கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுப் புறப்பட்டபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து, தனது தந்தையின் தோளில் அமர்ந்திருந்த ஹர்ஷினி என்ற சிறுமி, “தாத்தா சென்றுவாருங்கள்.. தாத்தா சென்றுவாருங்கள்” என்று கூறியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதிலுக்குக் கையசைத்து டாட்டா காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் சிறுமி ஹர்ஷினிக்கு ‘ஹீமோபிலியா’ என்ற அரிய வகை நோய் இருப்பது குறித்த வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை எடுத்தவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான ரிச்சர்ட் விஜயகுமார்.

விகடன் குழுமத்தில் பணிபுரிந்த மறைந்த, புகைப்படக் கலைஞர் விஜயகுமாரின் மகன்தான் ரிச்சர்ட் விஜயகுமார். 12-ம் வகுப்பு படிக்கும் ரிச்சர்ட், எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலிகளையும் தன்னுடைய புகைப்படங்கள் மூலம் சமூகத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்து வருகிறார். அந்த வகையில், ஹர்ஷினியின் குடும்பச் சூழ்நிலை குறித்து ஓர் ஆவணப்படம் எடுத்திருந்தார். இந்த வீடியோ வெளியான அடுத்த சில நாள்களில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுமி ஹர்ஷினிக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை அளிப்பதற்கான உறுதியளித்தார். தற்போது சிறுமி ஹர்ஷினிக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வருடன் சிறுமி ஹர்ஷினி

இது குறித்து புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் விஜயகுமாரிடம் நாம் பேசினோம். “நல்லகண்ணு ஐயா பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூற சென்னை வந்திருந்தேன். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும் அங்கு வந்திருந்தார். அங்குதான் ஹர்ஷினி பாப்பா, `தாத்தா சென்று வாருங்கள்’ என்று கூறிய வீடியோவை எடுத்திருந்தேன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து ஹர்ஷினி அப்பாவிடம் பேசியபோது, `நாங்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக அங்குக் காத்திருந்தோம்’ என்று தெரிவித்தார். தங்களுக்கென வீடு இல்லை எனவும், ஹர்ஷினி பாதிக்கப்பட்டிருக்கும் நோயைப் பற்றியும் அவர் அப்பா விரிவாகத் தெரிவித்திருந்தார்.

ஹர்ஷினியின் மகிழ்ச்சி முகம் மட்டும்தான் லட்சக்கணக்கான மக்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே, அவர்களின் மறுபக்கத்தைப் பதிவுசெய்ய ஆவணப்படம் எடுக்க முடிவுசெய்து சென்னைக்குப் புறப்பட்டேன். தங்கள் அன்றாடத்தில் சந்திக்கும் இன்னல்களையும், போராட்டங்களையும் ஹர்ஷினியின் பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறியிருந்தனர். மேலும், ஹீமோபிலியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹர்ஷினிக்கு ஒரு சிறிய காயம் ஏற்பட்டாலே அதிக அளவிலான ரத்தம் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவுதான். மாதம் பல ஆயிரம் ரூபாய் மருத்துவத்துக்குச் செலவு செய்வதாக ஹர்ஷினி பெற்றோர் தெரிவித்தனர்.

என்னிடம் சிறுமி ஹர்ஷினி, `இந்த நோயினால என்னோட அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க’ என்று கண் கலங்கினாள். மேலும், `இந்த நோய உங்களால் குணப்படுத்த முடியுமா’ என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் சிறுமி கோரிக்கை விடுத்திருந்தாள். அதன்பிறகு முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தேன். சில நாள்கள் கழித்து சுகாதாரத்துறை அமைச்சரைச் சிறுமி ஹர்ஷினி குடும்பத்துடன் சந்தித்தேன். ஹர்ஷினிக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினோம். ஹர்ஷினியைக் கட்டியணைத்து ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். `உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் செய்துகொடுக்கப்படும்’ என்று நம்பிக்கை அளித்தார். எளியவர்களின் வாழ்வில் என்னுடைய புகைப்படங்களாலும், வீடியோக்களாலும் ஏற்படும் நல்ல மாற்றங்கள்தான் எனக்கு உந்துதலாக இருக்கின்றன” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.