திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தோளூர்பட்டியைச் சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மாணவர் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தேர்வு நெருங்குவதையொட்டி நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மாணவர்கள் சிலர் ஒருவர் மேல் ஒருவர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றனர். இதில் மகேஷுக்கும் சில மாணவர்களுக்கும் இடையே தகராறு நடந்திருக்கிறது. ஒருகட்டத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மகேஷை தாக்கியதோடு, அவரை கீழே தள்ளி விட்டிருக்கின்றனர். இதில் நிலைகுலைந்து போன மகேஷ் அருகிலிருந்த மரத்தில் முட்டி கீழே விழுந்திருக்கிறார்.

மரணம்

இதில் தலையில் பலத்த காயமடைந்து மகேஷ் அலறித் துடிக்க, உடனே ஆசிரியர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைகளை கொடுத்து, மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மகேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘வரும் வழியிலேயே இறந்துவிட்டார்’ எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஷின் குடும்பத்தினர், உறவினர் பலரும் பாலசமுத்திரம் அரசுப் பள்ளியின் முன்பு போராட்டத்தில் இறங்கினர். மகேஷின் இறப்புக்குக் காரணமான மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கொதித்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களையும் தனியே அழைத்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே பள்ளியில் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுவிட்டதாக செய்தி கிளம்ப, பெற்றோர்கள் பலரும் பள்ளிக்கு பதறியடித்து ஓடிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

என்ன நடந்ததென முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் அவர்களிடம் பேசினோம். “மாணவர்கள் ஒருவர்மீது ஒருவர் சிறுசிறு கற்களை வீசி விளையாடிக் கொண்டு இருந்திருக்கின்றனர். அப்படி மகேஷ் மீது ஒரு மாணவர் கல்லை தூக்கிப் போட்டிருக்கிறார். அதற்கு மகேஷும் ஒரு கல்லை பதிலுக்கு தூக்கி வீச, அது தவறுதலாக இன்னொரு மாணவர் மீது பட்டிருக்கிறது. அதையடுத்து மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது 3 மாணவர்கள் சேர்ந்து மகேஷிடம் மல்லுக்கட்ட, கீழே இருந்த பள்ளத்தில் கால் இடறி மரத்தின் மீது மகேஷ் விழுந்திருக்கிறார்.

பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டம்

இதில் மகேஷின் பின்னந்தலையில் கடுமையான காயம் ஏற்பட, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார். சம்பவ இடத்திலிருந்த மாணவர்கள் அனைவரையும் விசாரித்த வகையில், மகேஷிடம் பிரச்னை செய்தது 3 மாணவர்கள் மட்டுமே என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்க, ‘விளையாட்டுக்காகத் தான் சண்டை போட்டோம். என்ன நடந்ததுன்னே எங்களுக்குத் தெரியலை’ என கதறி அழுதிருக்கின்றனர். அதையடுத்து அந்த 3 மாணவர்களையும் கைதுசெய்து நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பியிருக்கிறோம்”என்றார்.

மகேஷின் மரணத்தில் 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.