” இது சாமானியர்களுக்கான பட்ஜெட்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்தோடு கூறியுள்ள நிலையில் ‘மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில பட்ஜெட்டை மத்திய அரசு திருத்தி அமைக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

ப.சிதம்பரத்துடன் தொழில் வர்த்தக சங்கத்தினர்

மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த பட்ஜெட் குறித்தான ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ப.சிதம்பரம் பேசும்போது, “ஒரு பட்ஜெட்டை பொருளாதார கண்ணாடி வழியாகவும், சமுதாய மற்றும் அரசியல் கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம்,

இந்த கூட்டத்தில் அரசியல் கண்ணாடி இல்லாமல், பொருளாதார, சமுதாய கண்ணாடியை அணிந்து பேசுகிறேன்.

பொதுவாக நாட்டின் வளர்ச்சி ஜி.டி.பி எனப்படும் மொத்த உற்பத்தி வளர்ச்சியை சார்ந்துள்ளது. இதை நான்கு உந்து சக்திகள் தீர்மானிக்கும். முதலாவதாக மொத்த உற்பத்தில் 60 சதவிகிதம் உள்ள மக்களின் நுகர்வு, இரண்டாவது அரசின் முதலீடு, மூன்றாவது தனியார் முதலீடு, நான்காவது ஏற்றுமதி ஆகியவைதான்.

சில காலங்கள் இந்த 4 எஞ்சின்களும் முழு திறனோடு செயல்பட்டது. சில காலங்களில் இது மாறும். ஆனால், இந்த அரசு, மறைமுகமாக அரசின் முதலீட்டை நம்பியுள்ளது, இதனை சொற்களில் ஒப்புகொள்ளவில்லை, எண்களில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கு காரணம், மக்களின் நுகர்வு குறைந்துவிட்டது. இதற்கு காரணம் பணவீக்கம், வேலையிழப்பால், நுகர்வு எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளது.

ப.சிதம்பரம்

நம் நாட்டிற்கு ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துவிட்டது. சீனாவும் நமக்கும் இறக்குமதி, ஏற்றுமதிக்கு இடையேயான இடைவெளி என்பது 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறது.

இந்தியாவின் இந்த ஆண்டு திருத்தப்பட்ட வரவு செலவு மதிப்பீட்டில் ரூ 7, 50, 246 கோடி நிதி, அரசு முதலீடு என்று சொன்னார்கள். அதனை இன்னும் நிறைவேற்றவில்லை..

அரசிடமிருந்து முதலீடு பெறுவது என்பது எளிதல்ல ; 10 லட்சம் கோடி அரசு முதலீடு என்பதில் நம்பிக்கை இல்லை, இது சாத்தியமில்லை.

6.5 சதவிகிதம், 7 சதவிகிதம் வளர்ச்சி என்கிறீர்கள், இதனை எண்ணிக்கையால் பார்த்தால்தான் நம்ப முடியும். முதல் காலாண்டில் 13.5 சதவிகிதம், இரண்டாவது காலாண்டில் 6.3 சதவிகிதம் என்கிறீர்கள், மூன்றாவது காலாண்டில் 4.1 சதவிகிதம், நான்காவது காலாண்டில் 4.1 சதவிகிதம் என சரிகிறது, இதனை எப்படி வளர்ச்சி என கூற முடியும்?

இந்த அரசு கணிதத்தின் இறுக்கத்தில் இருந்து வெளிவரமுடியாத நிலையில் உள்ளது. நாட்டின் வளர்ச்சி குறைகிறதே தவிர வளர்ச்சியடைவில்லை.

