிப்பகுதியில் நான்கு சக்கரங்களும் இருக்கும். பறித்த தேயிலைகளை தொட்டிக்குள் போடுவதற்குப் பதிலாக, டிராலி வண்டியில் போடவேண்டும். அதில் தேயிலைகள் நிறையும் போது, பக்கத்திலேயே ஒரு தாட்டு விரித்து அவைகளைக் கொட்டி விடவேண்டும். கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு உதவிக்காய் இருக்கும் “தாட்டுப் பொடியன்” என அழைக்கப்படும் ஆண் தொழிலாளர்கள் அந்த தேயிலைகளை, நிறுவைக்களத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். 

பறித்த தேயிலைகள் காற்றோட்டமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வண்டியில் போடப்படுகிறது. அதனால் அவைகள் சூடாகி வதங்குவதில்லை. அவைகள் அவ்வப்போது நிறுவைக்களத்துக்கு தாட்டுப் பொடியன்களால் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளிக்கு அவைகளை சுமந்து செல்லும் நேரம் மிச்சமாகிறது. அந்த நேரத்தில் அவர் கூடுதலாக தேயிலை பறிப்பார் என்பதே டிராலி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணியில் இருந்த நோக்கம்.

தேயிலைக்காட்டுக்குள் ஒரு ஆள் நடந்துசெல்வதே சிரமமான செயல். இதில் சக்கரம் வைத்த வண்டியை தள்ளிக்கொண்டு செல்வது பெரும் சவாலாக இருந்தது.

ஒரே சீராக இல்லாத தேயிலைக்காடுகள், கல்லும், பாறைகளும் நிறைந்த பகுதிகள், உயரமான ஒந்திகள் என பல சிரமங்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் பறித்துவைத்த தேயிலைகளை உடனுக்குடன் நிறுவைக்களத்துக்கு சுமந்து செல்லவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள் தாட்டுப் பொடியன்கள்.  

டிராலி காரணமான நடைமுறைச் சிக்கலை தங்களுக்குள் முனங்கிக்கொள்ள ஆரம்பித்தார்கள். பின்னர் காட்டு அதிகாரிகளிடம் சொல்லத் துவங்கினார்கள். பயனேதுமில்லை. தங்களின் எதிர்ப்பைக்காட்டும் விதமாக கலந்துபேசி, டிராலியை தேயிலைக் காட்டுக்குள் எடுத்துக்கொண்டு போக மறுத்தார்கள்.

கொழுந்து வண்டி

தேயிலைக்காட்டில் கூலித்தொழிலாளர்களின் கூட்டான எதிர்வினையை இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத கம்பெனி கடுப்பானது. வேலைத்தளத்தை இயல்புக்கு கொண்டுவர வழி தேடியது. காட்டு அதிகாரிகளால் (Field Officers) முன்னணியில் நின்ற தொழிலாளிகள் என அடையாளம் காட்டப்பட்ட மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் மூவரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக தொழிற்சங்க பொறுப்பாளர்களாக இருந்தது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட எதிர்வினையா என்பது தெரியவில்லை. மூன்று முக்கிய பிரதிநிதிகளை வேலை நீக்கம் செய்வதன் மூலம், மொத்த தொழிலாளர் கூட்டத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம் என எண்ணினார்கள். தப்புக்கணக்கு போட்டிருப்பது அப்போது கம்பெனிக்கு தெரியவில்லை. 

தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசிப்பார்த்தும் பயனில்லை. மூவரின் பணிநீக்கம் சரியானதே என்று உறுதியாக நின்றது கம்பெனி. டிராலியை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் தீர்க்கமாக இருந்ததால், ஒட்டாமல் சற்று விலகியிருந்த இதர தொழிலாளர்களும் முழுமையாக சேர்ந்துகொண்டார்கள்.

அதன் தொடர்ச்சியாய், மறுநாள் காலையில் நாலுமுக்கு ஆடுபாலம் அருகிலுள்ள பிரட்டுக்களத்தில் காலை 6.30க்கு ஒன்று கூடினார்கள் தொழிலாளிகள். (துவக்க காலத்தில் தினமும் காலையில் எஸ்டேட் அலுவலகத்தின் முன்பாக எல்லோரும் நிற்கவேண்டும். வரிசையாக தொழிலாளர்கள் நின்றதால் அந்த இடத்தினை ஆங்கிலேய அதிகாரிகள் Parade Field என்று அடையாளம் கொண்டனர். நாளடைவில் பேரேட் களம் என்ற பெயர் மறுவி “பிரட்டுக்களம்” என்றானது. அந்த அலுவலகத்தை Muster என்று சொல்லுவார்கள்.

