செல்ஃபி எடுக்க மறுத்த சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ், சமூகவலைத்தளம் பிரபலம் சப்னா கில் மும்பை விமான காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்திய அணியின் துவக்க ஆட்டகாரராக இருந்த 23 வயது பிரித்வி ஷா, கடந்த 15-ம் தேதி நண்பர்களுடன் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உணவு சாப்பிடச் சென்றபோது, அங்குவந்த கும்பல் ஒன்று அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்ததால் மோதல் நிகழ்ந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த மோதலில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவின் நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவின் முன்பக்க கார் கண்ணாடியை, செல்ஃபி எடுக்க வந்த கும்பல் பேஸ் பால் மட்டையால் தாக்கியதுடன், ரூ. 50,000 பணம் கொடுக்கவில்லையென்றால் பொய்யான வழக்குப்பதிவு செய்வோம் என்று அந்த கும்பல் மிரட்டியதாகவும் பிரித்வி ஷா தரப்பில் ஓஷிவாரா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

image

இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சமூகவலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் சப்னா கில் என்றப் பெண் மற்றும் அவரது நண்பர் ஷோபித் தாக்கூர் உள்பட 8 பேரை கடந்த 17-ம் தேதி கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், விசாரணையில், கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தான் குடித்துவிட்டு தங்களை தாக்கியதாகவும், தனது நண்பனின் செல்ஃபோனை பிடுங்கி தூக்கிப்போட்டு உடைத்ததாகவும் சப்னா கில் குற்றஞ்சாட்டினார். மேலும், தன்னை அனுமதியின்றி தொட்டு பிரித்வி ஷா தள்ளிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

முதலில் இரண்டு பேர் செல்ஃபி எடுக்க பிரித்வி ஷா ஒத்துக்கொண்டதாகவும், அதன்பிறகு மீண்டும் மீண்டும் செல்ஃபி எடுக்க வற்புறுத்தியதாலேயே அவர் மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. 3 நாட்கள் விசாரணை முடிந்து சப்னா கில் மற்றும் அவரது நண்பர்களை நேற்று போலீசார் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியபோது அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஜாமீன் வழங்கக் கோரி அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சப்னா கில் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

image

இந்நிலையில், சமூகவலைத்தள பிரபலம் சப்னா கில் மும்பை விமான நிலைய காவல் நிலையத்தில் பிரித்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து மும்பை விமான காவல்நிலையம் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யவில்லை. தன்மீதும், தனது நண்பர்கள் மீதும் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும், இரண்டு ரீல்கள் செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டாலே ஒரே நாளில் 50000 ரூபாய் பணத்தை பெற்றுவிடும் நிலையில் இருக்கும் நான் எதற்காக அவர்களிடம் பணம் கேட்க வேண்டும் என்றும் சப்னா கில் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.