பா.ம.க ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சார்பாக வேளாண் துறைக்கான நிழல் நிதிநிலையை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இங்கே இடம்பெறுகின்றன…

2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.

பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட்
 • வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

 • வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.18,500 கோடி செலவிடப்படும்.

 • பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.22,000 கோடி செலவிடப்படும்.

பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கான சிறப்பாண்டு…

 • 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண்நிழல் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு கடந்த காலத்தில் இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 2023-24ஆம் ஆண்டு தமிழ்நாடு இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

 • கடந்த 60 ஆண்டுகளில் பாசனக் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 9.03 லட்சம் ஹெக்டேரில் இருந்து 6.22 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. ஏரி, குளங்கள் மூலமான பாசனப் பரப்பு 9.41 லட்சம் ஹெக்டேரில் இருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது.

பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட்
 • பாசனப் பரப்பு குறைந்ததன் காரணமாக, 1970-71ஆம் ஆண்டில் 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு, 2018-19 ஆம் ஆண்டில் 45.82 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.

 • தமிழ்நாடு கடந்த காலங்களில் இழந்த 5.72 லட்சம் ஹெக்டேர் பாசனப் பரப்பில், குறைந்தது 3 லட்சம் ஹெக்டேர், அதாவது 7.5 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் மீட்டெடுக்கப்படும். இதற்காக ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.

வேளாண் திட்டங்களுக்கு நிதித் திரட்ட சிறப்பு வரி

 • வேளாண் பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புக் கூட்டுவரி மீது 10%, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீது 20%, மோட்டார் வாகன வரிகள் மீது 30% சிறப்புத் தீர்வை வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி திரட்டப்படும்.

 • தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,504இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.

 • ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும். 72 இலட்சம் டன் நெல் கொள்முதல் ரூ.3,600 கோடி ஊக்கத்தொகை

பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட்
 • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் சுமார் 33% மட்டுமே தற்போது அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை படிப்படியாக 80 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 • 2021-22ஆம் ஆண்டில் 43 இலட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் 72 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.

 • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,700 விலை வழங்கப்படும்.

 • 2023-24 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,000ஆக நிர்ணயிக்கப்படும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வேளாண் விலை பொருள் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்கள் கரும்பு வழங்கமுடியும். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட 30 நாட்களில் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்களின் வங்கிக் கணக்கில் கொள்முதல் விலை வரவு வைக்கப்படும்.

 • கொள்முதல் நிலையங்களில் வெளிமாநிலத்தவர்கள் நெல் விற்பனை செய்வதையும், முறைகேடுகளையும் தடுக்கும் நோக்குடன் உழவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.

 • வேளாண் தொழிலில் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன், வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப் படுத்துதல் ஆகிய 3 துறை சார்ந்த 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.

water savings

 உழவர் மூலதன மானியம்: பயனாளிகள் எண்ணிக்கை 60 லட்சமாக்கப்படும்…

 • மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 23.04 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 • தமிழ்நாட்டில் சிறு-குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.

 • தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் உழவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் தமிழக அரசே கொள்முதல் செய்யும்.

என்.எல்.சி. சுரங்கம்: வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது.

 • தமிழ்நாட்டில் எந்தத் தொழில் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது.

 • கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது. இதுதொடர்பான என்.எல்.சி.யின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காது.

 • தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசே நிர்ணயிக்கும்.

 •  காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

 • அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

சிறுதானிய விற்பனை நிலையங்கள்…

 • உழவர்கள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில் நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

 • மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.

 • தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறுதானிய உணவகங்கள் அமைக்கப்படும். அவற்றில் சிறுதானிய உணவுப் பொருட்களுடன் சிறுதானியங்களும் விற்கப்படும்.

 • தமிழ்நாட்டில் பெட்ரோலுடன் 20% எத்தனால் சேர்க்கப்படும்; எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இது 30%ஆக உயர்த்தப்படும்.

வெள்ள பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு

 • தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையிலும், அதற்குப் பிறகு பருவம் தவறி பெய்த மழையிலும் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

 • இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிரந்தர தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நெற்பயிர்

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும்.

 • கொங்கு மண்டலத்தை வளம் கொழிக்கச் செய்த நொய்யல் ஆற்றை மாசு மற்றும் கழிவுகள் கலப்பதில் இருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 • அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளில் 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவு கொண்ட ஏரிகளை மீட்டெடுப்பதற்காக, அரியலூர் சோழர் பாசனத் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும்.

நொய்யல் ஆறு
 • தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்கான, தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 • இத்திட்டத்திற்காக ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு வரும் ஜூலை மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும்.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும் படி மத்திய அரசை தமிழக அரச வலியுறுத்தும். இதற்காக தமிழக அமைச்சர்கள் குழு தில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும்.

ஒகேனக்கல்
 • தமிழ்நாட்டில் 25 இடங்களில் மணல் குவாரிகளும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு வண்டி மணற்குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. உழவுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.

 • மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் எம்-சாண்ட் ஆலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் தமிழ்நாட்டில் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

பனை மரங்கள் மூலம் ஏக்கருக்கு ரூ.16 இலட்சம் வருவாய்

 • தமிழ்நாட்டில் தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை தமிழக அரசே அதன் சொந்த செலவில் அகற்றித்தரும். காலி நிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 • ஒரு ஏக்கர் நிலத்தில் 400 பனை மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்த பின் ஒரு மரத்திற்கு ரூ.4,000 வீதம் ஒரு ஏக்கருக்கு இன்றைய மதிப்பில் ரூ.16 இலட்சம் வரை வருவாய் ஈட்டமுடியும்.

வேளாண்மை
 • வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.

 • கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது. மாறாக, 10% மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் பெறும் விவசாயி, ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது. 62. 2023-24ஆம் ஆண்டில் ரூ.16,000 கோடி அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கும். பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி

தோட்டக்கலை பல்கலைக் கழகம்

 • சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.

 • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.

 • தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

மாதவரம் தோட்டக்கலை பண்ணை

வேளாண் கல்வி 3 புதிய பல்கலைக் கழகங்கள்

தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி

 • நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.

 • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய்வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கும்.

 • தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.

வேளாண் காடுகள்

50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்

 • விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

 • வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஊழவர் சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

 • பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு…

வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்

 • தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

 • வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.

 • 2023–24ஆம் ஆண்டு முதல் 2028-29 வரை நீர்ப்பாசன ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இலவச பேருந்து வசதி

 • ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.

 • உழவர்கள் தாங்கள் விளைவித்தப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

 • சாலையோரங்களில் கூட்டுறவு உணவகங்கள் மூலம் தரமான உணவு, மலிவான விலையில் வழங்கப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோர் தரமற்ற, சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுகளை அதிக விலைகொடுத்து உண்ணும் அவலநிலை மாறும்.

 • புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்.

நாட்டு மாடுகள்
 • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். உழவர்கள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

 • வேளாண் வருமானத்தை பெருக்கத் திட்டம்: உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 மானியம் வழங்குதல், நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்ணைத் திட்டத்தின் (Pricision Farming) மூலம் வருவாயை பெருக்குதல், உழவர்களுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

“வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 86 தலைப்புகளில் 307 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும்”  என்று பா.ம.க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.