மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த டிசம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களையும் தேர்வு செய்து வழங்கி வருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசையை வட்டாட்சியரிடம் ஒப்படைத்த மக்கள்!

மார்ச் 2024 -க்குள் அனைத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டுள்ளது என்று தெரிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து பெற்று, பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கி வருகிறது.

ஆனால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா முழுவதுமாக, முன் அறிவிப்பு இன்றி மறைமுகமாக 141 ரேசன் கடைகளில் ஜனவரி மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருவதாக கூறி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்பாட்டம்

“இந்த அரிசி இயற்கைக்கு மாறாக இருப்பதால் எறும்பு கூட திண்ணாத நிலையில் ரசாயனம் கலந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், தண்ணீரில் அரிசியை கொட்டிய ஐந்து நிமிடத்தில் அரிசி உப்பி சோறு போல மாறுகிறது. இதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதால் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்து ரேஷன் கடைகளில் வழங்குவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்” என்ற கோரிக்கை வலியுறுத்தி சீர்காழியில் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் அரிசியை திரும்ப ஒப்படைத்தனர். மேலும், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இது போன்ற ரசாயனம் கலந்த அரிசியை வழங்குவதை அரசு முற்றிலும் நிறுத்த வேண்டும். டெல்டாவில் விளைய கூடிய நெல்லை அரிசியாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.