டெல்லி: நோயாளிகளிடம் நூதன மோசடி செய்த டாக்டர் – ஒரு மாதமாக கண்காணித்து தூக்கிய புலனாய்வு பிரிவு!

டெல்லியில் டாக்டர் மணீஷ் ராவத் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மணீஷ் ராவத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒருமாத காலமாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மார்ச் 10 மணீஷ் ராவத்தின் உதவியாளர் அவ்னேஷ் படேல், என்பவர் கல்யாண்புரியில் வசிக்கும் சிம்ரன் கவுர் என்ற பெண்ணைத் தொடர்புகொண்டு, அவரது கணவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை தேவை என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

ரூ.1.15 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சிம்ரன் கவுருக்கு கூறப்பட்டிருக்கிறது. .அதேபோல், மார்ச் 14-ம் தேதி, மதன் லால் என்ற நோயாளிகளின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.25,000, ரூ.30,000 என தொடர்ந்து மணீஷ் ராவத்தின் வங்கி கணக்குக்கு பணம் வந்திருக்கிறது. அதேபோல மணீஷ் ஷர்மா, குல்தீப் என்ற தனது கூட்டாளியின் கணக்கில் ரூ.30,000 வந்திருக்கிறது. மேலும், இது போன்று கிடைக்கும் பணத்தை முறையான வருமானமாக மாற்றுவதற்கு பரேலியைச் சேர்ந்த கணேஷ் சந்திரா மூலம் ஷெல் நிறுவனங்களுக்கு பணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் அம்பலமாகியுள்ளது.

மோசடி

இதுபோன்று மேலும் பல பரிவர்த்தனைகள் குறித்து தற்போது போலீஸ் சூப்பிரண்டு நுபுர் பிரசாத் தலைமையிலான சிபிஐ குழு ஆய்வு செய்து வருகிறது. நோயாளிகளிடம் பெரிய நோய் இருப்பதாக பொய்யாக கூறி அவர்களின் வீட்டாரிடம் உதவியாளர்கள் மூலம் பணம் பெற்று, அதை ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மணீஷ் ராவத்தின் மனைவியிடமும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் சதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளை பயன்படுத்தி வழக்கு பதியப்பட்டிருக்கிறது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.