கேரளாவில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட நடிகை அபர்ணா பாலமுரளியிடம், மாணவர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஹத் பாசிலின் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான மலையாள நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர், தமிழில் ‘எட்டு தோட்டாக்கள்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தொடர்ந்து ஜி.வி. பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, ‘தீதும் நன்றும்’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’, அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இதில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக கடந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவர் வென்றுள்ளார்.

இந்நிலையில் பிஜு மேனன், வினீத் சீனிவாசன், கிரிஷ் குல்கர்னி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கம்’ என்ற மலையாளப் படத்தில், நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் புரமோஷனுக்காக, கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி விழா ஒன்றில், நடிகை அபர்ணா பாலமுரளி, வினீத் சீனிவாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

image

அப்போது மேடையில் அமர்ந்திருந்த அபர்ணா பாலமுரளியை வரவேற்பதற்காக வந்த மாணவர் ஒருவர், அவருக்கு பூ ஒன்று கொடுத்து கைக்குலுக்கியதுடன் நில்லாமல், வலுக்கட்டாயமாக சேரில் இருந்து அவரை எழுப்பி, அபர்ணா பாலமுரளியின் தோளில் கைப்போட முயற்சித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அபர்ணா பாலமுரளி, சிரித்துக்கொண்டே தர்மசங்கடத்துடன் அங்கிருந்து விலகிச் சென்று தனது இருக்கையில் அமர்ந்தார்.

இதன்பிறகு, மேடையிலேயே மன்னிப்புக் கேட்ட அந்த மாணவர், சிறிது நேரம் கழித்து மேடைக்கு வந்து வருத்தம் தெரிவித்ததுடன், ரசிகராக ஏன் அவ்வாறு நடந்துக்கொண்டேன் என்று விளக்கமும் அளித்தார். எனினும், விழா முடியும் வரை அபர்ணா பாலமுரளி சிறிது பதற்றத்துடனே காணப்பட்டார். மாணவரின் இந்தச் செயலை கல்லூரி நிர்வாகமும் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், மாணவருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


பண்பாடு இல்லாத இந்த மாணவர் மன்னிப்பு கேட்பது மட்டுமே தீர்வாகாது என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பலரும், சூழ்நிலையை தனக்கு சாதகமாக அந்த மாணவர் பயன்படுத்திக்கொண்டு இவ்வாறு நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்நியர் ஒருவர், தெரியாத நபரின் தோள் மீது கைப்போட்டாலே அது சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும்போது, இது மிகவும் தவறான செயல் என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மாணவரின் இந்தச் செயலை கண்டிக்காமல், நடிகர் வினீத் சீனிவாசன் மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தது தனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக, நெட்டிசன் ஒருவர் கோபத்துடன் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.