வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

கடந்த வாரத்தில் படித்த கட்டுரை பல கேள்விகளை எழுப்பியது.

கட்டுரையின் தலைப்பு ‘வட இந்தியர் எதிர்ப்பு நியாயமா?’ எழுதியவர் ஷாஜன்

தலைப்பை படித்ததும் ‘ஆம். இதிலென்ன சந்தேகம்?’ என்று தான் எண்ணத்தோன்றும். என்னுடைய கருத்தும் அதான். சத்தமில்லாமல் தமிழ்நாட்டில் ஊடுறுவிக் கொண்டே இருந்தால் தமிழனின் நிலை என்ன? ஆனால் கட்டுரையை முழுதும் வாசித்த பிறகு என்னுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

காரணம் இருக்கிறது. நான் வேலை பார்த்து கொண்டிருந்த கட்டுமானத் துறையில் அனைவருமே வடக்கிந்தியர்கள் தான். எண்ணூரின் (சென்னை) அடையாளமாக மாறியிருக்கும் வடசென்னை அனல் மின் நிலையம் தான் நான்கு ஐந்து வருடங்களுக்கு என்னுடைய புகலிடம்.

Representational Image

பொதுவாக பதினைந்து இருபது அடிக்கு கட்டிடங்கள் அனல் மின் நிலையங்களில் இருந்தாலும் பெரும்பாலானவை 200லிருந்து 350 அடிவரை உயரமிருக்கும். டர்பைன் கண்ட்ரோல் ரூம் 210 அடி, பாய்லர் 300 அடி, சிம்னி என்று அழைக்கபடுகிற புகை போக்கி 900 அடி என்று பிரம்மாண்டமாக இருக்கும். இந்த மாதிரியான உயரங்களில் தென்னிந்திய லேபர் ஒருவர் கூட வேலை செய்து பார்த்தது இல்லை.

மீஞ்சூரிலிருது வரும் தினக்கூலிகள் தரையில் மற்றும் சிறு சிறு கட்டிடங்களில் நடக்கும் கட்டுமான வேலைகளை மட்டுமே செய்வர். உயரங்களில் ஏறமாட்டார்கள். உங்களையும் என்னையும் போல அவர்களுக்கும் உயிர் மேல் இருக்கும் பயம். ஆனால் பீஹார் போஜ்பூரி உத்தர்ப்ரதேஷ் போன்ற மாநிலங்களில் இருந்த புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அவ்வாறு இல்லை. கம்பி மேலே மிக அநாயசமாக நடப்பதுண்டு. உச்சி வெயிலில் தகிக்கும் சூட்டில் அந்த ஸ்டீல் பீமில் 300அடி உயரத்தில் உட்கார்ந்து கொண்டு வெல்டிங் பற்ற வைப்பார்கள். காலை மேலே ஏறினார்கள் என்றால் மாலை தான் இறங்குவார்கள்.

வட மாநில தொழிலாளிகள்

யோசித்து பாருங்கள். பத்தாயிரம் பன்னிரெண்டாயிரம் என்று அவர்கள் சம்பளம் இருக்கும். சாப்பாடு அவர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் ஏழு நாட்களும் வேலை. ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் தூங்க நேரம் கிடைக்கும். அவர்களுடைய ஒரே ஆறுதல் ‘கைனி’ என்று சொல்லப்படுகிற தம்பாக்கு. கையில் கசக்கிவிட்டு வாயில் குதப்பிக்கொண்டே இருப்பார்கள். வேறு எந்த வித பொழுதுபோக்கும்‌ இல்லாமல் வருடம் மூச்சுடும் யந்திரம் போல வேலை பார்த்துக் கொண்டே இருந்தால் புத்தி பேதலித்துவிடும்.

அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. பார்சல் சொல்லிவிட்டு காத்திருந்த நேரத்தில் ஒனரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தேன்.

“ஏன் சார். ஷவர்மா போடுறதுக்கு தான் அசாம்லேந்து ஆள் கூட்டுட்டு வர்ரீங்க. அப்புறம் டேபிள் துடைக்க, சர்வர் வேலை எல்லா இடத்திலையுமே ஹிந்தி ஆளுங்களா இருக்காங்களே. நம்ம ஊருகாரங்க யாரும் கிடைக்கலியா?”

