சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் நாளை (ஜன.,25) ஷாருக்கானின் பதான் படம் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா, ஜான் ஆப்ரகாம் என பல முக்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

பதான் படத்தில் இடம்பெற்றுள்ள பேஷரம் ரங் பாடலில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி அணிந்திருந்தது இந்து அமைப்பை சேர்ந்தவர்களால் பெரிதளவில் எதிர்க்கப்பட்டதோடு படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தி வந்தனர்.

இப்படி இருக்கையில், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் பதான் படத்தின் போஸ்டர்களை சில இந்து அமைப்பினர் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பின் போது அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் பதான் படம் தொடர்பாக நடந்த வன்முறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.



அதற்கு, “ஷாருக்கான் யார்? அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என கூறிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் யாரும் என்னை தொடர்புகொண்டு எதுவும் பேசவும் இல்லை. யாராவது பேசியிருந்தால் தலையிட்டு பிரச்னை என்ன என பார்த்திருப்பேன். இந்த விஷயத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்பட்டிருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், “நடிகர் ஷாருக்கான் இன்று அதிகாலை 2 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவுகாத்தியில் நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். எந்த பிரச்னையும் இல்லாமல் படம் வெளியாக உதவ வேண்டும் எனக் கோரினார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்பதால் நானும் அவருக்கு உறுதியளித்திருக்கிறேன்.” என ஹிமந்த் பிஸ்வா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.


இதனிடையே, “என்னுடைய காலத்து நடிகர்களான அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா போன்றோரை தெரியும்.” என ஷாருக்கானை தெரியாது என செய்தியாளர்களிடம் பேசிய போது அசாம் முதல்வர் ஹிமந்த் கூறியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு ஷாருக் ரசிகர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது.

அதாவது, “ஷாருக்கான் உங்களை விட 4 வயதுதான் மூத்தவர்.” என்றும், “இப்போது ஹேமந்திற்கு 53 வயது. ஷாருக்கானுக்கு 57. இப்போது உங்க காலத்துக்கு நடிகர்கள் யார் என ஹேமந்தால் தெளிவுபடுத்த முடியுமா?” என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.