இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (05-03-23) கோவை மாவட்டத்திற்கு வந்தார். கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று இறுதியாக, கோவை கொடிசியாவில் நடைபெற்ற தி.மு.க-வின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, பொற்கிளி வழங்கும் விழாவை முன்னெடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 20 மாவட்டங்களில் இவ்விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது கோவையிலும் 2000 பேருக்கு பொற்கிளி வழங்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலினின் 20 மாத கால அரசியலுக்குக் கிடைத்த வெற்றி தான் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி. இது இடைத்தேர்தல் மட்டுமல்ல. தி.மு.க-வின் எடைத் தேர்தலும் கூட.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘கையில் பாத்திரம் எடுங்க.. தட்டுங்க.. சத்தம் கேட்டு கொரோனா ஓடி விடும். விளக்கு ஏத்துங்க…’ என்று சொன்னார். கொரோனா போயிடுச்சா? கொரோனா தடுப்பூசி செலுத்தச் சொல்லி மக்களைக் கொரோனாவில் இருந்து காப்பாற்றியது திராவிட அரசு தான்.

சட்டமன்றத்தில் பேசும் போது ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ஸிடம் கூறினேன். `என்னுடைய வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள். கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள்’ என்று. ஆனால், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலய வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர்கள் இருவரும் பா.ஜ.க-வின் அடிமைகள். ஈ.பி.எஸ் ,ஓ.பி.எஸ் இரண்டு பேரும் கூட்டுக் களவாணிகள்.

பா.ஜ.க ஒரு ஆடியோ, வீடியோ கட்சி. ‘வெளிப்படையாக என்னைப் பற்றிப் பேசினால் உன்னுடைய ஆடியோ அனுப்புவேன் என்றும், நீ ஏதாவது பேசினால் உன்னுடைய வீடியோ அனுப்புவேன் ‘என்றும் மிரட்டும் கட்சி.

சமீபத்தில் பா.ஜ.க-விலிருந்து விலகிய நிர்மல் குமார் ‘எங்களுடைய தலைவர் மனநலம் குன்றியவர், 420’ என்று கூறியுள்ளார். இந்தியாவிலே எந்தவொரு கட்சியிலிருந்து விலகிய நபராவது கட்சித் தலைவரை இப்படி விமர்சித்து இருக்கிறாரா?. பா.ஜ.க-வினர் பொய் பரப்புகிறவர்களாகவும், வெறுப்பு அரசியல் செய்பவர்களாகவும் உள்ளனர்.

ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி உறுதியானவுடன் தான் தி.மு.க வெற்றியும் உறுதியானது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வை வெறுக்கிறார்கள்”, என்றார்.

இந்த விழாவில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “நாடாளுமன்றத் தேர்லுக்கான முதல் பணியை கோவையில் இருந்து துவங்கி வைக்கிறார் உதயநிதி. 16 அடி பாயும் ஸ்டாலினின் பின்னால், உதயநிதி 32 அடி பாய்ந்து மக்களின் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் ” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.