காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய பிரச்னையாக உள்ளது. காலநிலை மாற்றத்திற்கு காரணமாக உலக முதலாளிகளின் தொழிற்சாலைகள் இருந்தாலும், அதிகமாக பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்களே. காலநிலை மாற்றத்தை தணிப்பதற்காக இயக்கமாக செயல்படுவது இன்றைய தேவையாக உள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை மாநில அரசு தொடங்கி வைத்துள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம் தமிழ்நாடு, இந்தியாவிற்கே சூழலியல் நீதியில் முன் மாதிரியாக திகழ்கிறது.

தீபக் பில்கி

காலநிலை மாற்றத்திற்கான இயக்கம் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை இயக்குனர் தீபக் பில்கியிடம் பேசினோம்.

அவர்,”காலநிலை மாற்றத்திற்காக மத்திய அரசுதான் திட்டங்கள் வகுக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மாநிலங்கள் அளவில் முதல் முறையாக காலநிலை மாற்றத்துக்கான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் காலநிலை மாற்றம் என்பது வெறும் வாதம் செய்யக்கூடிய கருத்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்னையாக இருக்கிறது.

இன்று புவி வெப்பமயமாயதல் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்துக்கு பெய்ய வேண்டிய மழை 3 மாதங்களிலேயே பெய்வதால், மற்ற நாட்களில் வறட்சியால் மக்கள் பாதிக்கின்றனர். இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதனுக்கு பேராபத்தை விளைவிக்கும். கார்பன் வெளியீட்டால் காலநிலை மாற்றம் தீவிரமடைகிறது.

காலநிலை மாற்றம்

தொடர்ந்து கார்பன் வெளியீட்டை அதிகரித்துக்கொண்டு இருந்தால் காலநிலை சீர்கேட்டால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். அதனால் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு வளர்ச்சியை முறைப்படுத்த வேண்டும். இன்றும் பெரும்பாலான மக்களிடத்தில் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. காலநிலை மாற்றத்திற்கான இயக்கத்தின் மூலம் மக்களிடத்தில் காலநிலை பற்றிய விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தப்படும்.

காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான செயல்பாடுகளில் தமிழ்நாடு இதுவரை எந்தநிலையில் இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். இதற்காக

1. கழிவுகளை ஆற்றலாக மாற்றுவது (Waste to energy)

2. போக்குவரத்தால் ஏற்படும் மாசு (Emission from mass transport)

3. கட்டிடங்களில் நிலையான ஆற்றல் (Sustainable energy in buildings)

4. கடலோர பகுதிகளில் நிலையான சீரமைப்பு (Sustainable restoration in coastal habitats)

காலநிலை மாற்றம்

5. காலநிலை கல்வி (Climate literacy) போன்ற சில ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் climate smart village திட்டத்தின் மூலம் கிராமங்களை சூழலுக்கு உகந்த கிராமங்களாக திட்டமிட்டுள்ளது. கிராமங்களில் விவசாயம், கழிவு மேலாண்மை, போக்குவரத்து, மழைநீர் சேகரிப்பு போன்ற அனைத்து துறைகளை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் சூழலுக்கு உகந்ததாக கிராமங்களை மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்பது ஏழை மக்கள்தான். ஓரளவு வசதியான மக்களாக இருந்தால் காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஏழை மக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இதற்காக தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து climate studio என்ற திட்டத்தின் மூலம் விளிம்புநிலை மக்களுக்காக செயல்படுகிறது. இந்த இயக்கத்தில் பெண்களும் காலநிலையும் என்ற திட்டமும் இருக்கிறது. காலநிலை மாற்றம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, காலநிலையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அணுகுவது என்பது இதன் நோக்கம்.

தீபக் பில்கி

காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை இயக்கம் போன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்களுடைய ஒத்துழைப்பே முக்கியம். காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம் காலநிலை மாற்ற தீவிரத்தை உணர வைக்கவும், அதனை தணிக்க மக்களின் பங்கை உறுதிப்படுத்தவும் முயற்சிக்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.