வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு வருஷமா நான் ஒரே ஆள்கிட்டதான் அப்பளம் வாங்கிட்டு இருந்தேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா.. எத்தனையெத்தனை சூப்பர் மார்க்கெட்கள் வந்தபிறகும்..அப்பளம் மட்டும் அவரைத்தவிர வேற யாரிடமும் வாங்கியதில்லை..(நாலு வருஷத்துக்கு முன்னால் வரை.)

‘அப்படி என்ன ஸ்பெஷல் அப்பளம்?’னு சில பேர்க்கு கேள்வி வரலாம்.. ‘ஸ்பெஷல் அந்த அப்பளத்துல இருக்காது..அதைக் கொண்டு வந்து தர்ற ஆள்கிட்ட இருக்கலாம்’னு..(நான் வச்சிருக்கிற தலைப்பை வச்சே..) உங்கள்ல சிலபேர் யூகிச்சிருக்கலாம்.நீங்க கெஸ் பண்ணினது கரெக்ட் தான்.

நான் கல்யாணமாகி அந்த ஏரியாவுக்கு குடி போன புதுசு. என் கணவர் ஆஃபிஸ் கிளம்பிப் போனதும்.. வெளிக் கேட்டை இழுத்து மூடி உள் கதவையும் தாழ்ப்பாள் போடுறவ.. அப்புறமா அவங்க வரும்போதுதான்.. அதுவும் காலிங் பெல்லை அவங்க அழுத்துற விதத்துலதான் கதவைத் திறப்பேன். (அது எங்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கேத மொழி).

Representational Image

ஏன்னா புது இடம்.. யாராவது தெரியாதவங்ககிட்ட பேச்சுக் குடுக்க பயமாயிருக்கும். அங்க தெருவுல எப்போ பார்த்தாலும் ஏதாவது வித்துக்கிட்டே போவாங்க. காய்கறி, பழங்கள், மீன், பலகாரங்கள், சேலைகள், ஜமுக்காளம்னு ஏதாவது ஒரு சத்தம் கேட்டுட்டே இருக்கும்.

அப்படி ஒருநாள் நான் கதவை அடைச்சுட்டு உள்ளே இருக்கும்போது யாரோ கேட்டை தட்டிக்கிட்டே இருக்கிறது போல சத்தம். சரி தட்டிப் பார்த்துட்டு ஆள் இல்லன்னு போயிடுவாங்கன்னு பார்த்தா.. சத்தம் நிக்கவேயில்ல.. டொக் டொக்னு கேட்டுட்டே இருக்கு.

எனக்கு அந்த சத்தம் எரிச்சலைக் குடுக்கவே கதவை லேசா திறந்து பார்த்தேன். வெளியே ஒரு வயசான தாத்தா நிக்குறது தெரியவும்.. எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சு.. அய்யோ பாவம் எதுக்கு தட்டினாரோ.. தண்ணி எதுவும் வேணுமோ என்னவோன்னு நினைச்சு மெதுவா கதவைத் திறந்தேன்.

அவர்கிட்ட போய் “என்ன தாத்தா என்ன வேணும்?”னு கேட்டதும்..”அம்மாடி உள்ள அம்மா இருப்பா.. அப்பளத் தாத்தா வந்தாருக்காருன்னு சொல்லிக் கூப்பிடம்மா”ன்னு சொல்ல..

“இல்ல தாத்தா இது என் வீடுதான் இங்க எந்த அம்மாவுமில்ல.. நீங்க வேற வீடுன்னு நினைச்சிட்டு இங்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்”னு நான் சொன்னதும்..

Representational Image

“ அப்படியா..இல்லயேம்மா..இந்த வீடுதான்.. நான் பதிவா வந்து அப்பளம் குடுத்துட்டுப் போவேனே. என் மக வயசுல ஒரு பொண்ணு இருக்கும். எப்போதும் எங்கிட்டதான் அப்பளம் வடகமெல்லாம் வாங்கும்”ன்னு அவர் சொல்லவும்..

“தாத்தா நாங்க இங்க புதுசா குடி வந்திருக்கோம். நீங்க சொல்றவங்க இதுக்கு முன்னாடி இங்க குடியிருந்தவங்களா இருக்கலாம். அவங்க இப்போ இங்க இல்ல தாத்தா”.. அப்படின்னு நான் சொல்ல..

“சரியம்மா சரி.. அவங்க இல்லன்னா என்ன.. நீயும் என் பேத்தி மாதிரிதான். இந்த தாத்தாகிட்டயிருந்து அப்பளம் வாங்கிக்கோயேன் புள்ள”.. அப்படின்னு கெஞ்சுற பாவனையில அவர் கேட்கும் போது.. எனக்கு வேணாம்னு சொல்லத் தோணல.