பிரட்டுக்களம்

எஸ்டேட் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கும் நிர்வாக அலுவலகத்துக்கு பிரட்டுக்களத்தில் இருந்து முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாய் போன தொழிலாளர்கள், அங்கு சுமார் பத்து நிமிடங்கள் நின்று தொழிற்சங்க பிரதிநிதிகள், டிராலி வண்டியின் நடைமுறை சிக்கலைப்பற்றி பேசிவிட்டு, கம்பெனியின் தொழிலாளர் விரோதபோக்கைக் கண்டித்து, அதிகாரிகளையும் கொஞ்சம் வசைபாடிவிட்டு அங்கிருந்து முழக்கமிட்டபடியே மொத்தமாக மீண்டும் பிரட்டுக்களம் திரும்பினார்கள்.

நாலுமுக்கு

பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் தேயிலைக்காட்டுக்குச் சென்றார்கள். அங்கும் தங்களின் போராட்டத்தினை தொடர்ந்தார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாக, slow work செய்ய ஆரம்பித்தார்கள். தங்களுக்கு இழப்பு வராதவண்ணம், வழக்கமாக பறிக்கும் தேயிலை எடையைக்காட்டிலும் நாளொன்றுக்கு மொத்தமாக அரை கிலோ, ஒரு கிலோ என மிக சொற்பமாகவே எல்லோரும் பறித்தார்கள். இது அன்றாட வழக்கமாகிப்போனது.

சுமார் இரண்டு வாரகாலம் இப்படியே நீடித்தது. இதனை சற்றும் எதிர்நோக்காத கம்பெனி, இதே நிலை தொடர்ந்தால், பெருத்த இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதையும், தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருப்பதையும், அவர்களது கோரிக்கையில் இருக்கும் நியாயத்தையும் கருத்தில்கொண்டு, தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தது. மூன்று தொழிலாளிகளின் பணி நீக்கத்தை இரத்துசெய்ததுடன், டிராலி வண்டி திட்டத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன்பின்னர் இதுநாள் வரையிலும் எஸ்டேட்டில் டிராலி வண்டி பயன்பாட்டிற்கு வரவேயில்லை. 

கொழுந்து லாரி

குறிப்பாக எதிர்ப்பு எதுவும் இல்லாவிட்டாலும், டிராலியுடன் தேயிலை பறிக்க கொண்டுவரப்பட்ட கத்திரி அறிமுகமும் அப்போது திரும்ப பெறப்பட்டது. அலுமினியத்தால் செய்யப்பட்ட அதே கத்திரி 1986ஆம் ஆண்டில் மீண்டும் நாலுமுக்கில் கொண்டுவரப்பட்டது. பயன்படுத்துவதில் பெரிதும் சிக்கல் இல்லாததால் அது புழக்கத்திற்கு வந்தது. சதுர வடிவில் திறந்த பெட்டி போல இருக்கும் அந்த கத்திரியில் பறிக்கும் தேயிலைகள் கீழே விழுந்துவிடாமல் இருக்க, அதனை சுற்றிலும் வலையால் தைத்து பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கையால் பறிக்கும்போது சுமார் 50 கிலோ வரை தேயிலை பறித்த தொழிலாளிகள், கத்திரியை பயன்படுத்தி 100 கிலோவுக்கும் அதிகமாக தேயிலை பறிக்கத் துவங்கினார்கள். நாளடைவில், இன்னைக்கி கை எடுப்பா? கத்திரி வெட்டா? என கேட்கும் அளவுக்கு கத்திரி வைத்து தேயிலை பறிப்பது சாதாரணமான ஒன்றாகிப்போனது.  

கத்திரி அடிக்கும் தொழிலாளி

கம்பெனிக்கு எதிராக நாலுமுக்கு எஸ்டேட்டுக்குள் நடந்த முதல் பெரும் போராட்டம் இது. இந்த வெற்றி தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை பெரும் கொண்டாட்ட நிலைக்குக் கொண்டு சென்றது. பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த தொழிலாளிகள் மூவரையும் தோளில் சுமந்துகொண்டு, தொழிலாளர்கள் குடியிருப்பு முழுவதும் முழக்கங்கள் எழுப்பியபடி வலம் வந்து தங்களின் வெற்றிக்களிப்பினை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

ஒற்றுமையாகப் போராடினால் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கம்பெனியை செவிசாய்க்க வைக்கமுடியும் என்பதை தொழிலாளர்களுக்கு அந்த போராட்டத்தின் வெற்றி உணர்த்தியது. முன்புபோல இனியும் தொழிலாளர்களை தங்கள் விருப்பம்போல கையாள முடியாது, புதிய திட்ட அறிமுகங்களின்போது தொழிலாளர்களைக் கலந்தாலோசித்தே முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை கம்பெனியும் உணர்ந்துகொண்ட தருணம் அது. 

கலவரம், வழக்கு, காவல்துறை தலையீடு, வெளி ஆட்களின் பங்கேற்பு/ ஆலோசனை எதுவுமின்றி, நாலுமுக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்றுகூடி, அமைதியான வழியில், தொடர் போராட்டத்தின் விளைவாக கம்பெனிக்கு எதிரான தங்களின் முதல் பெருவெற்றியை சாத்தியப்படுத்திக் கொண்டனர். 

படங்கள்: அருண் பாஸ், மாஞ்சோலை செல்வகுமார் 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.