”உயிர் உங்களுடையது தேவி” – அகநக பாடலும் சுஹாசினி கூறிய காதல் ரகசியமும்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான அகநக நாளை மறுநாள் (மார்ச் 20) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்த பாகம் எதிர்வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.


இதற்கான புரொமோஷன் வேலைகளை தொடங்கியிருக்கிறது படக்குழு. அதன்படி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் அகநக நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தின் போதே இந்த அகநக படத்தின் பின்னணி இசையில் ஒலித்த போதே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்த நிலையில் அதன் முழு பாடலும் வெளியாக இருப்பது அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்திருக்கிறது.

இதனையடுத்து குந்தவை மற்றும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா மற்றும் கார்த்தியின் ஆடை வடிவமைப்பு குறித்த புரோமோ வீடியோக்களையும் தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுபோக கையில் வாள் ஏந்தியபடி குந்தவையாக த்ரிஷாவும், கண்ணை கட்டி மண்டியிட்டபடி வந்தியத்தேவனாக கார்த்தியும் இருப்பது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினியிடம், “மணிரத்னம் இயக்கத்தில் பிடித்த காதல் காட்சி எது?” என கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு “பொன்னியின் செல்வன் – 2 படத்தில் வந்தியத்தேவனுக்கும், குந்தவைக்கும் இடையேயான ஒரு காட்சி இருக்கிறது. அதுதான் மணிரத்னத்தின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த காதல் காட்சியாக உள்ளது. அது ரொம்பவே நன்றாக இருக்கும்.” என சுஹாசினி கூறியிருந்த வீடியோதான் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுஹாசினியின் இந்த பேச்சும், புதிதாக வெளியான அந்த போஸ்டரும் அகநக பாடலுக்கான எதிர்பார்ப்பை எகிர வைத்திருக்கிறது எனலாம். ஏனெனில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கோர்வையில் இருந்து மீண்டிடாத ரசிகர்களுக்கு அகநக பாடலுக்கான ஆவல் அதிகரித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM