​இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்றைய தினம் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமங் மாவட்டம், பாம்டிலா அருகே பறந்து கொண்டிருந்தது. சரியாகக் ​காலை 9:15 மணியளவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் அந்த ஹெலிகாப்டர் தகவல் தொடர்பை இழந்தது.

கௌஹாத்தி ராணுவ மரியாதை

இதையடுத்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் 5 குழுக்கள் அந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில், பாம்டிலாவுக்கு மேற்கே மண்டலா என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.​ ​இந்த விபத்தில் விமானி லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி, துணை விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

​இதில் ​உயிரிழந்த ​மேஜர் ஜெயந்த் (37) தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார்​. இவருக்கு​ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாரதா செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. ​மனைவியுடன் அருணாசலப் பிரதேசத்தில் தங்கி பணியாற்றி வந்த ஜெயந்த், விபத்தில் சிக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து… அவரின் உடல் இன்று நள்ளிரவு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, நாளை காலை ஜெயமங்கலத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படவிருக்கிறது. மேலும் ராணுவ மரியாதையுடன் ​இறுதிச்சடங்குகள் செய்யப்படவிருக்கின்றன.​ ​இந்த நிலையில், மேஜரின் சொந்த ஊரான ஜெயமங்கலம் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.​ ​

என்.சி.சி-யில் இருந்தபோது மேஜர் ஜெயந்த்

சோகத்தில் மூழ்கியிருந்த ஜெயமங்கலத்தில் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, மேஜர் ஜெயந்த் குறித்த நினைவுகளை அவரின் உறவினர்கள் பகிர்ந்தனர்.  ​

மேஜர் ஜெயந்தின் அத்தை ரஞ்சிதம் பேசுகையில், “என்னுடைய அண்ணன் ஆறுமுகம், அண்ணி மல்லிகாவுக்கு ஒரே மகன் ஜெயந்த். அண்ணன் எலக்ட்ரானிக்ஸ் வேலை செய்து வந்தார். ​பணி நிமித்தமாக மதுரை செல்ல வேண்டியிருந்ததால், குடும்பத்தை மதுரை எல்லீஸ் நகருக்கு மாற்றிவிட்டார். இதனால் ஜெயந்த் எல்லீஸ் நகர் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு அங்கேயே கல்லூரி படிப்பையும் முடித்தார். பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி-யில் சிறந்த மாணவராக திகழ்ந்தார். அதேபோல படிப்பிலும், விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார்.

ரஞ்சிதம்

அவரின் பாட்டி சீனியம்மாள், சித்தப்பாக்கள் என அனைத்து உறவினர்களும் ஜெயமங்கலத்தில் இருப்பதால் விடுமுறை தினங்களில் இங்கு வந்து செல்வார். மேலும் ஊர் திருவிழா, உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுச் செல்வார். எல்லோரிடமும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் பழகக் கூடியவராக இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொடுத்தோம். அவர்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் எங்களைவிட்டுப் பிரிந்து பேரிழப்பை ஏற்படுத்திச் சென்றுவிட்டார்” எனத் தொடர்ந்து பேச முடியாமல் அழுதுவிட்டார்.

ஜெயந்தின் சித்தப்பா மகன் கணேசன் பேசுகையில், “நானும் ராணுவத்தில் பணியாற்றி சர்வீஸ் முடித்துவிட்டு தற்போது தேனி கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர் வேலை செய்து வருகிறேன். சிறுவயதில் இருந்தே ஜெயந்த் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். குறிப்பாக நான் உட்பட ஜெயமங்கலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணியாற்றியிருக்கிறோம். இதனால் தானும் ராணுவத்தில் சேர வேண்டும் என உறுதியாக இருந்தார். அதனால்தான் பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி., விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். மாவட்ட, மாநில அளவில் நடந்த துப்பாக்கிச்சூடும் போட்டியில் முதலிடம் பெற்று பெஸ்ட் ஷூட்டர் என்ற பெயரெடுத்தார்.

கணேசன்

இதனால்தான் கல்லூரி முடித்த உடனே அவருக்கு ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு தேடி வந்தது. சென்னையில் ஓராண்டு பயிற்சியை முடித்துவிட்டு மத்தியப் பிரசேதசம் நாசிக்கில் தங்கி ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அங்கிருந்து அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்றார். 2016-ம் ஆண்டு தரைப்படைக்குரிய விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை முடித்துவிட்டு, விமானியாகப் பணி செய்து வந்தார். வழக்கம் போல அருணாசலப் பிரதேச எல்லையோர ரோந்துப் பணிக்குச் சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டிருக்கிறது. தேசத்தையும், ராணுவப் பணியையும் நேசித்த அவரின் உயிர் பணியில் இருந்தபோதே போய்விட்டது” என்றார்.

ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வு ராணுவ வீரர் முத்துபாண்டியன் பேசுகையில், “ `பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து வரும் இளைஞர்கள் சிப்பாய்களாக மட்டுமே ராணுவத்தில் சேருகின்றனர். இயல்பாகவே உடல்வலிமை மனஉறுதி கொண்ட கிராம இளைஞர்கள் ராணுவ அதிகாரிகளாக ஆக வேண்டும். அதற்கு அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ எனக் கூறுவார். பணிகாலம் முடிந்தவுடன் தொடர்ச்சியாக இதை செய்ய வேண்டும் என்றிருந்தார்.

முத்துபாண்டியன்

ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும், இது குறித்து இளைஞர்களிடம் பேசுவார். ஒரு முறை எங்கள் ஊரைச் சேர்ந்த ஓர் இளைஞர் வடபகுதியில் ராணுவப் பணியில் இருந்த தகவலறிந்து ஹெலிகாப்டரில் சென்று சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அதிகாரியாக இருந்தபோதும் எந்தவித ஈகோவும் அவரிடம் இருந்தது இல்லை. எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது” என நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.