13ம் இலக்கம் ஐரோப்பியர் மத்தியில் இன்றுவரை துரதிர்ஷ்டமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஸ்காண்டிநேவியர்களின் முக்கிய புராணமான நார்ஸ் புராணக் கதையில் (Norse Mythology) வரும் பல்டார் – லோகியின் கதை இதற்கான காரணத்தைச் சொல்கிறது.

சென்ற வார முடிவில், அருகில் வளரும் புல்லுருவிகளிடம் மட்டும் பல்டாருக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கவில்லை, ஏனென்றால் அந்த மிகச்சிறிய, எதற்குமே பயனில்லாத ஒன்றால் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை என்று லோகியிடம் சொல்கிறாள் ராணி ஃப்ரிகா. அதைக் கேட்டதும் லோகியின் திருட்டு மூளை உடனடியாக ஒரு திட்டத்தைத் தீட்டுகிறது.

ராணி ஃப்ரிகா | Queen Frigga

சிறு துரும்பும் உயிரை எடுக்க உதவுமா?

ராணி ஃப்ரிகாவிடம் இருந்து தனக்குத் தேவையான ஹின்ட் கிடைத்ததும் லோகி அங்கிருந்து விலகிச் சென்றார், ஆனால் யாரும் அதைக் கவனிக்கவில்லை. அடுத்து என்ன செய்திருப்பார் என்பதை உங்களால் இலகுவாகக் கணிக்க முடிந்திருக்கும் இல்லையா?! லோகி சிறிய புல்லுருவிகள் வளர்ந்த இடத்திற்கு தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடினார். அங்குச் சென்று தனது கத்தியால் புல்லுருவிகளைத் துண்டு துண்டாக ஒடித்து, உருட்டி, மெல்லிய அம்பாகும் வரை வடிவமைத்தார். பின்னர் விழா நடந்து கொண்டிருந்த மைதானத்திற்குத் திரும்பினார்.

மைதானத்தின் ஒரு மூலையில் பால்டரின் பார்வையற்ற சகோதரரான ஹோட் நின்றிருந்தார். பார்வை இல்லாத காரணத்தால் ஹோட் மட்டும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. லோகியின் கண்களுக்கு ஹோட் கழுத்தில் மாலை மாட்டப்பட்ட ஆடு போலத் தெரிந்தார். ‘ஆஹா இதுதான் நம் பலியாடு’ என மனதுக்குள் நினைத்துக்கொண்ட லோகி மெல்ல அவரை அணுகினார்.

“நீங்கள் ஏன் மகிழ்ச்சியான விளையாட்டில் பங்கேற்கவில்லை?” என்று கேட்ட லோகி, “அவர்கள் அனைவரும் உங்கள் சகோதரருக்கு மரியாதை செய்கிறார்கள். நிச்சயமாக நீங்களும் அதைச் செய்ய வேண்டும் அல்லவா?” என முதல் காயை மெல்ல நகர்த்தினார். “நான் பார்வையற்றவன். என் அன்பான சகோதரருக்கு மரியாதை கொடுப்பதில் நான் எப்படி மகிழ்ச்சியடைவேன்?” என்றார் ஹோட். “உங்கள் சகோதரர் பெற்ற வரத்தைக் கொண்டாட எல்லாரும் அவரை நோக்கி ஏதோ ஒரு ஆயுதத்தை எறிந்து, அவரை குஷிப்படுத்துகிறார்கள். நீங்கள் குறைந்தபட்சம் ஒரு சிறிய குச்சியையாவது எறிய வேண்டாமா?” என்று அடுத்த காயை நகர்த்தினார் லோகி.

