`வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது’ என்ற வாக்கியத்தை கேள்விப்பட்டிருப்போம். அதுபோல பலர், உதவி பெறுபவருக்கே தெரியாமல் உதவிகளைச் செய்துவருவார்கள். அப்படித்தான் மறைந்த அமெரிக்க விவசாயி ஒருவர், கிட்டத்தட்ட 10 வருடங்களாக, யார் என்றே தெரியாத பல ஏழைகளின் மருத்துவ பில்களை அவர்களுக்கே தெரியாமல் செலுத்தி உதவி வந்திருக்கிறார்.

உதவி

அலபாமாவின் (Alabama) ஜெரால்டைனைச் சேர்ந்த ஹோடி சில்ட்ரெஸ் (Hody Childress) எனும் அந்த விவசாயி ஓர் அமெரிக்க விமானப்படை வீரர். 2012-ல் தன் சொந்த ஊரான ஜெரால்டைனில் ஒரு மருந்துக்கடைக்குள் நுழைந்த ஹோடி சில்ட்ரெஸ், பல ஏழைகள் தங்களது மருந்து பில்களை முழுமையாகச் செலுத்த முடியாமல், மருந்து கிடைக்காமல் தவிப்பதை, ப்ரூக் வாக்கர் (Brooke Walker) எனும் அந்தக் கடையின் உரிமையாளர் மூலம் தெரிந்துகொண்டார்.

அதன் பின்னர் ஹோடி சில்ட்ரெஸ், எப்படியாவது அத்தகைய நபர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அன்றே தனக்குள் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் ப்ரூக் வாக்கரிடம் 100 டாலர் கொடுத்து, மருந்து பில்களை முழுமையாகச் செலுத்த முடியாதவர்கள் வந்தால் அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறியிருக்கிறார். அதுவும் இதை யார் செய்கிறார் என்பதை ஒருபோதும் சொல்லக் கூடாது என்றும் ஹோடி சில்ட்ரெஸ் அவரிடம் தெரிவித்திருக்கிறார்.

விவசாயி ஹோடி சில்ட்ரெஸ் (Hody Childress)

இப்படி 2012-ல் தொடங்கிய இந்த உதவிப் பயணத்தை, ஹோடி சில்ட்ரெஸ் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உயிரிழக்கும் வரையில் சுமார் 10 வருடங்களாக நிற்காமல் தொடர்ந்திருக்கிறார். ஹோடி சில்ட்ரெஸின் இத்தகைய செயலை விவரித்த ப்ரூக் வாக்கர், “ஹோடி சில்ட்ரெஸ் என்னிடம் 100 டாலரைக் கொடுத்து, மருந்து வாங்க முடியாத நபர்களுக்கு உதவுமாறு கூறினார். மேலும் அவர், இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று அவர்களிடம் சொல்லாதீர்கள், அவர்கள் கேட்டால் `கடவுளின் ஆசீர்வாதம்’ என்று கூறுங்கள் என என்னிடம் சொன்னார்” என்று கூறி நெகிழ்ந்தார்.

ஹோடி சில்ட்ரெஸைப்போல இன்னும் பலர் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமலேயே உதவிக்கொண்டிருப்பதால், மனிதாபிமானம் இன்றும் பலருக்கு வாழ்க்கை மீதான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.