சென்ற ஏப்ரல் 7 அன்று தமிழ்நாடு, கோவையைச் சேர்ந்த மாயாஜால நிபுணர் விக்னேஷ் பிரபுவுக்கு மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. விக்னேஷ் பல ஆண்டுகளாக மாயாஜால  நிகழ்ச்சிகளை நடத்திவந்தாலும் வி.வி.ஐ.பிகளை வைத்து  நிகழ்ச்சிகள் நடத்தியதில்லை.

மும்பையில் தோனி சில நாள்கள் கிரிக்கெட் மேட்சிற்காகத் தங்கியிருக்கிறார் என்று தெரிந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் தோனியை வைத்து ஒரு மாயாஜால நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்து விக்னேஷிடம் சொல்லியது.

விக்னேஷ் பிரபு

“நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கணும்” என்று மட்டும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள்  விக்னேஷிடம் வலியுறுத்தினார்கள். “அதுக்கென்ன, அசத்திடலாம்…” என்றார் விக்னேஷ்.

”மும்பை நாரிமன் பாயிண்ட் சதுக்கத்தில் உள்ள டிரைடன்ட்  ஹோட்டலில் 16 வது மாடியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘மீட் த கிங்ஸ்’ நிகழ்ச்சியில் M S தோனி, டிவைன் பிராவோ, ராஜவர்தன் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியிலிருந்து வந்திருந்தனர்.  மாயாஜால நிகழ்ச்சியை ‘மேஜிக் மென்டலிசம்’ என்ற யுக்தியின்   அடிப்படையில் அமைத்திருந்தேன். 

முதல் நிகழ்ச்சியாக ஒரு நூலை தோனிடம் கொடுத்து  நூலிலிருந்து ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து மனசுக்குள்  வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் மனதை வாசித்து அந்தச்  சொல்லை நான் சரியாகச் சொல்வேன். அதன்படி தோனி நினைத்திருந்த சொல்லைச் சரியாகச் சொன்னேன். இது தோனியின் முதல் ஆச்சரியம்.

தோனியின் உணர்வுகளை ‘கூடு விட்டுக் கூடு பாயும்’ அடிப்படையில், ஒரு பொம்மைக்குள் கொண்டு வந்து…   தோனியின் கண்களை மூடச் செய்து… ஐந்து அடி தூரத்தில்  தோனியின் பின்னால் நின்றுகொண்டு, பொம்மையின் கை, கால், முதுகு என்று பல பாகங்களில் நான் தொட…. அதைப் பார்வையாளர்கள், மேடையில் இருக்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் பார்ப்பார்கள்.

விக்னேஷ் பிரபு,தோனி

ஆனால் கண்ணை மூடியிருக்கும் தோனியால் பார்க்க முடியாது. நான் பொம்மையின்  பல பாகங்களைத் தொட தோனி அந்தத் தொடுதலைத் தனது உடலில் உணர்ந்து முதுகில், கையில், காலில்  தொடப்படும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது என்பார். அது சரியாக இருக்கும். இது தோனியின் இரண்டாவது  ஆச்சரியம்.

இறுதியில் தோனியின் கையில் குச்சியில் கட்டப்பட்ட    ஊதப்பட்ட பலூன் ஒன்றைக் கொடுத்து தோனியைப்  பிடிக்கச்  சொன்னேன். தோனியின் பின்புறம் தொனிக்குத் தெரியாதது மாதிரி நன்றாகத் தள்ளி நின்றுகொண்டு அந்தப் பொம்மையின் கையில் ஊசி கொண்டு குத்துவேன். தோனி பிடித்திருக்கும் பலூன் தோனி ஒன்றும் செய்யாமலே சத்தத்துடன் ‘படார்’ என்று  வெடித்தது.”