லோகி

தொடர்ந்து, “இங்கே ஒரு சிறிய பச்சைக் குச்சி உள்ளது. அதை நீங்கள் எறியலாம். நீங்கள் எறியும் போது உங்கள் கையை நான் வழிநடத்துவேன். இதனால் நிச்சயம் உங்கள் அன்புச் சகோதரர் அகம் மகிழ்வார்” என்றார் லோகி. உடனே மகிழ்ச்சியான ஹோட் சிரித்துக்கொண்டே ஆர்வத்துடன் கையை நீட்டினார். லோகி புல்லுருவிகளைக் கொண்டு தயாரித்த அம்பை ஹோட்டின் கையில் வைத்து, கவனமாகக் குறி பார்த்து நேராக பல்டாரின் இதயத்தில் எறிந்தார். அடுத்த கணமே “ஆ!” என்ற ஒரு அலறலுடன் பல்டார் கீழே விழுந்தார். ஒட்டுமொத்த மைதானமுமே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனது. அதுவரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனக் கேளிக்கைகளில் திளைத்திருந்த அந்த இடமே மயான அமைதியாகியது. அடுத்த கணமே நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மக்கள் பல்டாரை நோக்கி ஓடினார்கள். என்ன நடந்தது என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஃப்ரிகாவுக்கோ பேரதிர்ச்சியாக இருந்தது.

நனவாகிய கனவு

பல்டார் இறந்து கிடந்தார். எது நடக்கக்கூடாது என்று உலகமே எதிர்பார்த்ததோ, அது நடந்துவிட்டது. பல்டாரின் இறப்பு வசந்தத்தின் முடிவு என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். பல்டார் கண்ட பயங்கரமான கனவு நனவாகியது!

ஆக்ரோஷமடைந்த மக்களின் கோபம் ஹோட் மீது திரும்பியது. அவரை துண்டு துண்டாகக் கிழிக்கத் தயாராக இருந்தனர். கடும் சொற்களால் மக்கள் அவரை வசை பாட ஆரம்பித்ததைக் காதால் கேட்ட ஹோட் “என்ன அது? நான் என்ன செய்தேன்?” என்று பரிதாபமாகக் கேட்டார். “என்ன காரியம் செய்தாய்? நீ பல்டாரைக் கொன்றுவிட்டாய்!” என்று கூச்சலிட்டார்கள். “இல்லை! இல்லை, இல்லவே இல்லை!” எனக் கதறிய ஹோட், “அப்படி ஒரு செயலை நான் செய்திருக்கவே முடியாது. என் சொந்த சகோதரனையே நான் கொல்லுவேனா? அதுவும் பார்வையற்ற இந்தக் குருடனால் அது சாத்தியமா? இங்கே இருந்த அந்தக் கிழவிதான் எறிவதற்கு ஒரு சிறிய மரக்கிளையைக் கொடுத்தாள். அவள்தான் என் கைகளைப் பிடித்துக் குறிவைத்து எய்தாள். அவள் ஒரு சூனியக்காரியாக இருக்க வேண்டும்! அவளை ஓடிச் சென்று பிடியுங்கள்” என்று கதறினார்.

பல்டாரின் இறப்பு

அங்கு வந்திருந்த கடவுள்கள் அத்தனை பேரும் எட்டுத் திசையிலும் சிதறி ஓடி அந்தக் கிழவியைத் தேடினார்கள். ஆனால் அவளோ மர்மமான முறையில் மறைந்து போனாள். அப்போதுதான் அவர்கள் மத்தியில் லோகி இல்லை என்பதைக் கவனித்தனர்.

மீள முடியா உலகுக்குச் சென்ற பல்டார்!

மரணத்தின் கடவுளான ஹெலாவிடம் பல்டாரை அனுப்ப அவர் உடலை ஓர் அழகான கப்பலில் ஏற்றி, அழுது புலம்பி அவரை வழியனுப்பி வைத்தார்கள். ஆனால் பல்டாரின் தாயான ராணி ஃப்ரிகா, மரண ராஜ்ஜியத்திலிருந்து பல்டாரை மீட்க ஏதாவது வழி இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஹெலாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார். என்ன இருந்தாலும் பெற்ற மனம் அல்லவா!

