மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபத்தில் புதிய சிற்பத் தூண்கள் நிறுவும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதம் அடைந்தது.

வசந்தராயர் மண்டபம் தூண் நிறுவும் பணி

இதைத் தொடர்ந்து தமிழக அரசு, ஸ்தபதிகள், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்து பாரம்பர்ய முறைப்படி மண்டபத்தினைப் புனரமைக்க முடிவு செய்து, அப்பணிக்காக ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன் பின்பு இப்பணியைச் செய்வதற்கு சிறந்த ஸ்தபதிகளைத் தேர்வு செய்யும் பணியும் நடந்தது.

சிறப்பு பூஜை

வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்கான தரமான கற்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டு அங்குள்ள குவாரியிலிருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மதுரைக்குக் கொண்டுவரப்பட்டன.

மதுரை செங்குளம் கிராமத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு சிற்பத் தூணாக உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே வசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன என்று மதுரை மக்கள் புகார் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில்தான் இங்கு வடிக்கப்பட்ட முதல் சிற்பத்தூண் கடந்த 27-ம் தேதி வீரவசந்தராயர் மண்டபத்தில் நிறுவப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கின.

கலெக்டர் அனீஷ் சேகர் – தக்கார் கருமுத்து கண்ணன்

இன்று காலையில் மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு ஓதுவார்கள் தேவார திருமுறைகள் ஓத, சிவாசார்யர்கள் வேதமந்திரங்கள் முழங்க, முதல் தூண் பிரம்மாண்ட எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது.

மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகியோர் தூண் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் அருணாசலம் பங்கேற்றனர்.

நிறுத்தப்பட்ட முதல் சிற்ப தூண்

இதைத் தொடர்ந்து மொத்தம் 40 தூண்கள் வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைக்கப்பட உள்ளன. இன்று தொடங்கிய பணியைக் கேள்விப்பட்டு மீனாட்சியம்மன் கோயில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வசந்தராயர் மண்டபப் பணி விரைந்து முடிந்து முன்பு போல் காட்சி தரவேண்டுமென்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.