ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக தி.மு.க அரசு செய்திருக்கும் பணிகளின் அடிப்படையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வெற்றியைப் பரிசாக அளிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். கடந்த சில நாள்களாக இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறேன். செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் எங்களுக்கு நல்ல வரவேற்பளித்தனர். எனவே, நிச்சயம் இளங்கோவனை வெற்றிபெறச் செய்வார்கள். கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடைசியாக நடைபெற்ற நகர்ப்புறத் தேர்தலில் அ.தி.மு.க-வால் ஏன் வெற்றி பெற முடியவில்லை. அந்தத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றியைப் பதிவுசெய்தது.

ஆரத்தி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க அரசு புறக்கணித்துவந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், அந்தத் தேர்தலை நடத்தி, அதில் ஜனநாயகரீதியில் உள்ளாட்சி மன்றங்களின் ஆட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறோம். இந்தத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலினின் கோட்டை இது என்பதை மார்ச் 2-ம் தேதியின் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நிரூபிப்பார்கள். இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, அண்ணாமலை செய்துவரும் பஞ்சாயத்து குறித்து கேட்கிறீர்கள். சரியில்லாத ஒருவரைப் பற்றி பேசி எதுவும் நடக்கப் போவதில்லை. அவர் சார்ந்த கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று அவரையே கேளுங்கள். என்னைக் கேட்டால், நான் சார்ந்திருக்கும் தி.மு.க-வில் 1 கோடிக்கும் மேற்பட்ட  உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவேன். அதே கேள்வியை அவரிடம் கேட்டுப் பாருங்கள். அவரால் சொல்ல முடியாது. ஏனெனில் பா.ஜ.க ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. அந்தக் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எவ்வளவு பூத் கமிட்டிகளை அந்தக் கட்சியால் அமைக்க முடியும் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்.

ஆரத்தி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மையங்களுக்கு பூத் கமிட்டி நியமித்து தேர்தல் பணிகள் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில், இல்லாத நபரைப் பற்றியும், இல்லாத கட்சியைப் பற்றியும் பேசி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். ஏதோ அவர்கள் சார்ந்த கட்சியை மையப்படுத்தி தேர்தல் நடைபெறுவதைப் போன்ற கருத்துகளை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டாம். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் 85 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி விடுவோம். மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று கூறவே இல்லை.

கணக்கெடுக்கக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. விரைவில் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவிருக்கின்றன. அதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு மீட்டர்கள் பொருத்தி, கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகே மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை குறித்த அறிவிப்பு வெளியாகும்.

செந்தில் பாலாஜி – அண்ணாமலை

கடந்த 10 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாததைப் போன்ற தோற்றத்தை அ.தி.மு.க-வினர் ஏற்படுத்திவருகின்றனர். கடந்த 2010-ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, வீடுகளில் 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியவர்கள் ரூ.1,120 கட்டினார்கள். அதே அளவு மின்சாரத்துக்கு அ.தி.மு.க ஆட்சியின்போது  2017-ல்ரூ. 2,440 -ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட கட்டணம் 117 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருந்தது. 2010-ல் விசைத்தறியாளர்கள் 1,000 யூனிட் பயன்படுத்தி ரூ.310-ஐ கட்டினார்கள். 2017-ல் ரூ.715-ஐ கட்டணமாகக் கட்டினர். கிட்டத்தட்ட ரூ.405 கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டிருந்தது. இதுபோல கடந்த அ.தி.மு.க ஆட்சியில்தான் அனைத்து வகை மின்கட்டணமும் அதிகப்படியாக உயர்த்தப்பட்டது. இது குறித்து தவறான தகவலைப் பரப்பும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க, ஸ்டாலின் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பெரும் வெற்றியைப் பெறும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.