பெரும்பாலான மாதச் சம்பளக்காரர்களளின் வீட்டில் இதுபோன்ற சம்பவங்களை நாம் காண முடியும். தம்பதியர் இருவருமே வேலை செய்தாலும் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என வாழ்க்கையே கடனில்தான் ஓடும். மன அழுத்தத்தில் இருப்பார்கள். மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு வழியாக மாலில் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பார்கள். அதில் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புவார்கள். வீட்டில் தேவையில்லாத பொருள்களும் உடைகளும் குவிந்திருக்கும். ஆனால், மகிழ்ச்சியை மட்டும் காணவே முடியாது. ஆம்…வாழ்க்கையின் எளிய இன்பங்களை நாம் எப்படி கண்டுகொள்ளாமல் நழுவ விடுகிறோம் என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சிக்குள்ளாவீர்கள்!

Happy family

குறைந்தபட்ச (மினிமலிச) வாழ்க்கை முறையை முயலும்போது, மேற்கண்ட சுழலுக்குள் சிக்காமல் எளிய வழிகளில் பெரிய இன்பங்களை அடைய முடியும். எதையும் வீணாக்காமல் இருப்பது, மறுசுழற்சி செய்வது, அவசியமான பொருள்களை மட்டுமே வாங்குவது என்பதை ஓரளவு பின்பற்ற முடிந்தாலே, குறைந்தபட்ச வாழ்க்கை முறையின் வெற்றியை இமாம் பசந்த் மாம்பழமாக ருசிக்க முடியும். அது நமது நிதி, உடல்நலம், உறவுகள் மற்றும் பலவற்றுக்கும் பயனளிக்கும்.

ஆனால், பழக்கத்தை மாற்றுதல் என்பது அவ்வளவு எளிதல்லவே. உற்றார் உறவினரெல்லாம் என்ன நினைப்பார்கள் என்பது முதல் தயக்கம். அந்த முதல் தடைக்கல்லைக் கடந்துவிட்டால், பொருள்களை விட்டுவிலகுவதும் எளிதாகிவிடும்.

குறைந்தபட்ச வாழ்க்கைமுறையை ஏற்றுக் கொள்வதற்காக கனவுகள் அல்லது ஆசைகளைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உண்மையில் மினிமலிசம் வாயிலாகவே கடனை அடைத்தல், பணியை அல்லது தொழிலை தைரியமாக மாற்றுதல் மற்றும் இதுபோன்ற பல இலக்குகளைத் தொடர முடியும்.

மினிமலிச வழியில், எளிய தருணங்களின் மகிழ்ச்சியை மீண்டும் (சிலர் முதன்முறையாக) கண்டுபிடித்தேன். எளிமையான இன்பங்களுக்குப் பொதுவாக பணம் செலவாகாது. மகிழ்ச்சியைத் தரும் நபர்கள், இடங்கள் மற்றும் விஷயங்கள் நம் மனக் களஞ்சியத்திலும் பதிவாகும்.

மகிழ்ச்சிகரமான ஒன்றைக் கண்டுபிடிப்பது முதல் படி. அதற்கு நேரம் ஒதுக்கி, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்போது அந்த இன்பம் இரட்டிப்பாகும். விஷயங்களை நேசிப்பது சரி, மகிழ்ச்சியை அனுபவிப்பது சரி. அதில் நிறைய சுதந்திரம் உள்ளது:

மகிழ்ச்சி

குறைந்தபட்ச வாழ்க்கை முறையின் உண்மையான நன்மைகள்

குறைந்தபட்ச வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் நன்மைகள் முடிவற்றவை. சில முக்கியமான நன்மைகள் இதோ…

• கடனை அடைப்பது

• பணத்தைச் சேமிப்பது

• வீட்டைச் சுத்தமாக்குவது

• ஸ்மார்ட்டான நபராக மாறுவது

• கவனமுள்ள நுகர்வோராக இருப்பது

– இன்னமும் அதிகமாகவே பல உண்மைகள் உண்டு!

