ஒரு திரைப்படத்தை காணும்போது முதல் 20-30 நிமிடங்களிலேயே நம்மால் அந்த படம் எப்படியான அனுபவத்தை கொடுக்கப்போகிறது என்பதை கணித்துவிட முடியும். மேற்படி அந்தப் படம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கலாம் அல்லது பெரும் அயர்ச்சி தரும் அனுபவமாக இருக்கலாம். ஆனால், அதற்கான அறிகுறி முதல் அரை மணி நேரத்திலேயே தெரிந்துவிடும். வுமன்ஸ் ப்ரீமியர் லீகை ஒரு திரைப்படமாக பாவித்துக் கொண்டால் தொடக்க இரண்டு நாட்களில் அது என்ன மாதிரியான அறிகுறியை கொடுத்திருக்கிறது என நினைக்கிறீர்கள்? நிச்சயமாக ப்ளாக்பஸ்டர்தான் எனும் நம்பிக்கையையே இதுவரை நடந்திருக்கும் மூன்று ஆட்டங்களும் கொடுத்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக குஜராத் ஜெயண்ட்ஸூக்கு எதிராக நேற்று உபி வாரியர்ஸின் க்ரேஸ் ஹாரிஸ் ஆடிய ஆட்டம் இருக்கிறதே! தோனி, பொல்லார்ட், ரஸல் போன்றோர் புல்லரிக்க வைக்கும் வகையில் ஒரு தரமான மேட்ச் வின்னிங் ஃபினிஷை கொடுத்ததை போன்று இருந்தது. வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் முதல் வெற்றிகரமான சேஸை ஒரு முரட்டுத்தனமான இன்னிங்ஸ் மூலம் சாத்தியப்படுத்தியிருந்தார் க்ரேஸ் ஹாரிஸ்.

Grace Harris

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதல் நாளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடி மோசமாக தோற்றிருந்தது. அந்த முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதுவுமே சாதகமாக அமைந்திருக்கவில்லை. 64 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தார்கள். அவர்களின் கேப்டன் பெத் மூனி காயம் காரணமாக வெளியேறியிருந்தார். இப்படி ஒரே எதிர்மறையான விஷயங்கள் மட்டுமே நடந்திருந்தது. அப்படியான சூழலில் இடைவெளியே இல்லாமல் அடுக்த நாளே உபி வாரியர்ஸூக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி களமிறங்கியது. முதல் போட்டியி செய்த தவறுகள் பலவற்றையும் இங்கே அவர்கள் செய்யவில்லை. குறிப்பாக, பேட்டிங்கில் ஒரு சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தனர். மேஹனா, ஹர்லீன் தியோல், கார்ட்னர், ஹேமலதா ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் குஜராத் அணி 170 ரன்களை உபி வாரியர்ஸூக்கு டார்கெட்டாக செட் செய்தது.

170 ரன்கள் என்பது பெண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் பெரும் சவால்மிக்க ஸ்கோர்தான். ஆக, தொடக்கத்திலிருந்தே குஜராத் ஜெயண்ட்ஸ் பக்கமாகவே இந்த போட்டி செல்லப்போவதை போன்று தோன்றியது. களத்திலுமே அதுதான் நடந்தது. சேஸிங்கின் போது உபி வாரியர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துக் கொண்டே இருந்தது. கிரண் நவிக்ரேவை தவிர யாருமே பெர்ஃபார்ம் செய்யவில்லை.

Grace Harris

15 ஓவர்கள் முடிகையில் உபி வாரியர்ஸ் அணி 100 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் உபி வாரியர்ஸின் வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டது. ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆண்கள் ஐ.பி.எல் லிலுமே கூட இது பெரிய சவால்மிக்க டார்கெட்தான். ஆக, குஜராத் எளிய வெற்றியை நோக்கி நகர்வதை போல இருந்தது. இந்த சமயத்தில்தான் க்ரேஸ் ஹாரிஸினால் அந்த ட்விஸ்ட் அரங்கேற தொடங்கியது. கடைசி 4 ஓவர்களில் 63 ரன்கள் தேவை எனும் நிலையிலிருந்து க்ரேஸ் ஹாரிஸ் காட்டடி அடிக்க தொடங்கினார்.

17, 18, 19 இந்த மூன்று ஓவர்களில் மட்டும் 44 ரன்களை உபி வாரியர்ஸ் எடுத்திருந்தது. முக்கிய பங்களிப்பை செய்தது க்ரேஸ் ஹாரிஸ்தான். கூட நின்ற எக்கில்ஸ்டனும் ஹாரிஸூக்கு சிறப்பாக சப்போர்ட் செய்திருந்தார். கடைசி ஓவரை போட்டி எட்டியது. கடைசி ஓவரில் உபி வாரியர்ஸூக்கு 19 ரன்கள் தேவை.