“சரி ஒரு பாக்கெட்டு குடுங்க”ன்னு கேட்கவும்..”புள்ளே..இந்தக் கிழங்கு பப்படமும் வாங்கிக்கோயேம்மா”ன்னு சொன்னாரு..

“அப்படின்னா என்ன?”ன்னு நான் திருப்பிக் கேட்கவும்..”என்ன புள்ள நீ நம்ம ஊரு இல்லியா.. அசலூர்ல இருந்து வந்திருக்கியளோ?”ன்னு கேட்டுட்டு சிரிச்ச அந்தத் தாத்தா…”இந்த ஊர்ல இதான் ஸ்பெசலு புள்ள.. வாங்கிச் சாப்பிட்டுப்பாரு.. கெழங்குல செஞ்சது”ன்னு சொல்லித் தந்தாரு. அதுலயும் ஒண்ணு வாங்கிக்கிட்டேன்.

Representational Image

இந்த ஒரு விஷயத்துலயே நம்மள அசலூருன்னு கண்டுபுடிச்சிட்டாரே இந்தத் தாத்தான்னு நினைச்சு ஆச்சர்யமா இருந்துச்சு.

நம்ம வாய்தான் சும்மா இருக்காதே…” ஏன் தாத்தா இந்த வேகாத வெயில்ல இப்படி அலையுறீங்க.. வீட்ல உங்களைப் பார்த்துக்க யாருமில்லையா?”ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்ன பதில் என்னை அசரடிச்சிடுச்சு.”என்னைப் பார்த்துக்க யாருமில்ல தாயி.. ஆனா நான் பார்த்துக்குவேன்னு நம்பி என் பொஞ்சாதி வீட்ல இருக்கா”ன்னு சொல்லிட்டு ஒரு விரக்தியான சிரிப்போட…

“அவளுக்காகத்தான் இந்த வெயில்ல இப்படி அப்பளம் விக்குறேன் புள்ள.. நாங்க பெத்தது ரெண்டும் ஆம்பளப்புள்ளைக.. உனக்கென்னப்பா ராசாவா வாழப்போறேன்னு எல்லாரும் சொன்னாங்க.. ஆனா இப்போ சாதாரண மனசனாக்கூட வாழ முடியாம நாயாக் கெடந்து சீரழியுறேன். ரெண்டு பேரும் கல்யாணம் முடிஞ்சதும் அவனவன் குடும்பத்தை பார்த்துக்கிட்டு வெளியூர்ல இருக்காங்க. போக்குவரத்து, பேச்சு வார்த்தை எதுவும் கிடையாது. இருக்கோமா இல்லையான்னு கூட வந்து எட்டிப் பார்த்தது கிடையாது. சாவு வர்ற வரைக்கும் வாழணுமே..அதான் இப்படி எங்க பக்கத்துல ஒரு மாமி அப்பளம் சுட்டுத் தர்றதை தெருத்தெருவா வந்து விக்குறேன்”னு அவரு கதையை நீளமாச் சொல்லி முடிச்சாரு.

கேட்டுட்டு எனக்கு ரொம்ப சங்கடமா ஆயிடுச்சு.”தாத்தா கொஞ்சம் தண்ணி குடிக்கிறீங்களா?”ன்னு கேட்டு கொஞ்சம் தண்ணியை எடுத்துட்டு வந்து குடுத்தேன்.ரெண்டு கையால வாங்கி கடகடன்னு குடிச்சிட்டு “இனிமே நான் மாசாமாசம் வருவேன் புள்ள..நீ எங்கிட்டதான் அப்பளம் வாங்கணும்”ன்னு உரிமையோட சொல்லிட்டு “ இதைச் சாப்பிட்டுப்பாரு அடுத்து நீயே கண்டிப்பா எங்கிட்டேதான் வாங்குவேன்”னு ரொம்ப உறுதியோட சொல்லிட்டுப் போனாரு

எனக்கு சும்மாவே வயசான தாத்தாவையெல்லாம் பார்த்தா பாவமாயிருக்கும். ஏதாவது காசு குடுக்கலாம்னு பார்த்தா அவரு தப்பா நினைச்சுக்குவாரான்னு தெரியலயேன்னு எதுவும் குடுக்கல.

அவர் கையில இருக்கிற பை ரொம்ப அழுக்கா இருக்கவே.. அவரை இருக்கச் சொல்லிட்டு உள்ளே போய் நாலைஞ்சு பிக் ஷாப்பர்ஸ் ( கட்டப்பை) எடுத்துட்டு வந்து “இதை வச்சிக்கோங்க தாத்தா”ன்னு குடுத்தேன்.

