சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே தாணுமாலைய சுவாமியாகக் காட்சிதரும் திருத்தலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் சுசீந்திரம் ஆகும். இந்திரன் பாவ விமோசனம் அடைந்தது சுத்தமானதால் இந்தத் திருத்தலத்துக்கு `சுசீந்திரம்’ எனப் பெயர் ஏற்பட்டது.

ஒருமுறை சாபம் காரணமாக இந்திரனின் உடல் முழுவதும் கோரமாக மாறியது. அந்த சாபத்தில் இருந்து விடுபட இத்தலத்தின் இறைவனை இந்திரன் வழிபட்டான். அதன் பயனாக அவனது கோர உடல் அழகாகவும், சுத்தமாகவும் மாறியது. ‘சுசி’ என்றால் சுத்தமான என்று பொருள். இந்திரனின் உடல் சுத்தமானதால் இந்தத் தலத்திற்கு சுசீந்திரம் என்று பெயர் வந்தது. இங்கு ஒவ்வொரு நாளும் இந்திரன் அர்த்த ஜாமத்தில் இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். எனவே இரவு பூஜைக்கான பொருள்களை அர்ச்சகர் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்.

முன்தினம் இரவு வைத்த பொருள்கள் மறுநாள் பார்க்கும்போது மாறுதல் அடைந்திருக்குமாம். எனவேதான் இங்கு அர்ச்சகர் மாறுதலின்போது ‘அகம் கண்டதைப் புறம் சொல்லேன்’ என சத்தியம் செய்யும் நடைமுறை உள்ளது. இக்கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா மற்றும் மார்கழித் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மார்கழி மற்றும் சித்திரைத் திருவிழாக்களில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமைக் கோயிலாகக் கருதப்படுவது சுசீந்திரம் திருத்தலமாகும்.

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரைத் தெப்பத்திருவிழா நேற்று (ஏப்.21) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முந்தைய நாள் மாலை இடலாக்குடி பட்டாரியர் சமுதாய மக்களால் நெய்து எடுத்துவரப்பட்ட கொடிப் பட்டம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு சுசீந்திரம் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. மூன்றாம் நாள் திருவிழாவில் புஷ்பக விமான வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் பவனி நடைபெறும். நான்காம் திருவிழாவில் காலை பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும், இரவு பறங்கி வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெறும்.

ஐந்தாம் நாள் திருவிழாவன்று அதிகாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், ஏழாம் நாள் விழாவன்று கைலாச பர்வத வாகன பவனியும் நடக்க இருக்கிறது. ஆறாம் நாள் விழா இரவில் இந்திர வாகனத்தில் சுவாமி பவனி வருவார். ஒன்பதாம் நாள் விழாவான வரும் 29-ம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர் தேர், அம்மன் தேர், தேவேந்திரன் தேர் ஆகியவை நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்களால் இழுத்து வரப்படும்.

கொடியேற்ற பூஜைகள்

தேரோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பத்தாம் நாள் விழாவான 30-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடைபெறும். தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும், பெருமானும் எழுந்தருள்வர்.

இந்த விழா ஏற்பாடுகள் கோயில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.