ஸ்ட்ரைக்கில் க்ரேஸ் ஹாரிஸ். கடைசி ஓவரை சதர்லாண்ட் வீச வந்தார். 16-19 இந்த 4 ஓவர்களில் சதர்லாண்ட் வீசியிருந்த 16 வது ஓவரில்தான் உபி வாரியர்ஸ் ரொம்பவே குறைவாக 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. நன்றாக வீசியிருந்த சதர்லாண்டே இறுதி ஓவரை வீச வந்ததால் சுவாரஸ்யம் இன்னும் கூடியது. ஆனால், க்ரேஸ் முதல் பந்தையே ஒரு புல் ஷாட் மூலம் மிட் விக்கெட்டில் பொளேரென சிக்சராக்கினார். இந்த போட்டியில் க்ரேஸ் ஹாரிஸ் லெக் சைடில் அடித்த ஷாட்கள் அத்தனையும் பயங்கர வலுவானவையாக இருந்தது. மொத்தம் 44 ரன்களை லெக் சைடில் மட்டும் அடித்திருந்தார். அடித்த அத்தனை ஷாட்களுமே க்ளியர் கட்டாக பவுண்டரியை கடந்திருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் அந்த புல் ஷாட் சிக்சருக்கு பிறகு ஆட்டத்தில் இன்னும் வேறு சில சம்பவங்கள் அரங்கேற தொடங்கியது. மைதானத்தில் மின்சாரம் தடைபட்டிருந்ததால் இரு அணிகளும் DRS ஐ எடுக்க முடியாது எனும் நிலை இருந்தது.

க்ரேஸ் ஹாரிஸூக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. முதல் பந்தில் சிக்சர் அடித்த மொமண்டத்தோடே அடுத்தடுத்த பந்துகளையும் உடனே எதிர்கொள்ள விரும்பினார். ஆனால், குஜராத் அணியின் கேப்டன் ஸ்நே ராணா ஆட்டத்தை கொஞ்சம் தாமதப்படுத்த முற்பட்டார். அதிர்ஷ்டவசமாக அதற்குள் DRS ம் வேலை செய்ய தொடங்கிவிட்டது. இந்த DRS ம் உபி வாரியர்ஸின் வெற்றியில் முக்கிய பங்களிப்பை செய்திருந்தது. இரண்டாவது பந்தை சதர்லாண்ட் ஒயிடாக வீச அம்பயரும் ஒயிடு கொடுத்தார். ஆனால், ஸ்நே ராணா ரிவியூ சென்றார். ஒயிடா இல்லையா என்பதை காண ரிவியூ. ரிவியூவில் அது ஒயிடுதான் என தீர்ப்பு வந்தது. அடுத்து 4 வது பந்திலும் சதர்லாண்ட் கொஞ்சம் ஒயிடாக ஒரு பந்தை வீசினார். ஆனால், இந்த முறை அம்பயர் ஒயிடு வழங்கவில்லை. இப்போது க்ரேஸ் ஒயிடுக்காக ரிவியூ எடுத்தார்.

Grace Harris

ஒரே ஓவரில் ஒயிடுக்காக இரண்டு ரிவியூக்கள். இந்த முறையும் தீர்ப்பு க்ரேஸூக்கு சாதகமாகத்தான் வந்தது. எக்ஸ்ட்ரா வகையிலேயே இரண்டு ரன்கள் உபி க்கு கிடைத்தது.

கடைசிக்கு முந்தைய ஒரு ஃபுல் டாஸ் பந்தை பெரிய சிக்சராக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் க்ரேஸ் ஹாரிஸ். முதல் இரண்டு போட்டிகளை போல ஒன்சைட் ஆட்டமாக இல்லாமல் இத்தனை நெருக்கமாக சென்றதற்கு க்ரேஸ் ஹாரிஸின் துடிப்பான ஆட்டமே முக்கிய காரணமாக இருந்தது. அவரின் அந்த கட்டுக்கடங்கா எனர்ஜியே பார்ப்பதற்கு ஆவலாக இருந்தது. பெவிலியினிலிருந்து கேப்டன் அலிஸா ஹீலியே கொஞ்சம் அமைதியாக இரு என்பதை போல சைகை காட்டியிருந்தார். அந்தளவுக்கு பரபரவென்ற உடல்மொழியை கொண்டிருந்தார்.

க்ரேஸ் ஹாரிஸ் ஆஸ்திரேலியாவின் வுமன்ஸ் பிக்பாஸ் லீகில் பிரபலமான வீராங்கனை. அங்கே அதிவேகமான சென்ச்சூரியையெல்லாம் அடித்திருக்கிறார்.

Grace Harris

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் லீகின் ஒரு போட்டிக்குப் பிறகு க்ரேஸ் ஹாரிஸ் ‘இப்போதெல்லாம் தோனியின் இன்னிங்ஸ்களை அதிகமாக பார்க்கிறேன். அவரின் ஆட்டத்திலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்’ என பேசியிருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து வுமன்ஸ் ப்ரீமியர் லீகில் தன்னை லேடி தோனியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார் க்ரேஸ் ஹாரிஸ்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.