`முழு வெளிச்சம் படர்ந்திருக்கும் நாளில், நான் சூரிய அஸ்தமனத்தைப் பற்றி நினைக்க விரும்புவதில்லை.’ – ஷாகிரா இசபெல் மெபாரக் ரிபோல்

கொலம்பியா. பாரான்குயில்லாவில் (Barranquilla) இருந்தது அந்தப் பள்ளி. அங்கேதான் அந்தச் சிறுமி படித்துக்கொண்டிருந்தாள். செகண்ட் கிரேடு. இசையில் பேரார்வம். பள்ளியில் சேர்ந்திசைக்குழுவுக்கு (Choir), மாணவர்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். மாணவர்களைப் பாடச் சொல்லிக் கேட்கும் தேர்வு. சிறுமியும் போனாள். பாடச் சொன்னார்கள். அவள் தனக்குத் தெரிந்ததைப் பாடினாள். ஹாலில் இருந்தவர்களை அதிரவைத்தது அவள் குரல். அவ்வளவுதான். “நிறுத்து… நிறுத்து…’’ என்று ஒரு சத்தம்.

ஷாகிரா | Shakira

சிறுமி பாடுவதை நிறுத்திவிட்டு எதிரே பார்த்தாள். சத்தம் கொடுத்தது இசை ஆசிரியை. “ஐயய்யோ… இந்த மாதிரி கர்ண கடூரமான குரலை நான் கேட்டதே இல்லை. குரலா இது… ஆட்டுக் குரலைவிடக் கேவலமா இருக்கு. முதல்ல நீ கெளம்பு சொல்றேன்…’’

அந்தச் சிறுமி தலைகுனிந்தபடி வெளியேறினாள். ஆனால், தான் பாடகியாக வேண்டும் என்கிற லட்சியத்தை மட்டும் அந்தச் சின்னப் பெண் விட்டுவிடவில்லை. பிற்காலத்தில் பாடகியாகவும் ஆனார். சும்மா இல்லை… `லத்தீன் இசையின் ராணி’ (Queen of Latin Music) என்று புகழ் பெறும் அளவுக்கு வளர்ந்தார். அவர், ஷாகிரா இசபெல் மெபாரக் ரிபோல் (Shakira Isabel Mebarak Ripoll).

வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவோ சம்பாதித்துவிட்டார், எத்தனையோ விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டார் ஷாகிரா. அவையெல்லாம் சாதாரணமாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. தனக்கு எதிராகக் கிளம்பி வந்த அத்தனை தடைகளையும் அவர் உடைத்தார்… ஒவ்வொன்றாக, நிதானமாக!

கொலம்பியாவிலுள்ள பாரன்குயில்லாவில், 1977-ம் ஆண்டு பிறந்தார் ஷாகிரா. அவருக்கு இரண்டு வயதானபோது அது நடந்தது. அவருடைய மூத்த சகோதரன், (வேறொரு தாய்க்குப் பிறந்தவர்) ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமடைந்தார். அந்தத் துயரம் ஷாகிராவின் தந்தை வில்லியம் மேபாரக்கை வாட்டி வதைத்தது. அவர் சின்னதாக ஒரு பிசினஸ் நடத்திக்கொண்டிருந்தார். மகன் இறந்த பிறகு அவரால் பிசினஸில் கவனம் செலுத்தவே முடியவில்லை. சதா துயரத்தைத் தேக்கியிருக்கும் கண்கள். அதை மறைப்பதற்காகவே கறுப்பு கண்ணாடியை அணிய ஆரம்பித்தார். அது அவருடைய மற்றோர் உடல் உறுப்புபோல முகத்திலேயே நிரந்தரமாகத் தங்கிப்போனது. ஈடுபாடில்லாத பிசினஸ் என்னவாகும்… நொடித்துப்போனது.

