ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில், நம்பர் 7 ஜெர்சி அணிந்த இந்திய மேட்ச் வின்னரின் நேற்றைய ரன் அவுட்டானது, மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்களின் மனங்களை உடைத்துள்ளது.

நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில், வெற்றிக்கான ரன்களை எட்டும் நிலையில் இருந்த போது, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட்டான விதம், போட்டியை பார்த்துக்கொண்டிருந்த அத்தனை இந்திய ரசிகர்களின் மனதையும் உடைத்தது.

3 முறை பைனல், 7 முறை செமி பைனல் முன்னேறியும் ஒருமுறை கூட கோப்பை ஏந்தவில்லை!

இந்திய மகளிர் அணியானது, ஒருநாள் உலகக்கோப்பையில் 2005 மற்றும் 2017ஆம் ஆண்டு என இரண்டு முறை இறுதிப்போட்டிக்கும், 1997, 2000, 2009 என 3 முறை அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி உள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கும், 2009, 2010, 2018, 2023ஆம் ஆண்டுகளில் அரையிறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது.

image

ஆனால் இதுவரை ஒருமுறைகூட உலகக்கோப்பையை இந்திய அணியால் கைப்பற்ற முடியவில்லை. ஒருநாள் உலகக்கோப்பையில் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 9 ரன்களிலும், தற்போது நடைபெற்ற 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 ரன்களிலும் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி.

2 பைனல், 2 செமிபைனல் என 4 நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி!

2005 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2020 டி20 உலகக்கோப்பை, 2010, 2023 என 2 முறை டி20 உலகக்கோப்பைகளிலும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

image

தோனி Vsஹர்மன்ப்ரீத் ஜெர்சி நம்பர் 7-ன் ஹார்ட் ப்ரோக்கன் ரன் அவுட்ஸ்!

2019ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக வெற்றியை எட்டும் வகையில் இருந்த தருணத்தில், களத்தில் இருந்த மேட்ச் வின்னிங் வீரரான நம்பர் 7 ஜெர்சி அணிந்த எம் எஸ் தோனியை, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் தனது அபாரமான த்ரோவின் மூலம் ரன் அவுட் செய்து வெளியேற்றி, இந்தியாவிடம் இருந்த கோப்பை கனவை தனியொரு ஆளாக பறித்து சென்றார். நம்பர் 7 ஜெர்சி வீரரின் அந்த ரன் அவுட்டை கண்ட ரசிகர்கள், கேமரா மேன் முதற்கொண்டு, பெலியினில் இருந்த ரோகித் சர்மா முதலிய வீரர்கள் வரை அனைவரையுமே கண்ணீர் சிந்திவைத்தது. சொல்லப்போனால் இன்னும்கூட ஒவ்வொரு இந்திய ரசிகனின் மனதிலும் அந்நிகழ்வு நீங்காமல் வலியோடு தான் இருந்து வருகிறது.

image

இந்நிலையில் மீண்டும் அதேபோன்றொரு நிகழ்வை நிகழ்த்தி காட்டியுள்ளது மகளிர் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டி. ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பின்னர் ஜெமிமாவின் உதவியோடு, வெற்றிக்கான ரன்களை நல்ல ரன்ரேட்டில் விரட்டிக்கொண்டிருந்தார், நம்பர் 7 ஜெர்சி வீரரான ஹர்மன்ப்ரீத் ஹவுர். அவரின் சீரிய முயற்சியால் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தது இந்திய அணி.

அப்படியான தருணத்தில்தான், யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்தது அந்த ரன் அவுட். விக்கெட்டுகளில் நிச்சயம் 2 ரன்களுக்கான வாய்ப்பு முழுமையாக இருந்தது என்பதாலும், சுலபமாக எடுக்கும் ரன் என்பதாலும் மெதுவாக சென்றார் ஹர்மன்ப்ரீத். க்ரீஸுக்குள் அவர் பேட்டை எடுத்து செல்லும்போது, தரையில் குத்திய பேட், ஹர்மன்ப்ரீத்தின் கைநழுவி சென்று ரன் அவுட்டிற்கு வித்திட்டுவிட்டது. அந்த அவுட்டை ஏற்றுக்கொள்ள முடியாத ஹர்மன்ப்ரீத், பேட்டை தரையில் அடித்தபடி பெவிலியனிற்குள் சென்றார். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு நிகழ்ந்த அதே வலிமிகுந்த சம்பவம், மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துள்ளது.

ஏன் இருவரும் டைவ் செய்யவில்லை?

முன்னர் ஏன் தோனி டைவ் செய்யவில்லை, விக்கெட் சேவிற்காக அவர் அதை செய்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்த சில ரசிகர்கள், தற்போது ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்டையும் விமர்சனம் செய்து வருகின்றனர். இருவரும் ஏன் டை செய்யவில்லை என்றால், இருவரும் விக்கெட்டுகளில் சிறந்த ரன்னராக இருந்துள்ளார்கள் என்பது தான் உண்மையாக இருந்திருக்கிறது.

image

எம் எஸ் தோனி ரன் அவுட்களில் அவுட்டாகி வெளியேறுவது என்பது, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அரிதாகவே இருந்துள்ளது. 538 இண்டர்நேசனல் போட்டிகளில் விளையாடி இருக்கும் எம் எஸ் தோனி, 24 முறை மட்டுமே ரன் அவுட்டில் அவுட்டாகியுள்ளார். அதேபோல தான் ஹர்மன்ப்ரீத்தும். இவர் ரன் அவுட்டாகி வெளியேறி இருப்பது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு டி20 போட்டியில் ரன் அவுட்டாகி இருந்த ஹர்மன்ப்ரீத், 5 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ரன் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.

image

நேற்றைய ரன் -அவுட்டை பொறுத்தவரை, விக்கெட்களுக்கு இடையே 2 ரன்கள் முழுமையாகவே இருந்தது என்பது தான் உண்மை. ஆனால் அதிர்ஷ்டமின்மை என்பது 2019ல் ஆடவர் இந்திய அணியை துறத்தியது போலவே, 2023லும் மகளிர் அணியை துறத்தியுள்ளது! ஹர்மன்ப்ரீத் சரியாக 1727 நாட்களுக்கு பிறகு, நேற்றுதான் ஒரு ரன் அவுட்டை சந்தித்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு ரன் அவுட், அவரது வாழ்க்கையிலேயே ஒரு மோசமான ரன் அவுட்டாக மாறியுள்ளது துரதிஷ்டவசமானதுதான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.