ப.சிதம்பரம்

இந்த ஆண்டில் விவசாயத்துறைக்கு ஒதுக்கியதை விட 7000 கோடி நிதி குறைவாக செலவழித்துள்ளனர், இதேபோன்று கல்வித்துறை, மருத்துவத்துறை, பட்டியல், சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஒதுக்கிய நிதியை குறைவாகவே செலவழித்துள்ளனர்.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ்க்கு ஒரு செங்கல் ஒதுக்கி இருந்தால் அதற்காக சந்தோஷப்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவன் 15,000 சம்பளம் என்று கூறிவிட்டு 12,000 தான் மனைவியிடம் கொடுப்பார் அதனால் மனைவி போதிய செலவு செய்யமுடியாமல் சிரமப்படுவார், அதுபோலத்தான் இந்த அரசு கணவன் நிலையிலும், மக்கள் மனைவி போன்ற நிலையிலும் உள்ளனர்.

இந்த அரசுக்கு துறைவாரியாக நிதி ஒதுக்குவதை முழுமையாக செலவழிப்பதில்லை, அதனை செலவழிக்கும் எண்ணம் இல்லை.

இந்த அரசு நிதி ஒதுக்கியதை மட்டும் வைத்து மகிழ்ச்சி அடைய முடியாது, இதனால் பாதிக்கப்போவது ஏழை எளிய மக்கள், சிறுபான்மை, பழங்குடியின மக்கள்தான்.

மத்திய அரசு வழங்கும் முக்கிய மானியங்களான உணவுப்பொருளுக்கான மானியம், உர மானியம, பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்களை ஒழித்துவிட்டார்கள், உணவு, உரத்திற்கான மானியம் குறைத்தால் உணவுபொருட்கள் விலைவாசி உயரும், இதனால் விவசாயிகளும், ஏழை எளிய, நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

பணக்காரர்களுக்கு விலை உயர்வை தாங்கும் சக்தி உண்டு, ஆனால் ஏழைகள் நடுத்தர வர்க்கத்தினர் இதனை தாங்கமாட்டார்கள், மத்திய அரசு மனமுவந்து மாநிலங்களுக்கான நிதிகளை வழங்க வேண்டும், மாநில அரசின் ஏராளமான வரிகள் மத்திய அரசுக்கு சென்றுவிட்டது.

கல்ந்துகொண்டவர்கள்

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 3, 34, 331 கோடி நிதி வழங்க வேண்டும். ஆனால் மாநில அரசுகளுக்கு 2, 74, 934 கோடி நிதியை மட்டும் வழங்கிய நிலையில் 63,000 கோடி நிதியை குறைத்து வழங்கியுள்ளது, இதனால் கிராம ஊராட்சித் திட்டங்கள் கூட பாதிக்கின்றது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் உள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்று கூறும் அளவிற்குத்தான் நிலைமை உருவாகும். இதன்விளைவு நாட்டின் வளர்ச்சி விகிதம் குறையும், நாட்டின் தனிமனித வருமானம் குறையும்.

2004 முதல் 2014 வரை 7.5 சதவிகிதம் சராசரி வளர்ச்சி இருந்தது. கடந்த 10 ஆண்டின் சராசரி வளர்ச்சி 5.6 சதவிகித வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இதற்கு எனவே கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் வளர்ச்சி குறைந்துள்ளது. இந்தியா இன்னும் 20 ஆண்டுகளுக்கு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 8 சதவிகித வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம். பசித்த நாடுகள் பட்டியலில் இந்தியா சரிந்துள்ளது என்கிற ஆக்ஸாம் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு இந்த அரசு வர வேண்டும்

பசி , வறுமை, ஏழ்மை, வேலையின்மை் நம் நாட்டில் உள்ளது என்பதை ஏற்க வேண்டும், இதனை ஒழிக்க நாட்டின் வளர்ச்சி உயர்வு வேண்டும், இந்த வளர்ச்சி ஏற்ற தாழ்வுகளை குறைக்க வேண்டும் என்றார்.

ப.சிதம்பரம்

இந்த 10 ஆண்டில் பொருளாதார ஏற்றதாழ்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. மொத்த இந்தியாவின் 60 சதவிகித சொத்துக்கள் 5 சதவிகிதத்தனரிடம் உள்ளது.

