“ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை” என்ற சொலவடையை தினம்தினம் உண்மையாக்கும் துறைகளில் ஒன்று காவல்துறை. தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு தற்போது பொன்விழா ஆண்டைத் தொட்டுள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு தபால் உறை வெளியீடு, பெண்களின் பாதுகாப்பிற்காக `அவள்’ திட்டம் அறிமுகம், மிதிவண்டி தொடர் பேரணி என பெண் காவலர்களைச் சிறப்பிக்கும் விதமாகவும், திறமைகளை வெளிக்காட்டும் விதமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வருக்கு, கமாண்டோவாக பெண்கள் இடம்பெற்றது கூடுதல் சிறப்பு.

“பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண் விழா” என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், மகளிர் காவலர்களை பற்றிய பல்வேறு சிறப்பம்சங்களைப் பகிர்ந்தார்…

  • சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு, ரயில்வே துறை, சி.பி.சி.ஐ.டி., போக்குவரத்து, உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு காவல் படை, இணைய குற்றப் பிரிவு, கமாண்டோ படை, முதலமைச்சர் பாதுகாப்பு படை என அனைத்துப் பிரிவுகளிலுமே மகளிர் காவலர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர் பணியிடங்களில், 503 காவல் ஆய்வாளர்கள் பெண்கள்தாம். அதாவது சட்டம்-ஒழுங்குபாதுகாப்பில் 37 விழுக்காடு பெண் காவல் ஆய்வாளர்கள் பணிபுரிகிறார்கள்.

  • காவல் பணிகளில் நிலைய எழுத்தர், சி.சி.டி.என்.எஸ். பணி, கணினிப் பிரிவு, நீதிமன்ற அலுவல், காப்புப் பணி, காணாமல் போனவர்களை இணைய உதவியுடன் கண்டறியும் பணி போன்றவற்றில் பெண் காவலர்கள் அளப்பரிய பங்களிப்பினைக் கொடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு பணியில் சேர்ந்த 21 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களில் 17 பேர் பெண்கள்.

  • 160 ஆண்டுக்கால பெருமைமிகு சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில், முதல் பெண் காவல் ஆணையரை நியமித்ததும், முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநரை அல்லது படைத்தலைவரை பணியமர்த்தியது திமுக அரசுதான்.

  • தற்போது கொரோனா தொற்றுக் காலத்தில், உயிரிழந்த காவலர்கள் உட்பட, பணியின்போது உயிர் துறந்திருக்கக்கூடிய காவலர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை அளிக்கும் விதமாக, காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களை உருவாக்கி 1,025 நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதில் 501 பணியிடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

  • பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, இளஞ்சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள, அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பது அனைத்துக்காவல் உட்கோட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 41 உட்கோட்டங்களில் இத்தகைய மகளிர் காவல் நிலையங்கள் இல்லாததால் 2021-ம் ஆண்டு 20 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

  • இந்த ஆண்டு கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உட்பட 19 இடங்களில் பெண்களின் நலன் காக்கும் விதமாக புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • இந்த ஆண்டு ஐ.நா. மகளிர் தினத்தை உலக அளவில், “புதுமைகளும், தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்’ (DigitALL: Innovation and Technology for gender equality) என்ற தலைப்பில் கொண்டாடுகிறது. ஆனால் இந்த இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம்.

  • நமது காவல் துறையைப் பொறுத்தவரையில், இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள்தான் செயல்படுத்துகிறார்கள். காவல் தொழில்நுட்பப் பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். விரல் ரேகைப் பிரிவில் புதிய தொழில்நுட்பமான நஃபிஸ் (NAFIS) மற்றும் ஃபேக்ட் 7 எனும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் விதமாக விரல்ரேகைப் பிரிவில், 72 பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

அடுத்ததாக பெண் காவலர்களுக்கான ஒன்பது அறிவிப்புகளையும் அறிவித்தார்…

  • பெண் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான `ரோல்-கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக எட்டு மணியாக மாற்றியமைக்கப்படும்.

  • சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.

  • அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.

  • காவல் நிலையங்களில் பெண் காவலர்கள் பணிக்கு வரும்போது தங்களின் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச் செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.

  • பெண் காவல் ஆளினர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் நினைவாக “கலைஞர் காவல் பணி விருது மற்றும் கோப்பை” ஆண்டுதோறும் வழங்கப்படும்.

  • பெண் காவலர்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.

  • பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

  • பெண் காவல் ஆளினர்களின் தேவைகள், பிரச்னைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, ‘காவல்துறையில் பெண்கள்’ எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

  • பெண் காவல் ஆளினர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் ‘பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு’ (Career Counselling) அமைக்கப்படும்.

இந்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.