இந்தியாவில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றாக ஷீர்டி விளங்குகிறது. இங்குள்ள சாயிபாபா கோயிலுக்குத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்காகக் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அதோடு பக்தர்கள் அனைவருக்கும் இலவச சாப்பாடும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்களின் பிள்ளைகள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிக்க நுழைவுத்தேர்வு எழுதுவதற்காகக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி கொடுக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கோயில் டிரஸ்ட் நிர்வாக அதிகாரி ராகுல் ஜாதவ் கூறுகையில், “நீட் மற்றும் ஜே.இ.இ.நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஆயிரம் பேருக்குக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி கொடுக்க கோயில் டிரஸ்ட் முடிவு செய்துள்ளது. இந்தப் பயிற்சியைக் கொடுக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 1000 பேரில் 200 பேருக்கு இலவச பயிற்சி கொடுக்கப்படும். 200 பேரில் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் 100 பேருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
தியாகிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் குழந்தைகள் 100 பேருக்கு இலவசப் பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சி நடத்துவதற்குத் தேவையான கட்டடம் மற்றும் இதர கட்டமைப்பு வசதியைக் கோயில் நிர்வாகம் வழங்கும். பயிற்சி கொடுக்கத் தேவையான ஆசிரியர்கள் இருக்கும் கோச்சிங் நிறுவனம் இதற்காகத் தேர்வு செய்யப்படும். ஆரம்பத்தில் ஆயிரம் பேருக்குப் பயிற்சி கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதேசமயம் அதிகமான மாணவர்கள் பயிற்சிக்காக விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி கொடுக்கப்படும்.

மேலும் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி தேவையான மாணவர்கள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். நாட்டில் எங்கிருந்தும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்குவதற்குக் குறைந்த கட்டணத்தில் இடவசதியும் செய்து கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே கோயில் நிர்வாகம் ஷீர்டியில் விமான நிலையம் கட்டுவதற்கும், குடிநீர் வசதி செய்வதற்கும் நிதியுதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.