மூலிகைகள் என்றாலே அது காடுகளிலும், மலைகளிலும்தான் இருக்கும் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால்,  அவை சாதாரண வயல்களிலும், விவசாய நிலங்களிலும் வளர்கின்றன. பல விவசாயிகள் மூலிகை சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மூலிகை சாகுபடி என்றாலே சிறிய இடத்தில், சில மூலிகைகள் மட்டும் வளர்க்கும் முறையை மாற்றி 1.5 ஏக்கர் நிலத்தில் 3,000 வகையான மூலிகைகளை பயிரிட்டு வருகிறார்.

படயாத் சாகு | மூலிகை சாகுபடி

“ஆடு, மாடு, பூனை, நாய் என பலர் தங்கள் வளர்க்கும் கால்நடைகளையும், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளையும், தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதுவார்கள். ஆனால், நான் மூலிகைகளை என் குடும்பத்தின் ஒருவராக கருதி வளர்த்து வருகிறேன். என் வீட்டைச் சுற்றியும், நிலத்திலும் விதவிதமான மூலிகைகளை வளர்த்து வருகிறேன்” என்கிறார்.

இப்படி சொல்பவர் ஒடிசா மாநிலம், கலஹண்டி மாவட்டம், நந்தோல் பகுதியைச் சேர்ந்த படயாத் சாகு (Patayat Sahu).  இவர் தன்னுடைய 1.5 ஏக்கர் நிலத்தில் 3,000 மூலிகைகளை எந்தவித ரசாயனமும் போடாமல் இயற்கை விவசாய முறையில் வளர்த்து வருகிறார். வேலையாட்களை வைத்துக்கொள்ளாமல் அவரே தன்னுடைய தோட்டத்தைப் பாதுகாத்து, செடிகளை வளர்த்து வருகிறார். அவர் தன்னுடைய தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து மக்களுக்கு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார். 

“எனக்கு பெரிய அளவில் நிலம் இல்லை. நான் ஒரு சிறு விவசாயி. மூலிகைத் தாவரங்கள் பற்றிய புரிதலை சாதாரண மக்களிடையே வளர்க்க வேண்டும் என்று நினைத்துதான் அதிக அளவிலான மூலிகைகளை இங்கே வளர்த்து வருகிறேன். மூலிகைகளை வளர்ப்பது சிரமமான காரியமாக நான் நினைக்கவில்லை. யார்வேண்டுமென்றாலும் மூலிகைகளை வளர்க்கலாம். ஆர்வம் இருந்தால் போதும்” என்கிறார்.

படயாத் சாகு | மூலிகை சாகுபடி

இவருடைய மூலிகைத் தோட்டம் பற்றி பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பேசியிருக்கிறார். “சாகு தன்னுடைய விவசாய நிலத்தில் வளர்த்துள்ள மூலிகைகள் ஓர் ஆவணப் பதிவாக இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

படயாத் சாகுவின் முயற்சி ஒடிசா மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. இவருடைய முயற்சியையும் நோக்கத்தையும் பாராட்டி 2023-ம் ஆண்டுக்கான பத்மஶ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு.

மூலிகை முயற்சிகள் பெருகட்டும்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.