அடுத்த தலைமுறை வீரர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவராக, இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலமாகக் கருதப்படுபவர் கில். அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் நிகழ்வையும் நிகழ்த்துபவர். நியூசிலாந்துக்கு எதிரான அவரது இரட்டைசதமும் அந்த வரிசையில் வருவதுதான். சத்தமேயின்றி நடந்தேறிவரும் ஒரு இளவரசனின் எழுச்சியை எடுத்துரைத்திருக்கிறது அது.

Gill

பொதுவாகவே கோலியின் கிளாஸான பேட்டிங்கோடு ரோஹித்தின் அழகியலும் இணைந்து இயற்றிய கவிதைதான் கில்லின் பேட்டிங். முன்னவர் போல் கவர் டிரைவில் கவருவார் என்றால் பின்னவர் போல் புல் ஷாட்டில் புளகாங்கிதம் அடைய வைப்பார். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஃப் சைடை அவர் ஆக்கிரமித்த விதத்தில் கங்குலியும் சற்றே எட்டிப்பார்த்தார். அவரது பேக் லிஃப்டும், கால்களின் நகர்வுகளும், கண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் விதமும், கிரீஸைப் பயன்படுத்தும் முறையும், அவரிடமிருந்து வெளிப்படும் பலவகையான ஷாட்டுகளும் அதை அவர் டைமிங் செய்து ப்ளேஸ் பண்ணும் விதமும் என ஒவ்வொன்றுமே அவரது டெக்னிக்குகளின் வலிமையைப் பிரதிபலிப்பவைதான். அதிலும் ஒருநாள் போட்டிகளுக்கெனவே நெய்தது போன்றது அவரது ஆட்டத்தின் பாணி என விவரித்துச் சொல்ல நிறையவே நேர்மறை விஷயங்கள் கில்லிடம் நிரம்பியிருக்கிறது.

நிலைப்புத்தன்மை என்பது எந்தவொரு வீரருக்கும் அவசியமான ஒன்று, கில்லின் பலமும் அதுதான். 2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் ஐந்து போட்டிகளில் 124 சராசரியோடு 331 ரன்களை கில் குவித்திருந்தார். இதில் ஒரு சதமும் மூன்று அரைசதமும் அடங்கும். அத்தொடரின் நாயகனும் கில்தான். அக்கோப்பையை இந்தியா கைப்பற்றியதில் முக்கியப்பங்கு வகித்தவரும் அவர்தான். அந்த நிலைப்புத்தன்மையின் நீட்சி நடப்பு நியூசிலாந்து தொடர்வரை நீண்டிருக்கிறது.

Gill

2019 – 21 காலகட்டங்களில் மொத்தமே மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கில் ஆடியிருந்தார். அதில் 49 ரன்களையும் சேர்த்திருந்தார். அதை ஒதுக்கிவைத்து 2022-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், கில் மொத்தம் 16 போட்டிகளில் ஆடி 80.92 சராசரியோடு 1053 ரன்களைக் குவித்திருக்கிறார்.

இதில் ஐந்து அரைசதங்களும் மூன்று சதங்களும் அடக்கம். இப்போது வந்துள்ள இரட்டைசதம்தான் அவரது உச்சகட்ட சாதனை. இவை எல்லாமே எந்தளவிற்கு கில்லின் ஆட்டம் நம்பகத்தன்மையால் நிறைந்திருக்கின்றது என்பதற்கான சான்றுகள். 

அழுத்தத்தில் ஆளுமை செய்வதுவும் கில்லிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரடித்த 91 ரன்களே அதற்கான உத்திரவாதமளித்தாலும் இந்த இரட்டைசதம் இன்னிங்ஸ் அதை இன்னும் அதிகமாக மெய்ப்பித்திருக்கிறது. தொடக்கத்தில் நீரோட்டமாகத் தொடங்கி காலூன்றியபின் காட்டாறாக உருவெடுக்கும் கோலியின் பாணியை கில்லிடமும் இப்போட்டியில் காணமுடிந்தது. முதல் 10 ஓவர்களில் 30 பந்துகளில் வெறும் 21 ரன்களை மட்டுமே கில் அடிந்திருந்தார். ஆனால் எப்பொழுது விக்கெட்டுகள் விழுந்து அணி சற்றே தள்ளாடத் தொடங்கியதோ அதன்பின் அவரது கியர் மாறியது.

Gill

அரைசதத்தை அடைந்தபோது 96.2 ஆக இருந்த ஸ்ட்ரைக்ரேட், சதத்தை எட்டும்போது 114.9, 150-ஐ எட்டும்போது 125 ஆகவும் 200-ஐ எட்டும்போதோ 138 என எங்கேயோ எகிறியது. அதிலும் 50, 150, 200 அத்தனையையுமே சிக்ஸரோடே வந்திருந்தன.

ஃபெர்கூசன் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸரோடு இரட்டைசதத்தை எட்டியதெல்லாம் அவரது நோக்கத்தின் தெளிவையும் அஞ்சாத அட்டாக்கிங் பாணியையுமே படம் பிடித்துக் காட்டின. வேகப்பந்துவீச்சு, சுழல் இரண்டையுமே இலகுவாக எதிர்கொண்டார்.