ஜி.எஸ்.டி 1.5 லட்சம் கோடி வசூலானது சாதனை என்கிறார்கள். இதனை முறையாக கொண்டு வந்திருந்தால் 2.5 லட்சம் கோடி வசூலித்திருக்கலாம்.

நாங்கள் வாட் வரியை நள்ளிரவில் அமல்படுத்தவில்லை. ஆனால், மத்திய அரசு ஜி.எஸ்.டியை 2017-ம் ஆண்டில் நள்ளிரவில் சுதந்திரம் என கூறி மணியெல்லாம் அடித்து கொண்டு வந்தார்கள். அது சுதந்திரம் அல்ல. மக்களுக்கு விலங்கு போட்டார்கள்.

மிகப்பெரிய பணக்காரர்கள் 3 சதவிகித ஜி.எஸ்.டிதான் கட்டுகிறார்கள். அதில் ஏழைகள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஜி.எஸ்.டியை வடிவமைத்தது நான்தான், ஒரே ஜி.எஸ்.டி கொண்டு வரலாம் என்பதை கூறினேன், பலவித ஜி.எஸ்.டிகளை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றேன். இதனை அருண்ஜெட்லி கேட்கவில்லை. முதலில் பரீட்சார்த்த முயற்சியாக சில மாவட்டங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தி அதில் உள்ள நிறைகுறைகளை தெரிந்துகொண்டு அதன் பின்பு அமல்படுத்தியிருக்கலாம். இந்த 6 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் 4950 வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 33 வழக்குகள் என ஜி.எஸ்.டி படாதபாடுபடுகிறது.

2023-2024 பட்ஜெட்

அடுத்தாண்டில் உலகம் 3 நிலைகளை அடையும். முதலாவது உலக வளர்ச்சி கடந்த ஆண்டை விட குறையும். 2 முதல் 2.5 புள்ளிகள்தான் உயரும். மகிழ்ச்சி தரும் வகையில் இருக்காது.

இரண்டாவது, உலக வர்த்தகம் மெதுவாகத்தான் இருக்கும். அனைத்து நாடுகளும் வர்த்தகத்தை தடைசெய்யும் கொள்கைகளை நிறைவேற்றுகிறார்கள், சுங்கவரியை உயர்த்திவிட்டார்கள், அடுத்த ஆண்டு உலக வர்த்தகம் 1 சதவிகிதம்தான் உயரும்.

மூன்றாவது, உக்ரைன் போரால் மிகப்பெரிய பாதகம் ஏற்பட்டுள்ளது. தனிந்தால் நல்லதுதான், ஆனால், உக்ரைன் போர் மேலும் அதிகரிக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

இதற்கு ஏற்ப மத்திய அரசு பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். 90 நிமிட பட்ஜெட் உரையில் உலக வளர்ச்சி, வர்த்தகம், உக்ரைன் போர் பாதிப்பு குறித்த ஒரு வரி கூட இல்லை, இந்த நிதர்சன உண்மையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுவார்கள், வருமானவரி குறைவு என்பது மேத்தமெடிக் இல்லை, மேஜிக் தான்.

அரசு மறைமுகமாக செலவழியுங்கள் என்று சொல்கிறது, சேமியுங்கள் என சொல்லவில்லை, வருமான வரி விலக்கு என்பது சேமிப்பை ஊக்குவிப்பதற்குத்தான் . ஆனால், செலவழியுங்கள் என்று மறைமுகமாக அரசு கூறுகிறது.

பறவை கூட கூடு கட்டி சேமிக்கிறது. பாமர மக்கள் கூட வீடு கட்டுவதை சேமிப்பு என்கிறார்கள், ஆனால், வீடு கட்டினால் அது சேமிப்பு இல்லை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.

நம் நாட்டிற்கு பழைய வரிவிதிப்பு முறைதான் வருமான வரி செலுத்தும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்.

இந்த அரசு பட்ஜெட்டை திருத்தி ஏழை எளிய மக்களுக்கு நல்வாழ்வு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி வரிச்சலுகை தந்து மக்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் வெளியிட வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.