கொரோனா காலத்தில் எத்தனையோ திருமணங்கள் நிச்சயித்த தேதியில் நடக்காமல் போனது. உறவினர்கள் இல்லாமல் குறைவான நபர்களுடன் திருமணங்கள் நடந்தன. ஆனால், தற்போது ஒடிசாவில் மணமகன் ஒருவருக்கு வேறு மாதிரியான பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயக்கடா மாவட்டத்தில் உள்ள பார்த்திகுடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். இவருக்கு அதே மாவட்டத்தில் இருக்கும் திபல்பாடு என்ற கிராமத்தில் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. காலையில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஒடிசாவில் வாகன ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எப்படியும் போராட்டம் திரும்ப பெறப்பட்டுவிடும் என்று மாப்பிள்ளை வீட்டார் நினைத்தனர்.

மாதிரி படம்

ஆனால் இரவான பிறகும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் வீட்டிற்குச் செல்லவேண்டும். என்ன செய்வது என்று ஆலோசித்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு தேவையான பொருட்களை இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தனர். பின்னர் மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 30 பேர் மணமகள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம் மணமகள் வீட்டார் மாப்பிள்ளை வருவாரா என்ற கவலையில் இருந்தனர்.

மணமகன் வீட்டார் விடிய விடிய நடந்தே மணமகள் வீட்டிற்குச் சென்றனர். மொத்தம் 28 கிலோமீட்டர் தூரம் நடந்து அதிகாலை 3 மணிக்கு மணமகள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களைப் பார்த்த பிறகுதான் பெண் வீட்டாருக்கு மகிழ்ச்சியே வந்தது. இதுகுறித்து மணமகன் நரேஷ் கூறுகையில், “திருமணத்திற்கு உறவினர்களை அழைத்துச்செல்ல 4 கார்களை ஏற்பாடு செய்து இருந்தேன். ஆனால் வாகன ஓட்டுனர்களின் போராட்டத்தால் கார்கள் வரவில்லை.

எனவே அனைவரையும் இரவு முழுக்க நடத்தியே மணமகள் வீட்டிற்கு அழைத்து சென்றோம். இது ஒரு நீண்ட நடைபயணம் என்றாலும், மறக்கமுடியாத ஒன்றாகும்” என்றார். காலை 3 மணிக்கு மணமகள் வீட்டிற்கு சென்றதும் தேவையான வசதிகள் செய்து கொடுத்தனர் என்றார். திட்டமிட்டபடி நரேஷிற்கு திருமணம் நடந்தது. நரேஷ் திருமணம் குறித்து கிராமம் முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது.

திருமண நாளை மறந்த மணமகன்

பீகாரில் குடிபோதையில் மணமகன் ஒருவர் தனது திருமண நாளையே மறந்துவிட்டார். பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் சுல்தான்கஞ்ச் என்ற கிராமத்தை சேர்ந்த ராகேஷ் என்பவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலையில் திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்குள் முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். மது அருந்திய பிறகு நன்றாக உறங்கிவிட்டார். காலையில் பெண் வீட்டார் திருமணத்திற்கு தயார் நிலையில் இருந்தனர். மணமகன் ஏதாவது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருக்கக்கூடும் என்று கருதி நீண்ட நேரம் காத்திருந்தனர்.

மாதிரி படம்

ஆனாலும் மணமகன் வரவில்லை. மணமகன் ரஞ்சித் வீட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் காலையில் அதிக நேரம் உறங்கிவிட்டார். உறங்கி எழுந்த போது திருமணத்திற்கு குறிக்கப்பட்டு இருந்த நேரம் கடந்துவிட்டது. உடனே மணமகள் வீட்டிற்கு சென்று உண்மை நிலவரத்தை எடுத்துக்கூறினார். திருமணத்தன்றே இப்படி குடித்தால் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வாரோ என்று கருதி இத்திருமணம் தனக்கு வேண்டாம் என்று மணமகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் மணமகன், மணமகள் வீட்டார் இடையே சண்டை ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு தீர்த்து வைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.