நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணமாக இருந்து வருகின்றன. மேலும், கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர் புகார்களைத் தொடர்ந்து, சாராய கடத்தல், சட்டவிரோத கண்காணித்து, தடுக்க மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

பெண் போலீஸ்

அதன்படி, சோதனையில் மதுக்கடத்தில் ஈடுபட்ட பலரைக் கைதுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், காரைக்காலிலிருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸார் நாகை நகர்ப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடம் அருகே கார் ஒன்று நிற்பதைப் பார்த்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் சோதனை செய்தனர்.

அந்த காரில் பெண் போலீஸ் உட்பட 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதில் சந்தேகமடைந்த போலீஸார், அந்த காரில் சோதனை செய்தபோது, புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பெட்டிப் பெட்டியாக இருந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீஸார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது, நாகூர் அருகே கீழவாஞ்சூரைச் சேர்ந்த பெண் போலீஸ் ரூபிணி (32) என்பதும், அவர் திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் டிரைவர் பெண் காவலரின் கணவர் ஜெகதீஷ் (34) என்பதும், மற்றொருவர் நாகையைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள், 110 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

நாகை எஸ்.பி அலுவலகம்

இதையடுத்து பெண் போலீஸ் ரூபிணி, ஜெகதீஷ், கோபிநாத் ஆகிய 3 பேரையும் கையும், களவுமாகப் பிடித்த தனிப்படை போலீஸார், மேலும் மதுபானம், சாராயத்தை வாங்க வந்தாக தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்த ராஜசேகர் (24), மகாலிங்கம் (44), மகேஸ்வரி (34) ஆகியோர் என மொத்தம் 6 பேரைக் கைதுசெய்தனர்.

சாராயம், மது பாட்டில்கள் கடத்தப் பயன்படுத்திய கார், பைக்குகளை பறிமுதல் செய்து நாகை டவுன் காவல் நிலைய போலீஸாரிடம், தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவுசெய்து, நாகை கோர்ட்டில் அனைவரையும் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில் பெண் போலீஸ் ஒருவர் சீருடையுடன் மதுக்கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.