உதாரணமாக, நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால், அதன் பிறகு பலர் மன அழுத்தத்தில் மூழ்குவது வழக்கம். அந்தத் துக்கத்தைச் சமாளிப்பது பெரும் சவாலாகவே இருக்கும். அதிலிருந்து விடுபட வேறொரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது நேர்மறையான ஒன்றாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு நபர் தினசரி காலையில் புகைப்படம் எடுக்கும் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்தார். இது எளிமையான ஒரு விஷயம்தான். ஆனால், இது அவரை துக்கத்திலிருந்து விடுபட வழி செய்தது. மேலும் ஒரு சூடான காபி குடிப்பது மற்றும் சூரிய உதயத்தைப் பார்ப்பது போன்ற எளிய இன்பங்களை அனுபவிப்பதில் கவனம் செலுத்த உதவியது. மொத்தத்தில் கடினமான நேரத்தில் மகிழ்ச்சியின் பல வடிவங்களைக் கண்டறிய இந்தத் திட்டம் அவருக்கு உதவியது.

இசை

வாழ்க்கையின் எளிய இன்பங்களுக்கு அதிகம் செலவாகாது!

“மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. ஒருகட்டத்தில் நம் உடைமைகளில் ஒருபோதும் திருப்தியடையாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். அப்போதாவது நமது பணத்தை நமது உலகத்தை மேம்படுத்தும் வழிகளில் பயன்படுத்தலாம். போனஸாக, உண்மையான மற்றும் நீடித்த நல்வாழ்வை அதன் மூலம் பெறலாம்” என்கிறார் மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர் டாக்டர் சோன்ஜா லியுபோமிர்ஸ்கி.

உண்மைதான்… புதிய பூக்கள் அல்லது இசை கற்பது போன்ற சிறிய இன்பங்களுக்காகப் பணத்தைச் செலவழிப்பது புதிய பொருள்களைவிட அதிக மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்கும் என்று டாக்டர் லியுபோமிர்ஸ்கியின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஹெடோனிக் தழுவல் என்ற உடைமைகளை விரும்புதல் கருத்து பற்றியும் அவர் சொல்கிறார். ஸ்மார்ட்போன் அல்லது கார் போன்றவற்றை நீங்கள் புதிதாக வாங்கினால் அது உங்களுக்கு குறுகியகால மகிழ்ச்சியைத் தரக்கூடும். காலப்போக்கில் நீங்கள் புதிய பொருள்களுக்கு மாற விரும்புவீர்கள். ஆனால், இயற்கை தரும் இன்பமும், அனுபவங்கள் அளிக்கும் பரவசமும் அப்படியானதல்ல. காலமெல்லாம் நம் மனத்தில் நிலைத்து நிற்கக்கூடியது.

எளிய இன்பங்கள், அனுபவங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அனுபவங்கள் நாம் வளரவும், கற்றுக்கொள்ளவும், அர்த்தமுள்ள நினைவுகளைப் பிரதிபலிக்கவும் உதவும். மேலும், அவை ஹெடோனிக் தழுவலுடன் பிணைக்கப்படவில்லை. அனுபவங்களும் நினைவுகளும் வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தரலாம். பின்னொரு காலத்தில் சீனியர் சிட்டிசன் என்ற நிலையில் இருக்கும்போது இதுபோன்ற அனுபவங்களே நம்மைத் தாலாட்டும்.

பறவையின் இசை, மார்கழிக் குளிர், காலையில் முதல் சிப் காபி, புதிய செய்தித்தாள், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, நல்ல உடற்பயிற்சி, பழைய திரைப்படத்தைப் பார்ப்பது அல்லது உங்களுக்குப் பிடித்த இடத்தில் நேரத்தைச் செலவிடுவது போன்ற எளிய இன்பங்களை நீங்கள் எந்த முதலீடும் இன்றியே அனுபவிக்க முடியும்.

