கடைசியாக நிகழ்ந்த ஏழு சந்திப்புகளில் (2020 ஆண்டு முதல்) சென்னை அணியை 6-வது முறையாக வீழ்த்தியிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த சீஸனின் சிறந்த பேட்டிங் டிபார்ட்மென்ட்டை கொண்டுள்ள அணியாக கருத்தப்படும் சி.எஸ்.கே-வை ஹோம்-அவே என இரண்டு முறைகளிலும் அதுவும் டிஃபண்ட் செய்து வெற்றியை ருசித்திருக்கிறது. கடந்த முறை நிகழ்ந்த கடைசி பால் டென்ஷன்களுக்கெல்லாம் நேற்றைய தினத்தில் இடமில்லை. செஷனுக்கு செஷன், வீரருக்கு வீரர் என தீட்டப்பட்ட திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட ராஜஸ்தானின் ஆதிக்கமே எங்கும் நிரம்பி கிடந்தது.

CSK v RR

மறுப்பக்கம் இந்த சீஸனின் மூன்றாவது தோல்வியை அடையும் சென்னை அணிக்கு இது மோசமான ஆட்டம் எனவும் சொல்வதற்கில்லை. முன்பு கூறியதை போல சிறந்த திட்டங்கள், அதை சரியான நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவையே ராஜஸ்தானை முன் இருக்கையில் அமர செய்தது. மேலும், சென்னை அணியின் கை ஓங்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவை எதிரியணியால் உடனடியாக மட்டுப்படுத்தப்பட்டது.  இவற்றை செஷன் வாரியாக விளக்கினால் நன்கு புலப்படும். 

பவர்ப்ளே அடித்தளம்

முதல் மூன்று ஓவர்களில் மட்டும் 42 ரன்களை அடித்திருந்தது ராஜஸ்தான். ஸ்லாட்டில் வீசப்பட்ட பந்துகள் மட்டுமல்லாது குட் லென்த் பந்துகளுக்கு வெளியே பறக்கவிட்ட ஜெய்ஸ்வாலுக்கு முன்பு சென்னை பௌலர்களின் அனைத்து திட்டங்களும் பொய்த்துபோயின. பெரிய மைதானம், பேட்டிங்கிற்கு சற்றே சாதகமில்லாத ஆடுகளம் என்பதை தெரிந்தே முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணிக்கு தேவைக்கான மிக கச்சிதமான அடித்தளம் அங்கேயே அமைக்கப்பட்டுவிட்டது. மறுபுறம், இந்த சீஸனில் தங்களின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோரை பதிவுசெய்தது சென்னை. இன்டென்ட் இல்லாமல் இல்லை. ஆனால், அதை ராஜஸ்தான் பௌலர்கள் சுத்தமாக செயல்படுத்தவிடவில்லை. குறிப்பாக, சந்தீப் ஷர்மா சென்னை அணியின் ஸ்கோரிங் ரேட்டை முழுவதுமாக குறைத்தார். மேலும், சில பவுண்டரிக்கள் சென்றதற்கே அஷ்வின், ஜாம்பா இருவரையும் பவர்ப்ளேவிற்கு உள்ளாகவே அழைத்து அட்டாக் செய்தார் சஞ்சு. முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்களை மட்டுமே சென்னை பேட்டார்களால் அடிக்க முடிந்தது.

Adan Zampa

உடனடி கம்பேக்

முதல் இன்னிங்ஸில் 13 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் அடித்திருந்தது ராஜஸ்தான் அணி. அப்போதிருந்த நிலைக்கு 200 என்பது நிச்சயமாகவும் அதை 215+ கொண்டுசெல்வதே அந்த அணி பேட்டர்களின் எண்ணமாகவும் இருந்திருக்கும். ஆனால், 14-வது ஓவரை வீசிய துஷார் சஞ்சு மற்றும் ஜெய்ஸ்வாலை அடுத்தடுத்து வீழ்த்த, அடுத்த நான்கு ஓவர்களுக்கு 28 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டு 17 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 153-4 என குறையும். ஆனால், சென்னை அணியின் இந்த ஆதிக்கம் அதிக நேரம் நீடித்திருக்காது. ஜூரேல், படிக்கல் இருவரும் சிறந்த ஃனிஷிங்கை கொடுக்க கடைசி மூன்று ஓவர்களில் 49 ரன்கள் அடித்து ஜெய்ப்பூர் மைதானத்தில் 200 ரன்களை முதன்முறையாக எட்டியது. சென்னை அணியின் டெத் பௌலிங் சிறப்பாகவே இருந்தாலும் துரதிர்ஷட பவுண்ட்ரிக்கள் பலவும் ராஜஸ்தானுக்கு சாதகமாய் அமைந்தன.

திட்டம்: வைட் யார்கர்

முதல் 11 ஓவர்களுக்கு சென்னை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும். ஆனால், அதிலிருந்து மீண்டு ஓர் சிறிய கம்பேக்கையும் கொடுக்கும். துபே, மொயீன் அலி அடுத்த சில ஓவர்களுக்கு வான வேடிக்கை நிகழ்த்த அக்கூட்டணி 24 பந்துகளில் 50-க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்படும். மொயீன் வெளியேறிய பிறகு களமிறங்கும் ஜடேஜாவும் கூட சிறப்பாகவே ஸ்ட்ரைக் செய்வார். கடைசி 5 ஓவர்களுக்கு தேவைப்பட்ட 78 ரன்களுக்கு சாத்தியப்படக்கூடியதாய் தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு ராஜஸ்தான் பௌலர்கள் கையிலெடுத்த வைட்-யார்கர் யுக்தி சென்னை அணியை போட்டியை விட்டு முழுவதுமாக வெளியேற்றியது. இருவரும் இடது கை பேட்டர்களாக இருந்தது பௌலர்களுக்கு கூடுதல் சாதகமாய் அமைந்தது. 

போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணம் குறித்து பேசத்தொடங்கிய தோனி, “ராஜஸ்தான் அணி சராசரியை விட கொஞ்சம் அதிகமாக ஸ்கோர் செய்துவிட்டார்கள். பவர்ப்ளேயில் நாங்கள் கொஞ்சம் அதிகமாகவே ரன்களை வாரி வழங்கிவிட்டோம். பிட்ச்சும் அந்த சமயத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது” என்றார்.

இந்த வெற்றியால் புள்ளி பட்டியலின் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் அணி.        

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.