சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கடளைக்கு சொந்தமாக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார், டி.ஜி.பி சைலேந்திர பாபு.

மாணவிகள் போராட்டம்

இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், இதை பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேரடியாக கலாஷேத்ராவுக்கு வந்து அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் ப்ரேம் ஆனந்த் சின்ஹா. “இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்தவிதமான புகாரும் வரவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறை மீது சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கலாஷேத்ரா கல்லூரியில் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

காவல்துறை

அது மட்டும் இல்லாமல் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்றது. குறிப்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக சென்று விசாரணை நடத்தியிருக்கிறது. கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணையம் சார்பாக டிஜிபியிடம்  கொடுக்கப்பட்ட புகாரையடுத்து முதற்கட்ட விசாரணையானது நடைபெற்றது. ஆனால் இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. அப்படி புகார் வரும்  பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மறுபுறம் இந்த குற்றச்சாட்டுக்களை நிர்வாகம் முழுமையாக மறுத்திருக்கும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், “பாலியல் தொந்தரவு பிரச்னைக்காக, போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் ஏப்ரல் 6ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விடுதியை உடனே காலி செய்து விட்டு செல்லும்படி கூறியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை – முதல்வர் ஸ்டாலின்

தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. 12-ம் தேதி தான் தேர்வு முடிகிறது. எனவே அதற்கு மேல் வீட்டுக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறோம். ஆனால் நிர்வாகம் இப்போதே போக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. நாங்கள் இப்போது எப்படி செல்ல முடியும். மேலும் எங்களுடைய கோரிக்கைளை இயக்குநரிடம் கூறினோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்” என்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், எஸ்.எஸ்.பாலாஜி, தி. வேல்முருகன், கு.செல்வப்பெருந்தகை, டி.ராமச்சந்திரன் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், “ஒன்றிய அரசினுடைய கலாசாரத் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்திரா பவுண்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரை தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து “பாலியல் தொல்லை” என ட்விட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதியது.

முதல்வர் உரை

இது தொடர்பாக, கலாஷேத்திரா பவுண்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல் துறைத் தலைவரைச் சந்தித்து. தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே செய்தி அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம். அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம் என 25-3-2023 அன்று டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள்.

பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்திராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

இந்த நிலையில் மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுண்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு. விவரங்களை அறிந்தேன்.

இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர். துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள். இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிருவாகத்தினருடன் பேசி வருகிறார்கள்.

மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தங்கள் மூலமாகத் தெரிவித்து அமைகிறேன்” என்றார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக தமிழக மகளிர் ஆணைய மாநிலத் தலைவி குமாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாணவிகளிடம் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

நன்றாகத் தேர்வு எழுத வேண்டும் எனவும் மாணவிகளிடம் கேட்டுக்கொண்டேன். பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகள் எழுத்துபூர்வமாகப் புகாரளித்திருக்கின்றனர். இது தொடர்பாக மாணவிகள் நான்கு பேர்மீது குற்றச்சாட்டு தெரிவித்திருக்கின்றனர். மாணவிகள் தெரிவித்த கருத்துகளை அறிக்கையாக அரசிடம் வழங்கவிருகிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.