கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதியும், தேர்தல் முடிவுகள் மே 13-ம் தேதியும் அறிவிக்கப்படும்  எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைத்தபோதிலும், பின்னாளில் அந்தக் கூட்டணியைக் கலைத்து பா.ஜ.க ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து கர்நாடகத் தேர்தல்களத்தில் அரசியல் அனல் பறந்துகொண்டிருந்தது.  224 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட கர்நாடகாவில் 113 இடங்களில் வெற்றிபெறும் கட்சி ஆட்சியமைக்கும். தற்போது கர்நாடகாவில் ஆளும் அரசாக இருக்கும் பா.ஜ.க, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும் எனத் தீவிரமாக இயங்கி வருகிறது.

நரேந்திர மோடி – ராகுல் காந்தி

மற்றொருபக்கம், ராகுல் காந்தியின் எம்.பி பதவிநீக்கம்,  அதானி விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கடும் சிரத்தைகளை  மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளுமே தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதில். பா.ஜ.க-வைத் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காததால் அதிருப்தியில் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க-வில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார். 

இந்த நிலையில் கர்நாடக பா.ஜ.க, தேர்தலுக்கான நட்சத்திரப்  பிரசாரகர்களின் பட்டியலை வெளியிட்டது. அதிலும் குறிப்பிட்ட சிலர் தவிர்க்கப்பட்டிருப்பதால் மீண்டும் கர்நாடக பா.ஜ.க-வில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் பா.ஜ.க, சட்டமன்றத் தேர்தலுக்கான நட்சத்திரப் பிரசாரகர்களின் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷாவைத் தவிர, கேபினட்  அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன்,  தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, மன்சுக்  மாண்ட்வியா, பிரகலாத் ஜோஷி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்,  அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட 40 முக்கியத் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கர்நாடக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

இதில் பிரதமர் மோடி 20 பொதுக்கூட்ட பேரணிகளில் பங்குபெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அமித் ஷா ஏப்ரல் 21 முதல் 23 வரை கர்நாடகாவில் இருப்பார் என்றும், யோகி ஆதித்யநாத்  இந்துத்துவா கொள்கைக்குப் பெரும் வாக்கு வங்கியாக இருக்கும் ஹூப்ளி, பெலகாவி மற்றும் கடலோரப் பகுதிகளில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஹூப்ளி, ஹாவேரியில் தனது பிரசாரத்தைத் தொடங்குவார் எனவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. 

ஆனால், இந்தப் பட்டியலில் கர்நாடக பா.ஜ.க-வின் சில முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் போயிருப்பது, அந்தக் கட்சிக்குள் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் முதலாமவர் தேஜஸ்வி சூர்யா. இவர் பா.ஜ.க-வின் இளைஞர் பிரிவான மோர்ச்சாவின் தலைவராகவும், பெங்களூரு தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமானத்தில் எமெர்ஜென்ஸி கதவைத் திறக்க முயன்றதாக விமர்சிக்கப்பட்டவர். கர்நாடக பா.ஜ.க வட்டாரங்களில் பிரபலமானவர் என்பதால் இவரும் நட்சத்திரப் பிரசாரகர் பட்டியலில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தேஜஸ்வி சூர்யா

ஆனால், அவர் பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. கட்சியின் கொள்கைகளுக்காக அழுத்தமாகக் குரல் கொடுப்பதிலும், எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக… காங்கிரஸை விமர்சிக்கும் விஷயத்திலும் மக்களிடம் பிரபலமாக அறியப்பட்டவரின் செல்வாக்கு, தற்போது மாநில அரசியலில் குறைந்திருக்கிறதா என்ற கேள்வி, இந்தப் பிரசாரப் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் அரங்கில் பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மாநில பா.ஜ.க நிர்வாகிகள், `யாரும் திட்டமிடப்பட்டு இந்தப் பிரசார பட்டியலில் புறக்கணிக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்திடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், “தேஜஸ்வி சூர்யா கர்நாடகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல எங்களுக்கிடையே பிரபலமான தலைவரும்கூட. அவர் எப்படியும் கட்சிக்காகப் பிரசாரம் செய்வார். இப்போதும் சில வாரங்களாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

ஆனால், சிறிய கூட்டங்களுக்கும், குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கும் பலரை அனுப்பக்கூடிய தேவை இருக்கிறது. எல்லா நேரத்திலும் பிரசாரத்தின் பொறுப்பில் அனைவரையும் சுமக்க முடியாது. இந்தப் பட்டியலில் தேஜஸ்வி சூர்யா இல்லாததால், தேர்தல் பிரசாரத்தின்போது அவர் ஈடுபடவே மாட்டார் என்று அர்த்தமில்லை. தேஜஸ்வி சூர்யா மாநிலம் முழுவதும் குறைந்தது 50 தொகுதிகளில் பிரசாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அவர் புத்தூர், பைந்தூர், ஷிவமோகாவில் பிரசாரத்தில் ஈடுபடுவார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

எம்.பி பிரதாப் சிம்ஹா

தலைமையின் இந்த முடிவு குறித்து தேஜஸ்வி சூர்யா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், மைசூரு-குடகு தொகுதியின் எம்.பி-யுமான பிரதாப்  சிம்ஹாவும்  நட்சத்திரப் பிரசாரகர் பட்டியலில் இடம்பெறவில்லை. இவரும் தனது இந்துத்துவா கருத்துகளுக்குப் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஜூலை மாதம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ததிலிருந்து, கர்நாடகா மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும், அவரின் மகன் விஜயேந்திராவையும்  பா.ஜ.க நட்சத்திரப் பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால், கர்நாடக மாநிலத்தின் மற்ற அமைச்சர்களான பசவராஜ்  பொம்மை, எடியூரப்பா, கடீல், பொதுச்செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, கோவிந்த்  கார்ஜோல், பி.ஸ்ரீராமுலு, ஆர்.அசோகா, மத்திய அமைச்சர்  ஷோபா கரந்த்லாஜே, எம்.பி சதானந்த கவுடா ஆகியோரின்  பெயர்கள் அதில் இடம்பெற்றிருப்பதும், சில குறிப்பிட்ட நடிகர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதும்தான் தற்போதைய விவாதத்துக்குக் காரணமாகியிருக்கின்றன.

எடியூரப்பா – விஜயேந்திரா

கடந்த ஆண்டுகளில் கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம், ஹலால் உணவு தடை, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து, அதானி விவகாரம், ராகுல் காந்தியின் பதவிநீக்கம் உள்ளிட்டவை காங்கிரஸுக்கும், புதுமுக வேட்பாளர்கள் அறிமுக யுக்தி, காங்கிரஸுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை பா.ஜ.க-வுக்கும் கைகொடுக்குமா என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.