இவ்வளவுக்கும் மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. எதற்கும் அஞ்சாமல் பலமான நியூசிலாந்து பௌலர்களை அவர் எதிர்கொண்டு தனது இன்னிங்ஸைக் கட்டமைத்த விதமும் அனுபவமிக்க வீரர் போல அணியை முன்னெடுத்துச் சென்ற பாங்கும்தான் கூடுதல் கவனம் பெற்றது. அணியில் எந்த வீரருமே 35 ரன்களைக் கூட தாண்டாத நிலையில் அவர்களது பளுவையும் தனது தோளில் இறுதிவரை சுமந்ததும், அணியின் மொத்த ஸ்கோரில் 59.6% ரன்களை சேர்த்ததும் அவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி விட்டதையே தெரிவிக்கின்றன. அதுவும் வெறும் 23 வயது வீரரிடமிருந்து இத்தனை முதிர்ச்சி நிறைந்த ஆட்டம் வெளிப்பட்டிருப்பது இந்திய அணியின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது. 

இந்த இன்னிங்ஸின் போது பல சாதனைகளை கில் நிகழ்த்தினார். ஒருநாள் ஃபார்மட்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த (19 இன்னிங்ஸ்) இரண்டாவது வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக ரன்களைக் குவித்தவர் (186) என சச்சினின் வசமிருந்த சாதனை தற்போது கில்லின் கைகளுக்கு மாறியிருக்கிறது. சச்சின், சேவாக், ரோஹித், இஷான் ஆகியவர்கள் இருந்த இந்தியர்களுக்கான 200 ரன்கள் கிளப்பில் கில்லும் இணைந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரட்டைசதம் அடித்துள்ள எட்டு வீரர்களில் ஐவர் இந்தியர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்களுக்கு இரட்டைசதம் நியூ நார்மலாகி உள்ளது. அதிலும் குறைந்த வயதில் இரட்டைசதம் அடித்தவர் என இஷான் (24 வயது 145 நாட்கள்) நிகழ்த்தியிருந்த சாதனை ஒன்றரை மாதத்திற்குள்ளாகவே கில்லால் (23 வயது 132 நாட்கள்) முறியடிக்கப்பட்டுள்ளது.

இஷானின் சாதனையை முந்தியது சற்றே முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்தாண்டு இறுதியில் பங்களாதேஷுக்கு எதிராக இஷான் இரட்டைசதமடித்தது இந்தாண்டு இலங்கைத் தொடர்வரை எதிரொலித்தது. இஷானை பின்னுக்குத்தள்ளி கில்லுக்கு முன்னுரிமை தரப்படுவது குறித்து கேள்விக்கணைகள் பறந்தன. எனினும் கில்லின் சமீபத்திய சாதனைகள் அவருக்காக வாதாட, விளைவு அவருக்கான வாய்ப்பாக விரிந்தது. அதை கெட்டியாகப் பிடித்து ஒருநாள் ஃபார்மட்டுக்கான ஓடுதளத்தில் தனது விமானத்தை டேக்-ஆஃப் செய்தது மட்டுமின்றி உச்சகட்ட உயரத்தை நோக்கியும் பயணிக்க வைத்துள்ளார். இந்த இரட்டைசதம் இஷானோடு ஒப்பிட்டு அவரை விமர்சித்த அனைவரது வார்த்தைகளையும் மௌனிக்க வைத்துள்ளது.

உலகக்கோப்பைக்கான நாட்கள் கண்களில் தென்படத் தெரிந்திருக்கும் இச்சமயம் கில் அணியின் இன்றியமையாத் தேவையாகிறார். கில்லும் இஷானும் இருக்கும் அணியை அமைப்பதற்கான வழியைக்காண முனைய வேண்டுமே ஒழிய கில் இல்லாமல் ஒருநாள் அணி ஒருநாளும் அமைக்கப்படக்கூடாது. ஆக, ஒருநாள் போட்டிகளில் தவானின் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள கில், இஷானையும் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளார். 

இவற்றைக்கடந்து கில்லின் ஆட்டத்தில் சற்றே பின்னடைவை சந்திக்க வைப்பது பவர்பிளேயில் ரன்சேர்க்கத் தாமதிப்பதுதான். முதல் பத்து ஓவர்களில் சந்தித்த 30 பந்துகளில் 24-ஐ டாட் பால்கள் ஆக்கியிருந்தார்.

பவர்பிளேயில் டாட் பால்கள் பெரும்பாவம் என்பதை உணர்ந்து அங்கேயும் பந்துகளை வீணாக்காது கில் இனிவரும் போட்டிகளில் கவனம்செலுத்த வேண்டும்.

Gill

மொத்தத்தில் டி20 டெம்ப்ளேட்டுக்குள் தன்னை சிக்கவைக்கத் திணறினாலும் ஒருநாள் ஃபார்மட்டின் சட்டகத்துக்குள் கில்லின் ஆதிக்கம் வியாபிக்க தொடங்கியிருக்கிறது.

கில்லின் ஆட்டம் குறித்தும், உலகக் கோப்பைக்கு சரியான தேர்வாக இருப்பாரா என்பது குறித்தும் உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.