ஷாகிரா | Shakira

ஷாகிரா குடும்பத்திலிருக்கும் ஒவ்வோர் உடைமையாக கைநழுவிப்போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். வசதியான வாழ்க்கை வாழ்ந்தது கனவுபோலாயிற்று. நெருக்கடிகள். இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் அப்பா அம்மாவின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்தார் ஷாகிரா. அப்பாவுக்கு ஒரு பழக்கம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு டைப்ரைட்டருக்கு முன்னால் அமர்ந்துகொள்வார். மனதில் தோன்றியதை டைப்ரைட்டரில் அடிப்பார். கதை, கட்டுரை என எதையாவது டைப் அடித்துக்கொண்டிருப்பார். அதைப் பார்க்கப் பார்க்க ஷாகிராவுக்கும் ஆசையாக இருந்தது. ஒருநாள், “கண்ணு… இந்த கிறிஸ்துமஸுக்கு உனக்கு என்ன கிஃப்ட் வேணும்?’’ என்று கேட்டார் அப்பா.

ஷாகிரா யோசிக்கவே இல்லை. “ஒரு டைப்ரைட்டர் வாங்கிக் கொடுங்கப்பா.’’

ஷாகிராவின் கைக்கு டைப்ரைட்டர் கிடைத்தபோது அவருக்கு ஏழு வயது. அடுத்த ஆண்டு டைப்ரைட்டரில் ஷாகிரா ஒரு பாடலை எழுதினார். அதுதான் அவரின் முதல் பாடல். `உங்கள் கறுப்பு கண்ணாடி’ (Your Dark Glasses) என்ற அந்தப் பாடலை தன் அப்பாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.

“நீ ஏம்மா இப்பிடி ஒரு பாட்டை எழுதினே?’’ அப்பா கேட்டார்.

“அப்பா, உங்களுக்காகத்தான் எழுதினேன். முதல்ல இந்த சோகத்துல இருந்து வெளியே வாங்கப்பா. அது எனக்கு ரொம்ப முக்கியம்ப்பா’’ என்ற ஷாகிராவை ஆதூரத்துடன் தழுவிக்கொண்டார் அப்பா.

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது குடும்பம். ஆனாலும் அப்பா, ஷாகிராவுக்குப் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். இரக்கம், பிறருக்கு உதவும் குணம் என்பதெல்லாம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அவ்வப்போது உணர்த்தி வந்தார். ஒருநாள் ஷாகிராவை ஊருக்கு வெளியே இருந்த ஒரு புறநகர்ப் பகுதிக்கு அழைத்துப்போனார். அங்கேயிருந்த மைதானத்தில் சில சிறுவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

“அந்தப் பசங்க என்னம்மா செய்யறாங்க?’’

“ஃபுட்பால் விளையாடுறாங்கப்பா.’’

“அவங்களைப் பார்த்தா என்ன தோணுது?’’

“விளையாடுறாங்க. அவ்வளவுதான். வேற எதுவும் தெரியலையேப்பா.’’

“நல்லாப் பாரு.’’

“ம்ஹூம்.’’

“அவங்க காலை கவனிச்சியா?’’

ஷாகிரா | Shakira

ஒரு கணம் பார்த்துவிட்டு ஷாகிரா சொன்னார். “ஆமாம்ப்பா. அவங்க யாரோட கால்லயுமே ஷூ இல்லை.’’

“இதுதாம்மா எத்தனையோ பேரோட வாழ்க்கையா இருக்கு. ஷூவோ, செருப்போ போட்டுக்கறதுக்குக்கூட வழியில்லாம எத்தனையோ பசங்க இந்த உலகத்துல இருக்காங்க.’’

“அப்பா ஒருநாள் நான் பெரிய பாடகியாகி, கைநிறைய சம்பாதிச்சு இந்த மாதிரி பசங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்ப்பா.’’ மகளை இறுக்கமாக அணைத்து, நெற்றியில் முத்தமிட்டார் அப்பா.

