விழுப்புரம் மாவட்டத்தில், அண்மைக்காலமாக போதைப் பழக்கங்களால் நிகழும் கொலைக் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. கடந்த 20 நாள்களில் மட்டும் (மார்ச் 17 முதல் ஏப்ரல் 5 வரை) சுமார் 6 கொலைகள் நடந்திருப்பது மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

விக்கிரவாண்டி அருகே, காதலை தொடர மறுத்த இளம்பெண்ணை, கடந்த மார்ச் 17-ம் தேதி காதலனே போதையில் வெட்டிப்படுகொலைசெய்த சம்பவம் விழுப்புரத்தை அதிரவைத்தது. அதே போல், மார்ச் 27-ம் தேதி செஞ்சி அருகேயுள்ள ஈயக்குணம் கிராமத்தில், மதுபோதையிலிருந்த மகன் சுப்பிரமணியனை, தந்தை பாலகிருஷ்ணன் கண்டித்ததால், மகனே தந்தையைக் குத்திக் கொலைசெய்த சம்பவமும் நடந்தது. இதற்கெல்லாம் ஒருப்படி மேலாக, மார்ச் 29-ம் தேதி விழுப்புரம் நகரில் குடும்பப் பிரச்னையை மையப்படுத்தி போதையில் உலா வந்த ராஜசேகர், வல்லரசு ஆகிய சகோதரர்கள்… பல்பொருள் அங்காடி அருகே அப்பாவி இப்ராஹிம் என்பவரைக் கொடூரமாகக் குத்திக் கொலைசெய்தனர். இந்தச் சம்பவம் சட்டமன்றம் வரை எதிரொலித்த நிலையில், தற்போது இரு குற்றவாளிகள்மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது.

கைது: ராஜசேகர் – வல்லரசு, கணேசன் & திருவெண்ணெய்நல்லூர் குற்றவாளிகள்

இதுமட்டுமின்றி, மரக்காணம் அருகே எம்.திருக்கனூரில்… குடும்பப் பிரச்னையின்போது போதையிலிருந்த உறவினர் விஜயகாந்தால் கொடூரமாக தாக்கப்பட்ட முதியவர் கன்னியப்பன், ஏப்ரல் 3-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார். திருவெண்ணெய்நல்லூர் அருகே போதை, திருட்டு பழக்கங்களுக்கு அடிமையான நண்பர்களிடம் பேசுவதை தவிர்த்த 17-வயது சிறுவன்… ஏப்ரல் 5-ம் தேதி அதிகாலையில் 4 நண்பர்களால் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறான். 

இதேபோல், மயிலம் தேரோட்டத்தின்போது (ஏப்ரல் 4-ம் தேதி) திண்டிவனம் – கொல்லியங்குணம் பகுதி இளைஞர்களிடையே வாகன டோக்கன் போடுவதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதில், போதையிலிருந்த திண்டிவனம் இளைஞர்கள் சரமாரியாக வெட்டியதில்… கொல்லியங்குணத்தைச் சேர்ந்த முத்தையனுக்கு 35 தையல்களும், பிரகாஷூக்கு 7 தையல்களும் போடப்பட்டிருக்கின்றன. திண்டிவனம் இளைஞர்கள் மூவருடன் சென்ற கோகுல்ராஜ், பதில் தாக்குதலுக்குள்ளாகி மறுதினம் சடலமாகவே மீட்கப்பட்டார். 

கைதுசெய்யப்பட்ட ரமேஷ் (மயிலம் கொலை சம்பவம்), விஜயகாந்த், சுப்பிரமணியன்

மேற்கண்ட 6 குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கொலைகள் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் அகிலன், “இது போன்ற கொலைகளுக்கு முக்கியக் காரணம் கஞ்சா, மது போதைதான். விழுப்புரத்தின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. கடந்த ஆட்சியைவிட இப்போது அதிக புழக்கம் இருக்கிறது. இதில் அரசியல் கட்சியினரின் ஈடுபாடு அதிகம் இருப்பதோடு, போலீஸாரின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. போதைப்பொருள் புழக்கத்தை காவல்துறை வேடிக்கைப் பார்க்காமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

இது குறித்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா-விடம் விளக்கம் கேட்டோம். “கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக வேண்டுமென்றே சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். அப்படி ஏதுமில்லை. இலவச புகார் எண் இருந்தும் இதுவரை அப்படியான புகார் ஏதும் வரவில்லை. காவல்துறைக்கு கிடைக்கும் ரகசிய தகவலின்படிதான் சென்று பிடித்து வருகிறோம். மதுபானத்தால் வேண்டுமானால் 50% அப்படி நடந்திருக்கலாம். அதை ஆராயாமல், எது நடந்தாலும் கஞ்சாதான் காரணம் என்கிறார்கள்.

எஸ்.பி ஸ்ரீநாதா – மாவட்ட ஆட்சியர் பழனி

விழுப்புரம் மாவட்டத்தில், 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் 51, 31, 51, 44 என்ற விகிதத்தில் இருந்த கொலைக் குற்றங்கள்… 2021 – 2022 ஆண்டுகளில் 23, 21 என்ற விகிதத்துக்குக் குறைந்திருக்கின்றன. கடந்த மார்ச் 31-ம் தேதி வரையில் 6 கொலைக் குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. கஞ்சா விற்பனை குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டால், கட்டாயம் நான் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

விழுப்புரம் இப்ராஹிம் கொலை சம்பவம் சட்டமன்றம் வரை எதிரொலித்த நிலையில், கஞ்சா, குட்கா, சூதாட்டம், சாராயம், லாட்டரி விற்பனை தொடர்பாக ஏப்ரல் 1-ம் தேதி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை வேட்டை நடத்தியது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை. இதில் பலர் கைதுசெய்யப்பட்டபோதிலும், 4 கஞ்சா வழக்குகளில் 5 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 380 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இதேபோல், போதைப்பொருள், லாட்டரி சம்பவங்களுக்கு எதிராக போலீஸின் நடவடிக்கை தொடர்ந்தாலும், நடப்பு ஏப்ரல் மாதத்தில் மட்டும் விழுப்புரத்தில் பின்வருமாறு குறிப்பிட்ட இடங்களில் போலீஸாருக்கு கஞ்சா பிடிபட்டிருக்கிறது. விழுப்புரம் தாலுகா காவல் சரகத்தில் 350 கிராம் கஞ்சாவையும், திண்டிவனம் ரோஷணை பகுதியில் 1.100 கிலோ கஞ்சாவும், கிளியனூர் பகுதியில் 165 கிராம் கஞ்சாவும், செஞ்சி வளத்தி பகுதியில் 60 கிராம் கஞ்சாவும் பிடிபட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களையும் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

நடப்பு மாதத்தில் இந்த மாவட்டக் காவல்துறையிடம் மட்டுமே, பல பகுதிகளிலிருந்து இவ்வளவு கஞ்சா பிடிபடும்போது, “மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இல்லை” என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதிலளித்திருப்பது ஏற்புடையதாக இல்லை.

எனவே, உயிர்களை காவு வாங்கும் இதுபோன்ற போதைப்பொருள்களுக்கு எதிராக அரசு சாட்டையைச் சுழற்றவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.