கரூர் மாநகராட்சியில் அருகம்பாளையம் பகுதிக்குட்பட்ட பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (33). இவர், கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிதி நிறுவனத்தில், கரூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (28), ஆனந்த் (27), மதன் (30) ஆகிய மூன்று பேர் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் பணிபுரிந்த காலத்தில் வரவு செலவு கணக்கில் குளறுபடி ஏற்பட்டதாலும், அவர்கள்மீது தினேஷ்குமார் சந்தேகமடைந்ததாலும், அவர்கள் மூன்று பேரையும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து தினேஷ்குமார் நீக்கினாராம்.

தினேஷ்குமார் வீடு

இதற்கிடையில், தினேஷ்குமார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, கௌதம் ரூ.3 லட்சம் ரூபாய்க்கு மேல் தினேஷ்குமாரிடம் பெற்றிருந்தாராம். இந்த நிலையில், மூன்று பேரையும் வேலையிலிருந்து நீக்கியதால், தான் கௌதமிடம் கொடுத்தப் பணத்தை நிதி நிறுவன உரிமையாளர் தினேஷ்குமார் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் கௌதம், ‘கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்பியா… அதெல்லாம் தரமுடியாது. உன்னால் முடிந்ததைப் பார்’ என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் கோபமடைந்த கௌதம், ஆனந்த், மதன் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு, நேற்று நள்ளிரவு பாலாஜி நகர்ப் பகுதியிலுள்ள தினேஷ்குமார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். கையோடு கொண்டு போயிருந்த பெட்ரோல் குண்டை, தினேஷ்குமாரின் வீட்டுச் சுவர்மீது மூவரும் வீசியிருக்கின்றனர். இந்தக் காட்சி தினேஷ்குமார் வீட்டின் முன்பு அமைத்திருக்கும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், தனது வீட்டுச் சுவர் கறுப்பாக இருப்பதைப் பார்த்த தினேஷ்குமார், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்திருக்கிறார். அப்போது, கௌதம் உள்ளிட்ட மூன்று இளைஞர்களும் நள்ளிரவில் தனது வீட்டின் சுவற்றின்மீது பெட்ரோல் குண்டை வீசும் காட்சி பதிவாகியிருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

தினேஷ்குமார் வீட்டில் போலீஸ் விசாரணை

இது தொடர்பாக, தினேஷ்குமார் அளித்தப் புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தை வைத்துக்கொண்டு, பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேரையும் வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் கைதுசெய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காக நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.