பெண் கொலை; உருளைக்கிழங்குடன் சமைக்கப்பட்ட மனித `இதயம்’ – அடுத்த கொலை… நடு நடுங்கச் செய்த கொடூரன்!

அமெரிக்காவின் ஒக்லஹோமாவைச் சேர்ந்தவர் 44 வயதான லாரன்ஸ் பவுல் ஆன்டர்சன். இவருக்கு 2017-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் 2019-ல் இவரது தண்டனைக் காலத்தை ஒன்பது ஆண்டுகளாகக் குறைத்தார். ஆனால் ஆண்டர்சன் மூன்று ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறை

இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான லாரன்ஸ், ஒரு சில வாரங்களிலேயே மூன்று கொலைகளைச் செய்திருக்கிறார். அதாவது 2021-ம் ஆண்டு ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் எனும் பெண்மணியின் இதயத்தை வெட்டி அவரைக் கொடூரமாகக் கொன்றிருக்கிறார். அதோடு லியோன் பை (67), அவரின் 4 வயது பேத்தியையும் கொன்றிருக்கிறார். லாரன்ஸ் தற்போது இந்தக் குற்றங்களை ஏற்றுக்கொண்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில், “லாரன்ஸ், கடந்த 2021-ம் ஆண்டு ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் எனும் 41 வயது பெண்மணியைக் கொன்றிருக்கிறார். பின்னர், இறந்த பெண்ணின் உடலிலிருந்து இதயத்தை வெட்டி எடுத்து, இறந்தவரின் மாமாவான, லியோன் பை வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, இதயத்தை உருளைக்கிழங்குகளுடன் சேர்த்து சமைத்திருக்கிறார். பின்னர் லியோன் பை, அவரின் பேத்தியான கேயோஸ் யேட்ஸையும் கொல்வதற்கு முன்பு, சமைத்த அந்த இதயத்தை அவருடைய அத்தை டெல்சி பைக்கும், மாமாவுக்கும் பரிமாற முயன்றிருக்கிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

கொலை

மேலும் இதுபற்றி மாவட்ட வழக்கறிஞர் ஜேசன் ஹிக்ஸ் பேசுகையில், “ஓக்லஹோமா மாநில புலனாய்வுப் பணியகத்தின் ஆதாரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நான் அதை மதிப்பாய்வு செய்த பிறகு, வாரக்கணக்கில் இரவில் விழித்திருந்தேன். இந்த வழக்கில் லாரன்ஸ் சிறையிலிருந்து வெளியே வரமாட்டார் என்பதை உறுதி செய்யும்விதமாக உத்தரவு வழங்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த உத்தரவு யாராலும் மாற்ற முடியாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு

இது எனது அலுவலகத்துக்கு மட்டுமல்ல, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இந்தக் குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டன” என்று கூறினார்.