மற்றொரு நாள். அப்பா, ஷாகிராவை ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துப்போயிருந்தார். அங்கே ஒரு புது இசையைக் கேட்டார் ஷாகிரா. கேட்டவுடனேயே ஆடத் தூண்டும் ஒரு டிரம் இசை. மத்திய கிழக்கு இசை வகையில் அந்த டிரம் கருவியை டூம்பெக் (Doumbek) என்பார்கள். ஒரு பக்கம் மட்டும் தோலால் வடிவமைக்கப்பட்டிருக்கும் கருவி. அந்த டிரம் இசை ஒலித்துக்கொண்டிருக்க, ரெஸ்ட்டாரன்ட்டில் ஒரு பெண்மணி தன் இடுப்பை ஒடித்து ஒடித்து ஆடிக்கொண்டிருந்தார். அதை `பெல்லி டான்ஸ்’ என்றார் அப்பா. கொஞ்ச நேரம்தான். சட்டென்று மேசையில் ஏறினார் ஷாகிரா. அந்தப் பெண்ணைப்போலவே இடுப்பை வளைத்து வளைத்து ஆட ஆரம்பித்தார். மொத்த ரெஸ்டாரன்ட்டின் கவனமும் ஷாகிராவின் மேல் குவிந்தது. `யார் இந்தப் பெண்?’ என்று கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆட்டம் முடிந்ததும் அப்படி ஒரு கரவொலி. `இனி பாடுவதும் ஆடுவதும்தான் தன் வேலை’ என்று அன்றைக்கு முடிவு செய்துகொண்டார் ஷாகிரா.

ஷாகிரா | Shakira

பாட்டு… பாட்டு… பாட்டு. இதுதான் ஷாகிராவின் ஒரே லட்சியம். 1990-ம் ஆண்டு அவருடைய முதல் இசை ஆல்பம் வெளிவந்தபோது அவருக்கு 13 வயது. அதுவரை தான் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்து வெளியிட்டிருந்தார். கொஞ்சம் பேர் `நல்லாயிருக்கு’ என்று வாய் வார்த்தைக்குச் சொன்னாலும், அந்த ஆல்பம் முழுத் தோல்வி. அதற்காக அசரவில்லை ஷாகிரா. `தோல்வி என்று ஒன்று வந்துவிட்டதா… பாதகமில்லை. ஒரு செயலுக்குத் தோல்வி என்று ஒன்று கிடைக்குமானால், வெற்றி என்ற ஒன்றும் கிடைக்கும்தானே… பார்த்துவிடலாம்.’ அடுத்த ஆல்பத்தை வெளியிட்டார். அதிலும் தோல்வி. `இனி இந்தப் பெண்ணின் இசை வாழ்க்கை அவ்வளவுதான் என எல்லோரும் கணக்கு போட்டுக்கொண்டிருக்க, மூன்றாவதாக ஓர் இசை ஆல்பத்தை வெளியிட்டார். அது மெகா ஹிட். கொலம்பியாவில் இருந்த ரேடியோ ஸ்டேஷன்களெல்லாம் `நான், நீ’ எனப் போட்டி போட்டுக்கொண்டு அவருடைய பாடல்களை ஒலிபரப்பின.

அப்போது ஷாகிராவுக்கு ஒன்று புரிந்தது… `என் குரல் பலருக்குப் பிடித்திருக்கிறது. அல்ல… என் குரல் விசேஷமானது, வித்தியாசமானது என்று பலருக்குப் புரிந்திருக்கிறது.’ அதற்குப் பிறகு எத்தனையோ ஆல்பங்கள், விருதுகள். ஒரு கணக்குப்படி அவருடைய இசை ஆல்பங்கள் உலகம் முழுக்க, 75 மில்லியனுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன. பலமுறை இசைக்கான உயரிய கிராமி அவார்டு வாங்கியிருக்கிறார். மொத்தம் 342 விருதுகளைப் பெற்றிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்பின்போது அந்த நிகழ்வில் பாடும் வாய்ப்பும் ஷாகிராவுக்குத்தான் வழங்கப்பட்டது. எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும் அப்பாவிடம் சொன்ன வார்த்தைகளை மறக்கவில்லை அவர்.

ஷாகிரா | Shakira

ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் லட்சியம் கொலம்பியாவில் இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுப்பது. ஏழைக் குழந்தைகளுக்காகவே, தன் தொண்டு நிறுவனத்தின் மூலம் கொலம்பியாவில் ஐந்து பள்ளிகளை ஆரம்பித்தார். அங்கே 4,000 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு உணவும் கல்வியும் இலவசம். ஷாகிரா ஆரம்பித்த தொண்டு நிறுவனத்தின் பெயர் `பேர்ஃபுட் ஃபவுண்டேஷன் (Barefoot Foundation). `பேர்ஃபுட்’ என்றால் தமிழில் `செருப்பணியாத வெற்றுக் கால்கள்’ என்று அர்த்தம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.