“என்னால் முடிந்தால் நான் அவரை விடுவிப்பேன்,” என்று மரணத்தின் அதிபதியான ராணி ஹெலா கூறினார். “ஆனால் என் இஷ்டத்துக்கு மட்டும் இங்கே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. பல்டாரை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. அதாவது பூமியிலுள்ள உயிருள்ள உயிரற்ற அனைத்தும் பல்டாரின் மரணத்திற்காக அழுதால், அவர் மீண்டும் உயிருடன் திரும்பலாம். ஒருவேளை ஏதாவது ஒருவர் அல்லது ஒரு பொருள் அழவில்லை என்றால் கூட பல்டார் என்னுடனேயே இருந்துவிட வேண்டும்” என்றார்.

Balder | பல்டார்

பல்டாரின் மரணத்திற்காக ஒவ்வொரு உயிரினமும் அழ வேண்டும் எனக் கடவுள்கள் உலகம் முழுவதும் செய்திகளை அனுப்பினர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏற்கெனவே அழுகையும் துக்கமும் இருந்ததால், அத்தகைய செய்திக்குத் தேவையே இருக்கவில்லை. தேவர்களுக்கு விரோதிகளான பூதங்கள் கூட பல்டாருக்காக அழுதன. ஒன்றைத் தவிர!

பல்டாரின் மரணத்தில் மகிழ்ந்த லோகி!

ஒரு பெரிய கறுப்புக் குகையிலிருந்த ஒரு வயதான பயங்கரமான ராட்சசி மட்டும் பல்டாரின் மரணத்துக்காக ஆழ மறுத்ததாக ராணி ஃப்ரிகாவுக்குத் தகவல் வந்தது. தூதர்கள் எவ்வளவோ கெஞ்சியும் கூட அவள் அழவில்லை. “பல்டார் எனக்கு ஒன்றுமில்லை. அவர் வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்குக் கவலையில்லை” என்று காட்டமாகப் பதிலளித்தான் ராட்சசி வேடத்திலிருந்த லோகி. ஆகவே அதுவரை உலகில் சிந்திய அத்தனை துளிக் கண்ணீரும் பயனற்றுப் போனது. மீளமுடியாத மரணத்துக்குள் பல்டார் ஆழ்ந்துபோனார்.

பல்டாரின் மரணத்தோடு உலகின் அனைத்து வசந்தங்களும் மறைந்து போயின. உலகின் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் கலைந்து போயின. சோகம், துக்கம், கவலை என அத்தனை எதிர்மறையான உணர்வுகளும் உலகை ஆட்கொண்டன.

இறந்துபோன பல்டார்

13ம் எண்ணின் துரதிஷ்டம்!

சரி இந்தக் கதைக்கும், 13ம் இலக்கம் துரதிர்ஷ்டம் எனக் கருதப்படுவதற்கும் என்ன தொடர்பு? பல்டாரின் கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 12 விருந்தாளிகளுக்கு மத்தியில், பதின்மூன்றாவது அழையா விருந்தாளியாக அந்த விழாவுக்கு லோகி வந்தான். அவன் வருகை உலகின் மிகச்சிறந்த கடவுளான பல்டாரின் உயிரைப் பறித்தது. பல்டாரின் மரணம் உலகின் மகிழ்ச்சியைக் குழைத்தது. சோகமும் கவலையும் உலகை நிரந்தரமாகச் சூழ்ந்து கொண்டன. அன்று முதல் பதின்மூன்றாம் இலக்கம் துரதிர்ஷ்டத்தைக் குறித்தது. 13 என்பது துயரத்தையும் துன்பத்தையும் கொடுக்கும் அதிர்ஷ்டமில்லாத எண்ணாக மாறியது. இன்றுவரை ஐரோப்பியர்களை எல்லாம் “பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என்று அஞ்சி நடுங்கி ஓடச்செய்கிறது பதின்மூன்றாம் நம்பர்.

யூரோ மித்ஸ் தெரிஞ்சிக்கலாமா?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.