கரூர் நகரில் பிறந்த 90’ஸ் கிட்ஸுகளின் ‘நாஸ்டாலஜியா’வைக் கிளறிவிடும்விதமாக, மூன்று பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்து, விதவிதமான மிட்டாய்கள், பொம்மைகள், தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த டெண்டுல்கர், ஜான்சேனா, ‘பாட்ஷா பட’ ரஜினி, வானத்தபோல படம், சக்திமான் உள்ளிட்டவர்களின் ஸ்டில்கள் என்று விற்பனைக் கடையை நடத்திவருகிறார்கள்.

90’ஸ் மிட்டாய்க் கடை

கரூரைச் சேர்ந்த மணிகண்டன், லோகநாதன், பாலமுருகன் என்ற மூன்று இளைஞர்கள் சேர்ந்துதான், அந்த ’90’ஸ் முட்டாய் கடை’யை ஆரம்பித்திருக்கிறார்கள்.

கரூர் மாநகரில் உள்ள காமாச்சியம்மன் கோயில், நடுத்தெருவில் இருக்கும் நல்லம் காம்ப்ளக்ஸில் இந்தக் கடை இயங்கிவருகிறது. ‘இந்த ஐடியா எப்படி உதயமானது?’ என்ற கேள்வியோடு, மணிகண்டனை சந்தித்துப் பேசினேன்.

மணிகண்டன்

“நான், லோகநாதன், பாலமுருகன்னு மூணு பேரும் நெருங்கிய நண்பர்கள். நான் பி.எஸ்ஸி விஷூவல் கம்யூனிகேஷன் முடிச்சுட்டு, ஸ்கைங்கிற பெயர்ல லோக்கல் கேபிள் டி.வி-யை ஆரம்பித்தேன். லோகநாதன், எம்.எஸ்ஸி முடிச்சுட்டு, என்னோட சேனல்ல கேமராமேன், எடிட்டிங்னு ஆல் இன் ஆலா(ளா) வேலைக்குச் சேர்ந்தான். பாலமுருகனோ, எம்.எஸ்ஸி படிச்சுட்டு, என்னோட சேனல்ல மார்க்கெட்டிங் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தான். நான், கடந்த 2019-ம் ஆண்டு அந்த சேனலை ஆரம்பித்தேன். இந்நிலையில், லோக்கல் சேனல் வருமானம் குடும்பத்தை நடத்தப் போதவில்லை. அதோடு, எனக்கும் திருமணம் ஆனது. இதனால், ‘கூடுதல் வருமானத்துக்கு என்ன பண்ணலாம்?’ன்னு யோசித்தேன்.

இந்நிலையில், யூடியூப் பார்த்தபோது, நாஸ்டாலஜியாவைக் கிளறும்விதமாக சிலர், 80, 90’ஸ் கிட்ஸ்கள் பயன்படுத்திய தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்கள் சம்பந்தப்பட்ட கடையை நடத்துவது தெரியவந்துச்சு. கரூரில் அப்படி யாரும் அதுவரை முயற்சி செய்யவில்லை. இந்த ஐடியாவை லோகநாதன், பாலமுருகன்கிட்ட சொன்னதும், அவங்களும் ஆர்வமாகி, ‘மூணு பேரும் சேர்ந்து பண்ணுவோம்’னு சொன்னாங்க. உடனே, மூணு பேரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கினோம். நாங்க தொண்ணூறுகளில் பிறந்தவங்கங்கிறதால, அப்ப பிறந்தவங்க பயன்படுத்திய மிட்டாய்கள், பொருள்களை வாங்கி விற்கலாம்னு முடிவு பண்ணினோம். முதல்ல, என்னென்ன பொருள்கள் எங்கங்கே கிடைக்குதுன்னு தேடினோம். மதுரையில் நிறைய பொருள்கள் கிடைச்சது.

90’ஸ் மிட்டாய்க் கடை

அதேபோல், சென்னை, சேலம்னு அலைஞ்சு, பல பொருள்களை விற்பனை செய்யும் இடத்தைக் கண்டுப்பிடிச்சோம். உடனே, கடந்த வருடம் ஆயுதபூஜை அன்று, ’90’ஸ் முட்டாய் கடை’ங்கிற பெயர்ல கடையை ஆரம்பிச்சோம். 40 வகையான மிட்டாய்கள், தொண்ணூறுகளில் பிரபலங்களாக இருந்த டெண்டுல்கர், பாட்ஷா பட ரஜினி, ஜான்சேனா, சக்திமான் உள்ளிட்டவர்களின் மற்றும் வானத்தைப் போல பட ஸ்டில்கள்னு தேடித்தேடி வாங்கி, விற்பனைக்கு வைத்தோம்.