யோகா

ஆகவே, நாம் மகிழ்ச்சியை வாங்க வேண்டுமென்றால், முடிந்தவரை பலனளிக்கும் மற்றும் நீட்டிக்கும் அனுபவங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதை மனத்தில் கொண்டு, எனக்குப் பிடித்த எளிய இன்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்குப் பெரும்பாலும் பணம் செலவழிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பங்களின் பட்டியல் இதோ:

1. இசை, பாட்காஸ்ட்கள், வானொலி கேட்பது

2. ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சைக்கிள் சவாரி செய்வது… குறிப்பாக தூறல் மழையின் போது

3. என் செல்லப்பிராணியுடன் மதியம் தூங்குவது

4. காலையில் சூடான காபி அல்லது டீ குடிப்பது

5. வீட்டிலேயே தட்டை, முறுக்கு செய்து சாப்பிடுவது

6. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது

7. டீ கடையில் மக்களைப் பார்ப்பது

8. பறவைகள் பேசுவதைக் கேட்பது

9. சூடான மழையில் மொட்டைமாடிக் குளியல்

10. மசாஜ் செய்துகொள்வது

11. குழந்தைகளுடன் விளையாடுவது

12. புத்தகங்களை நன்கொடையாக வழங்குவது, புத்தகங்களை வாங்குவது, நாவல்கள் படிப்பது மற்றும் டிஜிட்டல் புத்தகங்களைப் படிப்பது

14. என் இணையரைக் கட்டிப்பிடிப்பது

15. நண்பர்களுக்கு கடிதம் அனுப்புவது (இந்தக் காலத்திலும்!)

16. நல்ல புத்தகத்தை மீண்டும் படிப்பது

17. பூங்காவிலோ, கடலோரத்திலோ இயற்கை உலா செல்வது

18. ஓவியம் அல்லது கைவினைப் பொருள் (ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட்) உருவாக்கி நண்பர்கள், உறவினர்களுக்குப் பரிசாக வழங்குவது

19. சுற்றுப்புறத்தை கவனிப்பது மற்றும் எழுதுவது

20. வீட்டை சுத்தம் செய்தல்; தேவையற்ற பொருள்களைக் கழிப்பது

21. நண்பர்களுடன் நேரம் செலவிடுவது

22. அன்பானவர்களுடன் (தொலைபேசியில்லாத) தரமான நேரத்தைச் செலவிடுவது

23. டார்க் சாக்லேட் சாப்பிடுவது.

24. ஒரு புதிய செய்முறையை முயல்வது; குடும்ப உறுப்பினர்களை ஆச்சர்யப்படுத்துவது

happy

25. சோம்பேறியான ஞாயிறு காலையை ‘சும்மா’ அப்படியே அனுபவிப்பது

26. டிஜிட்டல் உலகத்தைக் குறைப்பது… குறிப்பாக என் இன்பாக்ஸ்

27. பழைய போட்டோக்களை பார்த்து சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பகிர்வது

28. தோட்டப் பணியில் ஈடுபடுவது

29. பூ பூக்கும் தருணத்துக்காகக் காத்திருப்பது

30. நண்பர், சக பணியாளர் ஆகியோரைப் பாராட்டுவது (எளிய விஷயங்களுக்கும்கூட!)

ஒரு பயிற்சி…

* எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது?

* என்ன எளிய இன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் (Happiness) நன்றியையும் (Gratitude) கொண்டு வருகின்றன?

இதற்கு நீங்கள் பதில் எழுத வேண்டும். எழுதும்போது, உங்களை நீங்களே தணிக்கை செய்யாதீர்கள். உங்கள் வார்த்தைகள் வேடிக்கையாகவே இருந்தாலும் பாய்ந்து வரட்டும்! நீங்கள் எழுதி முடித்ததும், உங்கள் பட்டியலை மதிப்பாய்வு செய்யுங்கள்.

உங்கள் தினசரி அல்லது வாராந்தர வழக்கத்தில் எளிய இன்பங்களை இன்னும் எவ்வாறு இணைக்கலாம் என்பது பற்றி சிந்தியுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் எளிய இன்பங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம் என்பது பற்றியும் யோசியுங்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது உங்கள் உறவுகளை ஆழப்படுத்த ஒரு சிறந்த வழி!

சின்னச் சின்ன ஆசை போன்ற உங்கள் எளிய இன்பங்கள் பட்டியலை எங்களுக்கும் அனுப்பலாமே!

– சஹானா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.