பாரம்பரிய உணவு வகைகளை பரவலாக்கும் நோக்கத்தோடும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயற்கை உணவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு உழவர் நலத்துறை சார்பாக இயற்கை உணவுத் திருவிழாவானது அண்மையில் நடைபெற்றது.

உணவுத்திருவிழா

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும்  இயற்கை விவசாயிகள், வேளாண் ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து இந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவை கண்டு இயற்கை உணவுகளின் தேவை பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தி கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பாரம்பரிய உணவு திருவிழாவின் முதல் நிகழ்வானது பள்ளி மாணவர்களின் பறை இசையோடும்  இயற்கை விவசாயிகளின் பேரணியோடும் தொடங்கியது. இந்த உணவுத் திருவிழாவை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

உணவுத் திருவிழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இயற்கை உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் ஆகியவை உணவு திருவிழாவில் தனி கவனத்தைப் பெற்றன.

அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய மிக முக்கியமான பல அரிய வகை நெல் ரகங்களும் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெற்று இருந்தன. மேலும், இயற்கை  முறையில் உருவாக்கப்பட்ட வாசனை திரவியங்கள், அழகுப் பொருட்கள் உள்ளிட்டவையும், பனை ஓலைகளை பயன்படுத்தி செய்யப்பட்ட குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் பொதுமக்களின் விற்பனைக்காக இங்கு சந்தைப்படுத்தப்பட்டிருந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழகம் முழுக்க இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு “இயற்கை காவலன்” என்கிற விருதும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த இயற்கை உணவு திருவிழாவை ஏற்பாடு செய்த “இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பின்” மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் உமையரசி அவர்கள் நம்மோடு பேசுகையில், “சுமார் 300 -க்கும்  மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் இந்த உணவு திருவிழாவுல நாங்க காட்சிப்படுத்தி இருக்கோம்! குறிப்பா சொல்லனும்னா கருப்பு கவுனி அரிசில  நாட்டுச்சர்க்கரையும், நாட்டு பசு நெய்யையும் கலந்து செஞ்ச சர்க்கரை பொங்கல், சிறு தானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு யெல்லாம் வச்சி செஞ்ச பாயசமுன்னு முழுக்க முழுக்க இயற்கை முறையில உற்பத்தி செய்யப்பட்ட  பல உணவுப் பொருட்களோட மகத்துவத்த பொதுமக்கள் கிட்டயும், குறிப்பா கிராமத்து மக்கள்  கிட்டயும் கொண்டு சேர்க்கணும் அப்படிங்கற நோக்கத்தோட இந்த உணவுத் திருவிழாவை நாங்க நடத்திக்கிட்டு வர்றோம்..!

செந்தில்

இந்த உணவு திருவிழாவுல இயற்கை உணவு வகைகள் மட்டுமில்லாம, இயற்கை முறையில உருவாக்கப்பட்ட வாசனை திரவியங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பன ஓலைகளைக் பயன்படுத்தி செய்யப்பட்ட குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மைகளையும் பொதுமக்களோட தேவைக்காக இங்க சந்தைப்படுத்தி இருக்கோம்..!

கொரோனா மாதிரியான உயிர் கொல்லி நோயெல்லாம் வந்த பிறகு நகரத்து மக்கள் கிட்ட இயற்கை உணவுகளோட முக்கியத்துவம் அதிகரிச்சி இருக்குன்னு தான் சொல்லணும்..!

ஆனா கிராமங்கள்ல இயற்கை உணவுகள் பற்றிய புரிதல்  இன்னும் ஏற்படல. அதுனால கிராமத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தனுங்குற நோக்கத்துலதான் திருவாரூர் மாவட்டம்  அம்மையப்பன் கிராமத்துல இந்த உணவு திருவிழாவை நாங்க ஏற்பாடு செய்தோம்..!

மேலும் ஐயா நெல் ஜெயராமன் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் வகைகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டுங்கற நோக்கத்தோடு இங்க காட்சிப்படுத்தி இருக்கோம்.

பொதுமக்கள் கிட்ட இயற்கை உணவுகள்தான் உடலுக்கு ஆரோக்கியமானது அப்படிங்கற விழிப்புணர்வு இருந்தாலும் ஆனா அதை வாங்கி பயன்படுத்துறது இல்ல. அதனாலதான் நம்ம நாட்டுல பல பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாம புதுசு புதுசா நோய் எல்லாம் வருது..!

