திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்திருக்கும் வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரின் மனைவி ஜெயப்பிரியா. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயப்பிரியா, கடந்த 7-ம் தேதி சிகிச்சைப் பெறுவதற்காக ஆரணி அரசு மருத்துவமனைக்குப் பேருந்தில் சென்றார். உடன் தனது மூன்று வயது மகளை கையில் பிடித்துக்கொண்டும், இன்னொரு கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடியும் சென்றிருக்கிறார். சிகிச்சைப் பெற்ற பிறகு வீடு திரும்புவதற்காக மீண்டும் அரசுப் பேருந்தில் பயணித்திருக்கிறார். மேல்புதுப்பாக்கம் என்ற நிறுத்தம் வந்தடைந்தபோது, பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் இறங்கிவிட்டனர்.

அரசுப் பேருந்து

ஜெயப்பிரியா மட்டும் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். அந்தப் பகுதியிலிருந்து அவர் வீடு அமைந்திருக்கும் வாழைப்பந்தலுக்குச் செல்ல இன்னும் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. ஆனால், இந்த ஒரே பயணிக்காக அவ்வளவு தூரம் போக வேண்டுமா… என்று சொல்லி, குழந்தைகளுடன் இருந்த ஜெயப்பிரியாவை கீழே இறங்குமாறு கண்டக்டரும், டிரைவரும் சொல்லியிருக்கிறார்கள். ‘குழந்தைகளை வைத்துக்கொண்டிருக்கிறேன்; மனிதாபிமானமின்றி இங்கேயே இறங்கச் சொல்வது சரியா…’ என்று ஜெயப்பிரியா கேட்டிருக்கிறார்.

ஆனாலும், இரக்கமின்றி குழந்தைகளுடன் இருந்த அவரை கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்கள். அவர் இறங்க மறுத்துவிட்டதால், அங்கிருந்தபடியே பேருந்தை திருப்பி மீண்டும் ஆரணி நகரப் பேருந்து நிலையத்துக்கே ஓட்டிவந்து, இறக்கிவிட்டிருக்கிறார்கள். அங்கிருந்து மாற்றுப் பேருந்து மூலம் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஜெயப்பிரியா வீட்டுக்குச் சென்றடைந்திருக்கிறார். வீட்டுக்குச் சென்றதும் தனக்கு நேர்ந்த இன்னல்களை உறவினர்களிடம் கூறி அழுதிருக்கிறார்.

சஸ்பெண்ட்

இதனால், ஆத்திரமடைந்த அவரின் உறவினர்களும், ஊர் மக்களும் வாழைப்பந்தல் பகுதிக்கு வந்த அதே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து, எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். ஆரணி வழித்தடத்தில் நடந்த விவகாரம் என்பதால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷின் கவனத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மனிதாபிமானமற்றச் செயலில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து டிரைவர் சண்முகம், கண்டக்டர் சீனிவாசன் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, இருவரும் ஒழுங்கீனப் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.