திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள ஏஎஸ்பி பல்வீர்சிங் குறித்து அறிக்கை வெளியிட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத் தமிழகத் தலைவருக்கு மதுரை மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குநர் ஹென்றி திபேன் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்க தமிழ்நாடு தலைவர் ஆபாஷ்குமாருக்கு எழுதிய பகிரங்க கடிதத்தை நமக்கும் அனுப்பியிருந்தார் ஹென்றி டிஃபேன்.
அதில், “இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு சேப்டர் தலைவர் ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ் அவர்களே…
தாங்கள், கடந்த 04.04.2023 அன்று ‘பல்வீர்சிங் ஐ.பி.எஸ்-க்கு எதிராக காவல் நிலைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீடியா டிரையல் நடக்கின்றது’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள்.

அந்த அறிக்கை இவர்களுக்குத்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் ‘அன்பான எல்லோருக்கும்’ என்று விளித்து வெளியிட்டிருந்தீர்கள். ஆகவே அந்த அறிக்கையை எங்களுக்கும் சொன்னதாக எடுத்துக்கொண்டு, பல்வீர்சிங் ஐ.பி.எஸ் தொடர்பாக உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்ந்தீர்களோ, அதேபோல், பல்வீர்சிங் ஐ.பி.எஸ் தொடர்பான எங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்கிறோம்.
எங்களின் இந்த அறிக்கையை தங்களுக்கானதாக எடுத்துக் கொண்டு, பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
தமிழ்நாட்டில் காவல் நிலைய சித்திரவதைகள் தொடர்பான பிரச்னைகள் வெளிவந்தபோது அவை தொடர்பாக ‘காவல்துறை அதிகாரிகளின் சங்கம்’ என்ற பெயரில், யாரும் இதுவரை கருத்து சொன்னதில்லை. முதன்முறையாக, அதுவும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய சங்கத்தின் பெயரில் இப்படியொரு அறிக்கை வந்தது பெரிய ஆச்சரியமானது. இது தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியதாகும்.

தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு காவல்துறையில் ஐ.பிஎ.ஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அல்லாத அதிகாரிகள் என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல. இப்பிரிவினையை தங்களது அறிக்கை பெரிதாக்கிவிட்டதாகவே உணர்கிறோம்.
தங்களின் சங்க உறுப்பினரும் சக ஐ.பி.எஸ் அதிகாரியுமான பல்வீர்சிங்கை காப்பாற்ற உங்கள் ஆதங்கத்தை அறிக்கையின் வாயிலாக வெளியிட்டிருந்தீர்கள். ஆனால், அதே ஆதங்கம் அந்த வழக்கு விசாரணையின் மெத்தனம் குறித்து ஏன் எழவில்லை? என்ற நியாயமான சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்பிரச்னைகள் தொடர்பாக காவல் நிலை ஆணையின் அடிப்படையில் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் நடத்திய விசாரணையின் முடிவுகளும், அதன்பின் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ் நடத்திய விசாரணையின் முடிவுகளும் இன்னமும் வெளிவரவில்லை. அது குறித்து தங்கள் சங்கம் எந்த ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தவில்லையே, என்ன காரணம்?

இந்நிலையில் ஏஎஸ்பி பல்வீர்சிங், தீவிர மன அழுத்தத்திற்காக தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாகவும், அவருக்கு மன அழுத்தம் அதிகமாகி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக பல்வீர்சிங் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் (அப்படி நடந்திருந்தால், அது பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் இல்லையா? என்று தங்களை கேட்க விரும்புகின்றோம்) அதே போல் அம்பாசமுத்திரம் சம்பவத்திற்கு பிறகும் பல்வீர்சிங்கின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், காவலர்கள்தான் கதவை உடைத்து அவரைக் காப்பாற்றியதாகவும் செய்திகள் புதிதாக கசிந்துள்ளன. இச்செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகிறோம். இது குறித்து தாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
வெளி உலகத்திற்கும் அந்த விசாரணையின் முடிவை தெரிவிப்பீர்கள் என்று நம்புகின்றோம். ஏனென்றால் பல்வீர்சிங் ஐ.பி.எஸ் தனி மனிதர் அல்ல. அவர் ஒரு அரசு அதிகாரி. அதுவும் Disciplinary Force எனும் காவல்துறையில் பணிபுரிபவர். ஆகவே இத்தகைய மன அழுத்தத்துடன் அவர் காவல்துறையில் நீடிப்பது பொது மக்களுக்கு மட்டுமல்ல, அவருக்குமே தீங்கை தரலாம். தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை நீக்குவதற்காக புத்தாக்கப் பயிற்சியில், அவரோ அவரது மனைவியோ பங்கு பெற்று இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இச்செய்திகள் உண்மையானவையாக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி உடனடியாக காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யக்கோருவது அவசியமாக உள்ளது என்பதை ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவராகிய தாங்கள் நன்றாக அறிவீர்கள் என்று நம்புகிறோம்.
இது குறித்த தங்களின் பதில் என்னவென்று அறிய ஆவலாக உள்ளோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.