அவருக்கு சந்தோஷம். ஆனா “இத்தனை எதுக்கு புள்ள.. ரெண்டே ரெண்டு போதும்..எங்க துணிமணியை வச்சுக்கிறதுக்கு ஒண்ணு, அப்பளம் கொண்டு வர்றதுக்கு ஒண்ணு”ன்னு சொல்லி அதை மட்டும் எடுத்துட்டுப் போனாரு. தேவைக்கு மேலே எதுவும் வேண்டாம்னு நினைக்கிற அவரு மனசைப் பார்த்து எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.

அப்புறம் அவர் எப்போதும் அப்பளத்தோட வருவாரு.கூடவே கூழ் வடகம்,மோர் வடகம்,கலர் அப்பளம்னு விதவிதமா கொண்டு வருவாரு.நானும் எல்லாத்துலயும் ஒவ்வொரு பாக்கெட் வாங்கவேன்.அப்படி வரும்போது நான் குடுத்த அந்தப் பை பழசாயிடுச்சுன்னா அவரே “வேற பையிருந்தா தா புள்ள”ன்னு கேட்பாரு.

அப்புறம் என் பிள்ளைங்க பிறந்தப்புறம் அவங்களுக்குன்னு ஏதாவது மிட்டாயும் கொண்டு வருவாரு. அதையும் வாங்கிக்குவேன். ஏதாவது எக்ஸ்ட்ராவா பணம் குடுத்தா வாங்கவே மாட்டாரு. சில்லறை இல்லனு ரெண்டு ரூபா அவர்கிட்ட பாக்கியிருந்தாலும்கூட பெரும்பாலும் அடுத்த தடவை வரும்போது அதை ஞாபகம் வச்சு கழிச்சிட்டுத்தான் காசு வாங்குவாரு. சரி அவரோட தன்மானத்தை நாமளும் மதிக்கணும்னு நானும் அவரைக் கட்டாயப்படுத்த மாட்டேன்.

அதனால நான் என்ன பண்ணுவேன்னா.. சித்திரை விஷூ, தீபாவளி, பொங்கல் மாதிரியான விசேஷ நாட்கள்ல மட்டும்..காசு பணமோ இல்ல வேஷ்டி புடவையோ குடுத்து …”தாத்தா இது நான் தர்ற கைநீட்டம்.. இதை வேணாம்னு சொல்லாம வாங்கிக்கோங்க”ன்னு சொல்லிக் கட்டாயப்படுத்திக் குடுத்திருவேன். (கைநீட்டம்ங்கிறது இங்க கன்னியாகுமரி மாவட்டத்தோட வார்த்தை..வேற ஊர்ல ‘படி’ ‘கைக்காசு’ன்னு எல்லாம் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்)

“நீ நல்லாயிருக்கணும் புள்ள”ன்னு மனசார வாழ்த்திட்டுப் போவாரு. அப்புறம் நாங்க அந்த ஏரியாவுலேயே வேற ரெண்டு மூணு வீடு வாடகைக்கு மாறிட்டே இருக்கும்போதும் தொடர்ந்துட்டே இருந்துச்சு.

திடீர்னு ஒருநாள்.. என் வீட்டுக்காரர் வந்து “உங்கிட்ட ஒரு நியூஸ் சொல்லுவேன். ஷாக்காயிடாதே”ன்னு சொல்லிட்டு “அந்த அப்பளத் தாத்தா இறந்துட்டாராம்”னு சொன்னாங்க. உண்மையிலேயே நான் ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். என்னால அந்த அதிர்ச்சியிலயிருந்து மீளவே முடியல. அதுவும் நடுரோட்டுல நடந்து போயிட்டு இருக்கும்போது இறந்துட்டாராம். அங்க நாங்க பூ வாங்குற கடைக்காரர் இந்த விஷயத்தை என் கணவர்கிட்ட சொன்னாராம்.

Representational Image

அவரு மனைவி என்ன ஆனாங்க.. ஏது ஆனாங்கன்னு யாரைக் கேட்கிறதுன்னே தெரியல. ஏன்னா.. அவருக்கு இந்த ஊர் கிடையாது.பக்கத்து ஊர்லயிருந்து பஸ்லதான் வருவாரு.இப்ப வரைக்கும் எனக்கு  அதைப்பத்தி எந்த விவரமும் தெரியாது.

ஆனா இப்பவும் சூப்பர் மார்க்கெட்ல அப்பளம் வாங்கும்பொதெல்லாம்..அதுவும் கிழங்கு பப்படம் வாங்கும்போதெல்லாம் அவரு ஞாபகம் மனசுல வந்துட்டுப் போகும். ரெண்டு ஆம்பளப்புள்ளையைப் பெத்தும் கடைசியில நடுரோட்டுல இறந்துட்டாரேன்னு நினைக்கும்போது.. ”என்ன புள்ளைங்க!!.. என்ன வாழ்க்கை இது!!”ன்னு தோணும்.

இங்க அவரைப் பத்தி எழுதுறதை அவருக்கு நான் செலுத்துற அஞ்சலியா தான் நினைக்கிறேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.