மேஜிக் கலைஞர் விக்னேஷ் பிரபு, தரையிலிருந்து அந்தரத்தில் 168 அடி வானில் பறந்து சாதனை படைத்தவர்.  சென்னை ஷோரூமில் இருந்த பென்ஸ் காரை சென்னையில் மாயமாக மறையச் செய்து கோவையில் அடுத்த பத்து நொடிகளுக்குள் தோன்றச் செய்தவர்.

விக்னேஷ் பிரபு,தோனி

“சில காமிக்ஸ் கேரக்டர்கள் அம்பு மாதிரி பறப்பார்கள். தாவுவார்கள். தண்ணீரில் நடக்கிறேன் என்று நடந்து காட்டியவர்கள் உண்டு. தரையிலிருந்து சில அடிகள் அந்தரத்தில்  நின்று அதிசயிக்க வைக்கிறவர்களும் உண்டு. ஏரியில் கடலில் இரண்டு குழாய்களைக் கால்களில் பொருத்திக்கொண்டு பறந்து  சாகசம் செய்பவர்கள் இருக்கிறார்கள். நான் எந்தக் கருவிகளின் உதவியுமில்லாமல் திறந்த வெளியில் தரையிலிருந்து 168 அடி  உயரம் பறந்திருக்கிறேன். அந்த சாகசத்தை இருபத்துநான்கு   வயதில் செய்தேன். இப்போது இருபத்தெட்டு ஆகிறது.”

கணினித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு படித்திருக்கும்  விக்னேஷ், இந்தியாவின் முன்னணி மாயாஜாலக்காரர்.  மாயாஜாலத்தில் எட்டு தேசிய விருதுகளும்  மூன்று சர்வதேச  விருதுகளும் பெற்றிருப்பவர். தனது `சூ மந்திரக்காளி’  அனுபவங்களைத் தொடர்கிறார். “சிறுவயதிலிருந்தே  மேஜிக்  என்னைக் கவர்ந்துவிட்டது. தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும்  மேஜிக் நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்த்து மேஜிக் பழகிக்கொண்டேன். வீட்டில், பள்ளியில், அதைச் செய்து காட்டத் தொடங்கினேன்.

விக்னேஷ் பிரபு

வீட்டில் தொடக்கத்தில்  எதிர்ப்பு  கிளம்பினாலும், எனது ஆர்வத்தைக் கண்டு போகப் போக அனுமதித்தார்கள். நான் யாரிடமும்  சிஷ்யனாக இருந்து மேஜிக் பழகவில்லை. எல்லாம் நானே  கற்றுக்கொண்டது. எனது  மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு  வரவேற்பு  இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்  இருப்பதால் அதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கிறேன்.

 “மேஜிக் தொழிலிலும் பல பிரிவுகள் உண்டு. தொடக்கத்தில், பூவைப் புறாவாக்குவது, தொப்பியில் இருந்து புறாவை வரவழைப்பது, தொண்டைக்குள் கத்தியைச் செருகுவது போன்ற  வழக்கமான மாஜிக் செய்துவந்த நான் பிறகு அந்தரத்தில் பறக்க  முயற்சி செய்தேன்.  ‘மெண்ட்டலிசம்’ எனப்படும்  பிரிவிற்கு மாறினேன். மெண்ட்டலிசம் என்றால் ‘சிந்தனையால் சித்து வேலை செய்வது’ என்று சொல்லலாம். 

விக்னேஷ் பிரபு

மேஜிக் என்பது பொருள்களை வைத்துச் செய்வது.  மெண்ட்டலிசத்தில் பார்வையாளர்களின் மனதை தந்திரம் மூலம் கட்டுப்படுத்தலாம். அவர்கள் மனதை சில நிமிடம் உறைய வைத்துவிட்டு நான் மட்டும் இயங்குவதுதான் மெண்ட்டலிசம்.    கொஞ்சம் சைக்காலஜியும் ஹிப்னாட்டிசமும் எனக்குத் தெரியும். அவைதான் எனக்கு உதவுகின்றன…” என்கிறார், பறக்கும் மனிதர்  விக்னேஷ் பிரபு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.