பெங்களூரு தகவல் தொழில் நுட்ப நகரமாக இருப்பதால் கார்களின் எண்ணிக்கைக்கும் குறைவு கிடையாது. இதனால் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும். அப்படி ஒரு போக்குவரத்து நெருக்கடியை பயன்படுத்தி திருமணமான அடுத்த நாளே மனைவியை ஒருவர் அப்படியே காரில் விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூருவை சேர்ந்த விஜய் ஜார்ஜ் என்பவருக்கு கடந்த மாதம் 15-ம் தேதி திருமணம் நடந்தது. அடுத்த நாள் விஜய் ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு காரில் அங்குள்ள சர்ச் ஒன்றுக்கு சென்றார். சர்ச்சிற்கு சென்றுவிட்டு திரும்ப வந்துகொண்டிருந்த போது கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. அப்போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த விஜய் ஜார்ஜ் கார் கதவை திறந்துகொண்டு சாலையில் ஓட ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவியும் காரில் இருந்து இறங்கி தனது கணவனை விரட்டிச்சென்றார்.

திருமணம்

ஆனால் அவரால் கணவனை பிடிக்க முடியவில்லை. அப்படியே ஓடிவிட்டார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள அப்பெண் முயற்சி மேற்கொண்டார். ஆனால் முடியவில்லை. கடந்த சில நாட்களாக கணவன் வீட்டாரும், பெண் வீட்டாரும் இணைந்து விஜய் ஜார்ஜை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரில், “எனது கணவர் கோவாவில் வேலை செய்த போது அவருக்கு அங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. திருமணத்திற்கு முன்பே அது குறித்து என்னிடம் தெரிவித்தார். அதோடு அப்பெண்ணுடன் தொடர்பை துண்டித்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

எனவே அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். ஆனாலும் அப்பெண் தொடர்ந்து எனது கணவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதோடு இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்ட ஆரம்பித்தார். அப்பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அப்பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து அவர் ஓடிவிட்டார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையிலும் இருந்தார். அவர் பாதுகாப்பான முறையில் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இப்போது இருவீட்டாரின் குடும்பத்தோடு போலீஸாரும் விஜய் ஜார்ஜை தேட ஆரம்பித்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.