“நல்ல கேள்வி தான். ஆளு கிடைக்குறது மேட்டர் இல்ல. ஒழுங்கா வரமாட்டாங்க. அதான் பிரச்சினை. வந்தா அடிக்கடி லீவ் போட்ருவாங்க. திரும்பி வரமாட்டாங்க. இவங்க அப்டி இல்ல. ஒருதடவ வந்துட்டா ஒரு வருசத்துக்கு ஊருக்கு போக மாட்டாங்க. குறைஞ்ச பட்சம் ஆறு அல்லது எட்டு மாசம் வேற ஆள் பிடிக்கணும்னு தொந்தரவு இருக்காது. இங்க ஃபேமிலி கிடையாதா. ஹாஸ்பிட்டல், ஸ்கூல், தியேட்டர் அப்டினு எதுவும் கிடையாது. கடைய விட்டா ரூம், ரூம விட்ட கடை அப்டினுதான் இருப்பாங்க. வியாபாரத்துக்கு பிரச்சினை கிடையாது. சம்பளமும் கம்மிதான்” என்றார். அவர்களை வேலைக்கு நியமிப்பதே உங்களை என்னைப்போன்ற தமிழர்கள் தான் என்பதனை மறந்துவிடக்கூடாது.

வடமாநில இளைஞர்கள்

எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் 1300 மெகாவாட் உற்பத்திக்கு மொத்த கட்டுமான வேலை செய்தது ஹிந்தி தொழிலாளர்கள் தான். இரண்டு மூணு பெருங்கல்லை வைத்து நெருப்பு மூட்டி அவர்கள் சமைப்பதை பார்த்தால் பாவமாக இருக்கும். தினப்படி இதான் வாழ்க்கை. இதில் மிச்சம் பிடித்து வீட்டிற்கு வேறே அனுப்புவார்கள். சின்ன பைய்யன் முதற்கொண்டு அங்கிருப்பான். ‘ஹேய், ச்சோட்டு’ என்றழைப்பார்கள். நம்மவர்கள் துபாய், மலேசியா என்று வெளியேறி உடல் உருக்கி ஊன் சுருக்கி மிச்சம் பிடித்து அனுப்புவதற்கு சற்றும் குறைச்சலில்லை இந்த காட்சி. நாம் நாடு விட்டு நாடு செல்கிறோம். அவர்கள் உள்ளூரிலேயே அகதிகளாக திரிகிறார்கள்.

இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் கதிகலங்குகிறது. ஒரு முறை சைட் இன்ஸ்பெக்ஷன் முடித்துவிட்டு அருகில் இருக்கும் கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ‘தட்’ என்று ஒரு சத்தம் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அப்பால் கூச்சல். என்னவென்று சைட்டுக்கு ஓடிச்சென்று பார்த்தால் 800 அடி உயரத்திலிருந்து ஒரு லேபர் கீழே விழுந்து இறந்து கிடந்தார். அதுவும் எப்படி? 800 அடியிலிருந்து 650 அடி, 400 அடி, 350 அடி, 200 அடி என ஒவ்வொரு பக்கமும் இடித்து கீழே விழுந்த போது உடல் இரண்டு துண்டாகி கிடந்தது.

வட மாநில தொழிலாளிகள்

வயிற்றுக்கு மேலே ஒரு பக்கம். வயிற்றுக்கு கீழ் இன்னொரு பக்கம். ஒப்பந்ததாரர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து உடலை மூட்டையாக கட்டி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். கைகாட்டி வழியனுப்பி வைத்த ஒருவரை மூட்டையாக பெற்றுக்கொள்வது என்பது ஒரு தாய்க்கோ, மனைவிக்கோ, குழந்தைக்கோ வாழ்நாள் சாபம். கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாலும் வந்து முட்டும். இருந்த நான்கு ஐந்து வருடங்களில் குறைந்தது இருபதைந்து இறப்புகள். மின்சாரம் தாக்கி, ஒருவருக்கு தலையில் ஒரு ஸ்டீல் பிளேட் விழுந்து மூளை வெளியே சிதறி கடந்தது. ஒரு குறைந்தபட்ச துக்க அனுசரிப்பு கூட இல்லாமல் அன்றே உடலை அப்புறபடுத்திவிட்டு வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது இன்னும் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது.

இதே விபத்து நம்மவருக்கு நடக்காதா என்பதல்ல போட்டி. அவ்வளவு வேதனைகளைத் தாண்டிதான் இங்கு அவர்கள் வேலை செய்கிறார்கள்.

வட மாநில தொழிலாளிகள்

சொந்த மாநிலம் கைவிட்டுவிட்டது. அல்லது உற்பத்தி இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் அனுசரணையான விசாரிப்பு கூட வேண்டாம். வெறுப்பு உமிழாமல் இருக்கலாமே. வடக்கர்களால் தான் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. கஞ்சா அடித்துவிட்டு 200, 300 ரூபாய்க்கு நம்மவர்களே நம்மவர்களை வெட்டி சாய்த்த சம்பவத்தை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கொலை, கொள்ளை, ரேஷன் கார்டு, ஓட்டுரிமை போன்றவற்றை அரசாங்கம் கையாளட்டும்.

நாம் இந்த வெறுப்பு அரசியலை தூர எறிந்துவிட்டு வடக்கிந்தியர்களை இல்லை இல்லை வடமாநில மக்களை மனிதர்களாக பார்ப்போம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.