அதேபோல், டாய்ஸ், பம்பரம், டபுள்யூ.டபுள்யூ.இ கார்டு, கோலி குண்டு, அம்பு காத்தாடி உள்ளிட்ட பல பொருள்களைப் பல ஊர்களில் தேடி வாங்கி, கடையில் விற்பனைக்கு வைத்தோம். தவிர, தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு குலுக்கல் அட்டை பற்றித் தெரியும். ஸ்க்ராட்ச் கார்டு விற்பனை செய்து, அதை ஸ்க்ராட்ச் செய்து வரும் எண்ணில் உள்ள பொருள்களை எடுத்துச் செல்ல முடியும். அந்தக் குலுக்கல் அட்டையையும் வைத்தோம். அதேபோல், பட்டம், டிக்கிடிக்கி, டாய்ஸ்னு 20 வகையான விளையாட்டுப் பொருள்களை விற்பனையில் சேர்த்தோம். ஆரம்பத்தில் ரெஸ்பான்ஸ் இல்லை. ஆனால், கடைக்கு வந்தவர்கள் பழைய தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிப் பார்த்துட்டு, அவர்களே பலருக்கும் சொன்னதால், போகபோக கூட்டம் வர ஆரம்பித்தது. பலரும் ரெகுலராக வர ஆரம்பிச்சாங்க.

90’ஸ் மிட்டாய்க் கடை

பக்கத்து மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் இருந்து ஒருவர் ரெகுலராக எங்க கடைக்கு பொருள் வாங்க வந்துகொண்டிருக்கிறார். அதேபோல், எங்க கடையைப் பற்றி ஆன்லைன்ல பார்த்துத் தெரிஞ்சுகிட்டு, பழனி, தாராபுரத்துல இருந்து வந்தாங்க. இதனால், மகிழ்ச்சியான நாங்க, 2k கிட்ஸுகளுக்கு என்னவென்றே தெரியாத இலந்தைப் பொடி, இலந்தை வடை, சிகரெட் மிட்டாய், சுத்துற மிட்டாய்னு பலவகை தின்பண்டங்களையும் விற்பனை செய்யத் தொடங்கினோம். இப்போது, 100 வகையான தின்பண்டம், விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்கிறோம்.

இந்த டேஸ்ட் புடிச்சுப்போய், 40 வயதைக் கடந்தவர்களும் சிறுபிள்ளைபோல் குஷியாக வந்து இதை வாங்கி உண்கிறார்கள். குறைந்தபட்சம் 6 வயதில் இருந்து அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவங்க, எங்க கடைத் தின்பண்டங்களுக்கு அடிமையாயிட்டாங்க. இப்போ உள்ள சின்னப் பசங்க முதல்ல வாங்கிச் சாப்பிடும்போது, ‘என்ன, இப்படி இருக்கு?’ன்னு கேட்பாங்க. ஆனால், போகப்போக அவர்களுக்கு டேஸ்ட் பிடிச்சுப்போகுது. அவர்களும் 90’ஸ் கிட்ஸுகளின் உண(ர்)வைப் பெற ஆரம்பிச்சுட்டாங்க. தினமும் இப்போது 20 பேருக்கும் குறையாமல் எங்க கடைக்கு வர்றாங்க. அதேபோல், தினமும் ரூ. 1000-த்துக்குக் குறையாம சேல் ஆகுது. மாதம் ரூ. 30,000-த்துக்கு பொருள்கள் விற்பனையாகுது. இன்னும் விளம்பரப்படுத்தினால், விற்பனை விகிதம் இன்னும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கு.

90’ஸ் மிட்டாய்க் கடை

அதேபோல், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் தினங்களில் ஆஃபர் போட்டோம். அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்து, இன்னும் அதிக பொருள்களைத் தேடிப் போய் வாங்கி வந்து விற்கணும், இன்னும் பல கிளைகளைத் தொடங்கணும்ங்கிற லட்சியத்தோட செயல்பட்டுக்கிட்டு இருக்கிறோம். தொண்ணூறுகளில் பிறந்தவங்களான நாங்கள் பெற்ற இன்பம், பெருக இவ்வூர் என்ற மோட்டிவ்தான், இந்தக் கடையை நடத்துவதற்கான முதன்மைக் காரணம். அதேபோல், ‘ஆண்ட்ராய்டு மொபைல் கேம்களே பேரின்பம்’ என்று நினைத்து வாழும் தற்போதைய தலைமுறைச் சிறுவர்களிடம், ‘அதெல்லாம் சிற்றின்பங்கள்; பட்டம் விடுதல், பம்பரம் சுற்றுதல், கோலி குண்டு அடித்தல் உள்ளிட்ட தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் விளையாட்டுகளே பேரின்பம்’ என்று உணர்த்தவும்தான் இந்த முயற்சி” என்றார்.

நானும் என் பங்குக்கு ஓர் இலந்தை வடையை வாங்கிப் பிரித்து வாயில் போட்டுச் சுவைத்ததும், என் நாவும் நானும் காலச்சக்கரத்தில் பயணித்து, தொண்ணூறுகளில் வாழ்ந்த உணர்வைப் பெற்றோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.