இந்தியா முழுக்க விவசாயத்துல அதிகமா ஈடுபாடு கொண்டுள்ள  மாநிலங்கள்ன்னு பார்த்தா தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்கள் தான். ஆனா, இதே மாநிலங்கள்தான்  உயிரை கொல்லக்கூடிய புற்று நோயும் அதிகமா இருக்குன்னு பல ஆய்வுகள் சொல்லுது.

உணவுத்திருவிழா

இதுக்கெல்லாம் காரணம் விவசாயத்தில அதிக அளவு பயன்படுத்த படுற பூச்சிக்கொல்லி மருந்துகளும், ரசாயன உரங்களும் தான். இதை தடுக்கணும் அப்படிங்கிறது தான் இந்த உணவுத் திருவிழாவோட மிக முக்கியமான நோக்கமே…!

இந்த உணவு திருவிழாவில் உள்ள உணவுகள் எல்லாம் நஞ்சு கலக்காத உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்தான உணவு வகைகள் தான்..

ரெண்டு நாள் நடந்த இந்த உணவுத் திருவிழாவுல திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து இந்த இயற்கை உணவு வகைகளை  பார்த்தும், சாப்பிட்டும்  போனாங்க..!

அவங்களுக்கு இந்த இயற்கை உணவுகளோட டேஸ்ட் ரொம்ப புடிச்சி இருந்துன்னும் சொல்லிட்டு போனாங்க..

தொடர்ந்து தமிழக முழுக்க எங்க இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பா இதே மாதிரியான உணவுத் திருவிழாக்கள் பல கிராமங்கள்ள  முன்னெடுக்க இருக்குகோம்.

உலகம் முழுக்க  பல நோய்கள் அதிகரித்திருப்பதால இப்பதான் மக்களுக்கு இயற்கை உணவு பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கு.. இதை தமிழக அரசாங்கமும் ஊக்குவிக்கும் விதமா  இயற்கை விவசாயிகள அடையாளம் கண்டு அவர்களுக்காக பல நல்ல திட்டங்கள அரசு  முன்னெடுத்து வருது..!

இந்த காலத்துலயெல்லாம் பழைய சோறு  சாப்பிடுறத ஒரு கௌரவ கொறச்சலா பார்க்குறாங்க..! ஆனா அந்த பழைய சோத்துல தான் பல வகையான சத்துக்கள் இருப்பதா வெளிநாட்டு விஞ்ஞானிகள் சொல்லுறாங்க..!

அது மட்டுமில்லாம இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள்ல தான் எந்த நோய்க்கும் எதிரா செயல்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கு.

மக்கள் கிட்டயும் மாணவர்கள் கிட்டயும் இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திகிட்டு இருக்க இந்த “இயற்கை உணவுத் திருவிழா” இந்த காலகட்டத்திற்கு ரொம்ப அவசியமான ஒன்று..!” என்றார்.

இந்த உணவுத் திருவிழாவில் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், ”நோய்கள் வந்த பிறகுதான் நம்ம இப்போ இயற்கை உணவுகளை தேடி வந்துருக்கோம். மாணவர்கள்  கிட்ட அதுலயும் குறிப்பா கிராமத்து மாணவர்கள் கிட்ட இயற்கை உணவுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டிய கடமையும்,பொறுப்பும் நம்ம எல்லாருக்கும் இருக்கு! இந்த உணவு திருவிழா மூலமா படிக்கக்கூடிய மாணவர்கள் மத்தியில  இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினா அது பல மக்கள்கிட்ட போய் சேரும்..!

தொடர்ந்து மக்கள் எல்லாரும் இயற்கை உணவுகளை வாங்கி பயன்படுத்த தொடங்கினாதான் இயற்கை விவசாயிகளுக்கும் அதை அதிக அளவுல உற்பத்தி செய்யணுங்குற ஒரு ஆர்வம் வரும்!

உணவுத்திருவிழா

இயற்கை சார்ந்த உணவுப் பொருட்கள் தான் நமது  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தொடர்ந்து இது மாதிரியான உணவுத் திருவிழாக்கள பல மாவட்டங்கள்ல இயற்கை உணவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்தனும்னு  ரொம்ப அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.